Published:Updated:

இனி போலியா சிரிச்சா மாட்டிக்குவீங்க பாஸ்! - வந்தாச்சு புதிய மென்பொருள்

ஒருவர் போலியாகச் சிரிக்கும்போது வாய்ப் பகுதியில் உள்ள தசை மட்டுமே அசையும்.

சிரிப்பு
சிரிப்பு ( Pixabay )

அனைத்து உயிரினங்களிலும் தனித்துவமான படைப்பு என்றால் அது மனிதன்தான். எந்த உயிரினங்களிடத்தும் இல்லாத, 'சிரிப்பு' என்ற குணாதிசயம் மனிதனிடம் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், அந்தச் சிரிப்பை நபருக்கு நபர் வேறுபடுத்தும் செயல் மனிதர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது.

சிரிப்பு
சிரிப்பு
Pixabay

உதாரணமாக, மனதுக்கு இணக்கமான நபர்களை, நண்பர்களை, உறவினர்களைப் பார்க்கும்போது முகத்தில் ஆத்மார்த்தமான சிரிப்பு வெளிப்படும். ஆனால் சிலரைப் பார்க்கும்போது சிரிக்க வேண்டுமே என்பதற்காகச் சம்பிரதாயமாக போலியாகச் சிரித்து வைப்போம்.

ஒருவரின் சிரிப்பு உண்மையானதா போலியானதா என்பதைக் கண்டறியும் கம்யூட்டர் மென்பொருளை இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த மென்பொருள் முதலில் ஒரு நபரின் முகத்தை வீடியோவாகப் பதிவுசெய்யும். அதற்குப்பிறகு அந்த நபரின் வாய், கன்னம், கண்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், அசைவுகளை வைத்து அது உண்மையானதா போலியானதா என்று கண்டறியும்.

சிரிப்பு
சிரிப்பு
Pixabay

இந்த ஆராய்ச்சியில் தலைமை வகித்த பேராசிரியர் ஹசன் யுகேயில் கூறும்போது, ''உண்மையான சிரிப்புக்கும் போலியான சிரிப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்கள் பகுதியில் உள்ள தசைகளின் அசைவில் காணப்படும் மாற்றங்களை வைத்து வேறுபடுத்த முடியும். சிரிக்கும்போது கண்கள் பகுதியில் இருக்கும் தசைகளே அதிகபட்சமான வேறுபாட்டைக் காண்பிக்கும்.

இயல்பாக, உண்மையாகச் சிரிக்கும்போது கண்களின் அருகில் உள்ள தசைகளில் கூடுதலாக 10 சதவிகிதம் அசைவு காணப்படும். அதுபோன்று வாய்ப் பகுதியில் சுருக்கத்தை ஏற்படுத்தும் தசையின் அசைவிலும் வித்தியாசம் காணப்படும். ஒருவர் போலியாகச் சிரிக்கும்போது வாய்ப் பகுதியில் உள்ள தசை மட்டுமே அசையும்.

சிரிப்பு
சிரிப்பு
Pixabay

முகத்தில் நிகழும் பல்வேறு அசைவுகளைக் கண்காணித்து அது உண்மையான சிரிப்பா அல்லது போலியானதா என்பதை இந்த மென்பொருள் கண்டுபிடிக்கும்'' என்கிறார் அவர். மனித உணர்வுகள், நடத்தை போன்றவை குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.