Published:Updated:

கொரோனா: காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்! - ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

நெரிசலான, காற்றோட்டம் இல்லாத இடத்தில் காற்று வழி கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவும். இதற்கான தெளிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த நோய் காற்றினால் பரவும் என்பது நிரூபிக்கப்பட்டால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள சில பாதுகாப்பு முறைகளை மாற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதுபோல், அந்த வைரஸ் பற்றிய புதிய புதிய தகவல்களும் நாளுக்குநாள் நம்மை பீதிக்குள்ளாக்கும்விதம் வந்துகொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் காற்றில் ஒரு மணி நேரம்வரை உயிருடன் இருக்கும் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

2020-ம் ஆண்டின் பெரும்பகுதியை நாம் கொரோனாவுடனே கடந்துகொண்டிருக்கிறோம். இந்தநிலையில்தான், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய் நிபுணர் வெண்டி பார்க்லே கொரோனா வைரஸ் காற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருக்கும் எனப் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

`கோவிட்-19 வைரஸ் காற்று மூலம் பரவலாம்!’ - ஒப்புக்கொண்ட உலக சுகாதார நிறுவனம்

இதுகுறித்து பி.பி.சி-க்கு அவர் அளித்த பேட்டியில், ``உலக சுகாதார மையம் இந்த நோய் காற்றில் பரவும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. கண்டிப்பாக இது மற்ற பரவல் முறைகளினாலும் பரவும். இந்த நோய்க்கிருமியானது காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். யாரால் சுவாசிக்கப்படுகின்றதோ அவருக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். இதை நாங்கள் எங்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளோம். காற்றை மறுசுழற்சி செய்யும் ஏர் கண்டிஷனர் மூலம் இந்த நோய் அதிகமாகப் பரவம். காற்றோட்டமான இடத்தில் தங்குவதால் இந்த நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்” என்றார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

நெரிசலான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் காற்று வழி கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவும். இதற்கான சான்றுகள் குறித்து இன்னும் தெளிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த நோய் காற்றினால் பரவும் என்பது நிரூபிக்கப்பட்டால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள சில பாதுகாப்பு முறைகளை மாற்ற வேண்டும் என முன்னதாகவே உலக சுகாதார மையத்தின் தொற்று தடுப்பு தலைவர் பெனெடெட்டா அலக்ரான்சி கூறியிருந்தார்.

நாளுக்குநாள் அச்சத்தைக் கிளப்பும்வகையில் இப்படிப்பட்ட தகவல்கள் வெளிவருவது ஒருபக்கம் இருக்கட்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமே இப்போதைக்கு உயிர்காக்கும் முக்கிய விஷயம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

அடுத்த கட்டுரைக்கு