பரவும் புதிய வகை கொரோனா வைரஸ், அதிகரிக்கும் நோயாளிகள்... கட்டுப்பாடுகள் விதித்த பிரிட்டன்!

இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது என்னும் இந்த அறிக்கை பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
உலகம் முழுவதும் கோவிட் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அண்மையில்தான் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தச் செய்தியால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தவர்களுக்குத் தற்போது உலக சுகாதார நிறுவனம் (WHO) அளித்திருக்கும் செய்தி சிறு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது என்னும் இந்த அறிக்கை பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்ததை அடுத்து இன்று முதல் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகளை அந்த அரசு விதித்துள்ளது.
இதற்கு காரணம் தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் தன்மையே என்கிறார் இங்கிலாந்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹேன்காக். நேற்று இங்கிலாந்து எம்.பி.களின் அவையில் பேசிய அவர், ``இங்கிலாந்தில் வேகமாகத் தொற்று பரவுவதற்குப் புதிய வகை கொரோனா வைரஸே காரணம்” என்று குறிப்பிட்டார். இதையொட்டி புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மைக்கேல் ரேயான், ``புதிதாக கொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஆயிரம் பேரிடம் காணப்படுகிறது. இதுபோன்று மாற்றமடைந்த வகைகள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். வைரஸ் நாளுக்கு நாள் பரிணாமம் கொண்டு மாறிக்கொண்டேயிருக்கிறது. இங்கிலாந்தில் காணப்படும் இந்தப் புதியவகை, புதிய சிக்கல்கள் ஏதும் உருவாக்கும் என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
- காயத்ரி கணேஷ்