ஒமிக்ரான் வேரியன்ட்டால் ஏற்பட்ட தாக்கம் சற்று குறைந்து உலகம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸின் அடுத்தடுத்த வேரியன்ட்டுகளின் பரவும் வேகம் கூடுதலாக இருப்பதுடன் வீரியமும் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்துப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியில் நிபுணரும் கோவிட்-19 தொற்றின் தொழில்நுட்ப தலைவரான மருத்துவர் மெரியா வான் கெர்கோவே, ``கொரோனா வைரஸின் அடுத்த வேரியன்ட் (உருமாற்றமடைந்த வைரஸ்) முந்தைய வேரியன்ட்டுகளை ஒப்பிடுகையில் பரவும் வேகம் அதிகம் உள்ளதாகவே இருக்கும்.
இப்போது பரவிக்கொண்டிருக்கும் வேரியன்ட்டுகளின் வேகத்தை முந்தும் விதத்திலேயே அது உருமாற்றம் அடையும். ஆனால் இதுதொடர்பாக இருக்கும் பெரிய கேள்வி, `அதன் வீரியம் அதிகமாக இருக்குமா?' என்பதுதான். அடுத்தடுத்த வேரியன்ட்டுகள் நிச்சயம் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகம் பாதிக்கவே செய்யும்.
அதனால் வைரஸின் மீது தடுப்பூசிகளின் ஆற்றல் குறையலாம். எனவே, அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். ஏனெனில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தீவிர பாதிப்பு, மரணம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஒமிக்ரான் பரவலின் போதே இதை நம்மால் உணர முடிந்தது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வருங்காலத்தில் கோவிட் 19 தொற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றே எதிர்பார்க்கிறோம்.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும், குறைந்த எதிர்ப்பாற்றல் உள்ளவர்களுக்கும் மட்டுமே அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டே இருப்பதால் அது எப்போது வலுவிழக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என கூறுகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் முதலில் அறியப்பட்ட ஒமிக்ரான் வேரியன்ட், உலகில் பல நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. முந்தைய வேரியன்டான டெல்டாவைவிட வீரியம் குறைவாக இருந்தாலும் ஒமிக்ரானின் பரவும் வேகம் டெல்டாவைவிட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.