`பாரசிட்டமால் மாத்திரைகளை விற்கத் தடையில்லை!’ - நீதிமன்றத்தில் தமிழக அரசு

சமீபகாலமாக பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்களில் மக்கள் வாங்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் காய்ச்சல், சளி, தலைவலி ஆகியவற்றிற்கு பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டுவந்த பாரசிட்டமால் மாத்திரைகளை, மருந்தகங்கள் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால்,`காய்ச்சல், சளி தொந்தரவு இருந்தால், அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கொடுக்கக் கூடாது என அரசு கூறியுள்ளது’ என மருந்தகங்களில் கூறினர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜோயல் சுகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார், அதில், ``மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை விதிப்படி, அவற்றை வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கலாம். பாரசிட்டமால் மாத்திரையும், அவ்விதியின் கீழ் வருகிறது. வலி நிவாரணியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகவும் பாரசிட்டமால் மாத்திரை இருக்கிறது.
அதனால், மருத்துவரின் பரிந்துரை இன்றி அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், தற்போது மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரையைக் கேட்டால், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அப்படி விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்களில் வழங்கவும், தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் தமிழக அரசு உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஜோயல் சுகுமார்.

மனுவானது, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்கள் வழங்கக் கூடாது என்பது போன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.