Published:Updated:

உடலின் இயல்பு வெப்பநிலை 98.6° F-லிருந்து 97.7° F ஆகக் குறைந்திருப்பது நல்லதா? - மருத்துவர் விளக்கம்

தெர்மாமீட்டர்
தெர்மாமீட்டர்

நமது உடலின் இயல்பு வெப்பநிலையை 98.6° F-லிருந்து 0.9° F அளவு குறைத்து, இப்போது 97.7° F எனக் கணக்கிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.

'குழந்தைக்கு உடம்பு சுடற மாதிரி இருக்கே...' என்றபடி தெர்மாமீட்டரை எடுத்து குழந்தைக்கு வைத்துப் பார்த்துவிட்டு, '98.6°F தான் இருக்கு' என்று திருப்தியாக குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே... காய்ச்சலின் அளவு இப்போது மாறிவிட்டது தெரியுமா..? அதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தெர்மாமீட்டர்
தெர்மாமீட்டர்

மனித உடலின் வெப்பநிலை, ஃபாரன்ஹீட் (°F) அல்லது செல்சியஸ் (°C) என்ற அளவீடுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது என்பதும், நமது உடலின் சராசரி வெப்பநிலை 98.6°F அல்லது 37°C என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நமது உடலின் இந்த இயல்பு வெப்பநிலையை 98.6° F-லிருந்து 0.9° F அளவு குறைத்து, இப்போது 97.7° F எனக் கணக்கிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.

97.7° F
இனி இதுதான் நார்மல் டெம்பரேச்சர்
ஆக... இன்றைய நிலையில், இதுவரை நார்மல் டெம்பரேச்சராக இருந்த 98.6°F என்பதே இனி காய்ச்சல் என்றாகிவிடுகிறது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

இப்படி உடலின் இயல்பு வெப்பநிலையைக் குறைத்திருப்பதில், வியாபார நோக்கம் உள்ளதா அல்லது வேறு எதுவுமா என்பதைப் பார்க்கும் முன், இந்த 98.6°F எப்படி நார்மல் டெம்பரேச்சர் ஆனது என்பதைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ஹைபர்தெர்மியா
ஹைபர்தெர்மியா

உடலின் வெப்பநிலை 98.6°F அல்லது 37°C என்ற அளவைக் காட்டிலும் அதிகரிப்பதும் குறைவதும் இயல்பானதல்ல. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையை, காய்ச்சல் எனப் பொதுவாக நாம் அழைக்கும்போதிலும், அதிக வெப்பநிலை சாதாரணக் காய்ச்சலாகவோ, ஹைபர்தெர்மியா (Hyperthermia) என்ற தீவிர நிலையாகவோ இருக்கக்கூடும். அதேபோல், உடலின் வெப்பநிலை குறைவதை, நாம் குளிர் நிலை என்று பொதுவாக அழைக்கும்போதிலும், அது சாதாரண குளிராகவோ, ஃப்ராஸ்ட் பைட் (Frost Bite) என்ற தீவிர நிலையாகவோ இருக்கக்கூடும்.

இத்தனை வருடங்களாக இவ்வாறு நமக்குப் பரிச்சயமான இந்த வெப்பநிலையின் அளவுகள், ஏன் இப்போது மாறிவிட்டது என்பதை அறிய, உடலின் வெப்பநிலை எப்போதெல்லாம் மாறுபடுகிறது என்பதையும், வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திட உதவும் உடலியக்க வழிமுறைகளையும் நாம் முதலில் அறிவது அவசியமாகிறது.

Biological Thermometer
Biological Thermometer

இயல்பாகவே நமது உடலின் வெப்பநிலை அதிகாலையில் (6 மணியளவில்), அதாவது நல்ல ஓய்வுக்குப் பிறகு குறைந்தும், மாலைப்பொழுதில் (4 - 6 மணியளவில்), அதாவது தொடர்ந்து பணிபுரிந்த பிறகு, சற்று அதிகமாகவும் காணப்படும்.

உடலின் வெப்பநிலையை, நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் அதன் செரிமானம், தைராய்டு, அட்ரீனலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு, நமது தசைகளின் பயன்பாடு, உடலின் கொழுப்பு சதையின் அளவு மற்றும் வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை நிர்ணயிக்கின்றன
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

இவற்றுள் முக்கியமாக நமது மூச்சு, வியர்வை, சிறுநீர் மற்றும் தோலின் பரப்பளவு கூலிங் சிஸ்டங்கள் நம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன என்றாலும், இவை அனைத்தையும் தீர்மானிப்பது நமது மூளை என்ற தலைமைச் செயலகத்தின் ஹைப்போதலாமஸ் பகுதியில் உள்ள வெப்பநிலை சென்சார்கள்தான் (Thermal Sensors). அதனால்தான், ஹைப்போதலாமஸ் உயிரியல் வெப்பமானி (Biological Thermometer) என்று அழைக்கப்படுகிறது..

கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?
Biological Thermometer
Biological Thermometer

எப்போதெல்லாம் உடலின் வெப்பநிலை இயல்பாகவோ, நோய்களாலோ மாறுபடுகிறதோ, அப்போதெல்லாம் இந்த பயாலாஜிக்கல் தெர்மாமீட்டர்தான் மற்ற உடல் உறுப்புகளை இயக்கியோ, முடக்கியோ உடலின் வெப்பநிலையை சீராக்கிப் பராமரிக்கிறது.

Conduction, Convection & Radiation என நாம் நன்கறிந்த வெப்பம் கடத்துதல், வெப்பச்சலனம் மற்றும் வெப்பம் ஆவியாதல் ஆகியவற்றின் வாயிலாக நமது உடலின் வெப்பநிலை சீரமைக்கப்படுகிறது. இந்தச் சீரமைப்பு துடிப்பான நடுத்தர வயதினரைவிடக் குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே சற்று குறைவாகக் காணப்படுவதும் இயல்பான ஒன்றுதான்.

சரி... உடலின் இயல்பு வெப்பநிலையை 98.6°F அல்லது 37°C தான் என எப்படி நிர்ணயித்தார்கள் என்றால், அதற்கு நாம் 150 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்கிறது மருத்துவ வரலாறு.
1851-ம் ஆண்டுதான், 98.6°F என்ற அளவு, நார்மல் டெம்பரேச்சராக அறிவிக்கப்பட்டது.

'கார்ல் ரைன்ஹோல்ட்' என்ற ஜெர்மானிய விஞ்ஞானி முதன்முதலில் வெப்பமானியைக் கண்டறிந்தபோது, ஏறத்தாழ 25,000 நபர்களின் உடல் வெப்பநிலையைப் பல்லாயிரக்கணக்கான முறை, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாக சோதனை செய்தார். பின்னர், ஆராய்ச்சியாளர்களால் 1851-ம் வருடம், மனிதர்களுக்கு 98.6°F தான் ஸ்டாண்டர்ட் வெப்பநிலை அளவு என்று அறிவிக்கப்பட்டது. இதுவே ஒரு தோராயமான முடிவுதான் என்றாலும் இதுதான் மிகவும் பொருந்திவரக்கூடியது என்பதால், இந்த ஸ்டாண்டர்ட் அளவு இத்தனை வருடங்களாக மருத்துவ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படியிருக்க, இப்போது ஏன் உடலின் வெப்பநிலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மனிதனின் உடலியல் முன்புபோல் இல்லாமல் தொடர்ந்து மாறி வருவதன் விளைவுதான் என்று கூறும் மருத்துவ அறிவியல், கூடவே, இப்படிக் குறைத்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க மாற்றம் என்று கூறுவதுடன் அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் வெப்பநிலை அளவு
ஸ்டாண்டர்ட் வெப்பநிலை அளவு

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மனித உடலின் வெப்பநிலை சராசரியாக, 0.05°F அளவு குறைந்து வருகிறது. தற்கால மனிதனின் உடல் உயரமும் ஆரோக்கியமும் முன்பைவிட அதிகரித்துள்ளது என்பதாலும், உடலின் வளர்சிதை மாற்ற வினைகள் குறைந்து வருவதாலும் உடலின் வெப்பநிலை குறைந்துள்ளது என்கிறது, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்.

காய்ச்சலின் அளவு குறைந்துள்ளதென்பது, மனிதனின் ஆரோக்கியம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதற்கான குறியீடு!
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

இன்னும் சற்று விளக்கமாகக் கூற வேண்டுமென்றால், மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றல் முன்பைவிட அதிகரித்து, அதன் விளைவாகக் காசநோய், அம்மை நோய் போன்ற பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதால், இவற்றின் காரணமாக ஏற்படும் செல் வீக்கங்களும் வளர்சிதை மாற்றங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பல்வேறு நோய்களுக்குத் தடுப்பூசிகள், புதிய மருந்துகள், பெருகி வரும் மருத்துவ உபகரணங்கள் என மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகள் மட்டுமன்றி, தனிமனிதனின் சுகாதாரமும் பெருமளவு மேம்பட்டுள்ளதால்தான் இந்த மாற்றம் உருவாகி உள்ளது.

தெர்மாமீட்டர்
தெர்மாமீட்டர்

ஆக, மனிதனின் ஆரோக்கியம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதற்கான ஒரு குறியீடுதான், காய்ச்சலின் அளவு குறைந்துள்ள இந்த ஆய்வறிக்கை. அப்படியென்றால், 98.6° F என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டபோது, மனிதனின் நோய்த்தொற்று விகிதமும், வளர்சிதை மாற்றங்களின் அளவும் இருந்ததைவிட இப்போது குறைந்து ஆரோக்கியம் உயர்ந்துள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.

சளி, காய்ச்சல், கண் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

முதலில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் அளவைப்போலவே, இப்போதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு மக்களிடம், பல்வேறு சூழ்நிலைகளில் 2007 முதல் 2017-ம் ஆண்டுவரை, பல்லாயிரக்கணக்கான மக்களை பரிசோதித்து, அவற்றை முந்தைய லட்சக்கணக்கான அளவீடுகளோடு பகுத்தாய்ந்து, அதன் பிறகுதான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறுகிறது இந்த ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ ஆய்வு.

தெர்மாமீட்டர்
தெர்மாமீட்டர்

அனைத்துக்கும் மேலாக, நம் உடலின் இயல்பு வெப்ப நிலையைத்தான் 97.7° F எனக் குறைத்திருக்கிறதே தவிர, 98.6° F என்ற பழைய அளவைக் காய்ச்சல் என்றோ, அதற்கு மருத்துவம் பார்க்கச் சொல்லியோ, காய்ச்சலின்போது நாம் பயன்படுத்தும் காய்ச்சல் மருந்துகளின் அளவுகளிலோ, அதன் சிகிச்சை முறைகளிலோ எந்த மாற்றங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதால், இது வியாபாரத்திற்கான குறியீடு அல்ல, நமது ஆரோக்கியம் வளர்ந்திருப்பதற்கான அறிவிப்புக் குறியீடு என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

புவி வெப்பமடைதல், புதிய வகையான தொற்றுநோய்கள் என அன்றாடம் நாம் கலங்கி நிற்கும் இச்சமயத்தில், நமது ஆரோக்கியத்தின் குறியீடுகளுள் ஒன்றாக 97.7°F என்று காய்ச்சலின் சூட்டைக் குறைத்திருக்கும் இந்தச் செய்தி நமக்கான குளிர்ச்சியான செய்திதான் என்று புரிந்துகொண்டு இதை நாம் வரவேற்போம்.

ஏனெனில், மாற்றம் ஒன்றுதான் மாறாதது!
அடுத்த கட்டுரைக்கு