Published:Updated:

Novavax Explained: இந்தியாவிற்குப் பயன் தருமா புதிய தடுப்பூசி?!

Novavax | நோவாவாக்ஸ் தடுப்பூசி
Novavax | நோவாவாக்ஸ் தடுப்பூசி

Novavax தடுப்பூசி கொரோனா தொற்றை தடுப்பதில் 90.4% திறன் கொண்டது என மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் சொல்கின்றன. உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவும்போதுதான் இதன் சோதனைகள் நடைபெற்றன.

முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையின் முடிவு கண்ணுக்குத் தெரியும் இந்த நேரத்தில் மூன்றாம் அலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் பெருந்தொற்றை வென்றெடுக்க மனிதனிடம் தற்போது இருக்கும் ஒற்றை பேராயுதம் தடுப்பூசிதான். கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் நமக்கு எடுத்துச்சொல்வது அதைத்தான்.

ஆனால், துணைக்கண்டம் என அழைக்கப்படும் இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதென்பது பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. அவ்வப்போது தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் பார்க்கிறோம். இருந்தும், 2021 முடிவதற்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என நம்பிக்கையுடன் இருக்கிறது இந்திய அரசு. காரணம், தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் அல்லாமல் இன்னும் பல தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால்தான்.

நோவாவாக்ஸ் தடுப்பூசி
நோவாவாக்ஸ் தடுப்பூசி
நோவாவாக்ஸ் தடுப்பூசி
அதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் தயாரித்திருக்கும் தடுப்பூசி.

இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்திருக்கின்றன. அதன் முடிவில் இது கொரோனா தொற்றைத் தடுப்பதில் 90.4% திறன் வாய்ந்தது (efficacy) என்பது தெரியவந்திருக்கிறது. 'NVX-CoV2373' எனப்படும் இந்தத் தடுப்பூசி கோவாவாக்ஸ் (Covavax) என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இது மிதமான மற்றும் தீவிர நோய்க்கு எதிராக 100% பாதுகாப்பு தருகிறது என அறிவித்திருக்கிறது நோவாவாக்ஸ் நிறுவனம். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடந்த இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 29,960 பேர் பங்குகொண்டனர். உருமாறிய கொரோனா வைரஸ்கள் (டெல்டாவைத் தவிர்த்து) பரவும்போதுதான் இதன் சோதனைகள் நடந்தது என்பதால் இந்த தடுப்பூசி அவற்றுக்கு எதிராகவும் நல்ல பயனைத் தருகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு அதிக திறன் காட்டிய ஃபைஸர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட சோதனைகள் கொரோனா முதல் அலையின்போதே நடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவாவாக்ஸ் தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்தால் போதும். அதாவது வீடுகளில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டிகளே இதைப் பாதுகாக்க போதுமானது. அதனால், அதிக அளவில் கொள்முதல் செய்வதில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி குறித்து அதிகமாகப் பேசப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் இந்தத் தடுப்பூசியையும் பெருமளவில் தயாரிக்கவிருப்பது புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாதான்.

சோதனை முடிவுகளை உறுதிசெய்ய இங்கும் bridge trials நடத்தப்பட்டு வருகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் கோவாக்ஸ் (COVAX) அமைப்பிற்கும் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்துத் தரும். உலக சுகாதார அமைப்பின் தொண்டு நிறுவனமான கோவாக்ஸ், வருமானம் குறைவாக இருக்கும் நாடுகளுக்கு (lower and middle-income countries, LMIC) இந்தத் தடுப்பூசிகளை விநியோகம் செய்யும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Steven Senne
விரைவில் ஒப்புதல்..!
நோவாவாக்ஸ் நிறுவனம் விரைவில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம், ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் செயலாண்மை மற்றும் இங்கிலாந்தின் MHRA அமைப்புகளின் அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரவுள்ளது.

இந்தத் தடுப்பூசியைப் பெருமளவில் உற்பத்தி செய்யப்போகும் இந்தியா மற்றும் தென் கொரியாவில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது நோவாவாக்ஸ். தற்போது இந்தியாவில் 20 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,400 தன்னார்வலர்களிடம் சோதனை செய்யப்படவிருக்கிறது இந்தத் தடுப்பூசி. ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை சுமார் 20 கோடி டோஸ் கோவாவாக்ஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது இந்தியா அரசு. இன்னும் முழுமையான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.

விலை?!

ரூ.1,114 என்கிற விலையில் இந்தத் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே நோவாவாக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவாக்ஸ் நிறுவனத்திற்கு 110 கோடி டோஸ்கள் தயாரித்துத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இது இல்லாமல் Gavi என்ற அமைப்புடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஏழை நாடுகளே பெருமளவில் இந்தத் தடுப்பூசியால் பயன்பெறப்போகின்றன. ஏற்கெனவே பெருமளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்ட வளர்ந்த நாடுகளில் இவை பூஸ்டர் டோஸ்களாக அடுத்த ஆண்டு கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதற்கான சோதனைகளும் (mixed dose trials) தொடங்கியிருக்கின்றன.

ஏற்கெனவே கோவிட் வந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லையா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?

டெல்டா வேரியன்ட்டுக்கு எதிரான செயல்பாடு?!

COVID India
COVID India
(AP Photo/Manish Swarup)

முன்பு சொன்னது போல உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத்தொடங்கிய பிறகுதான் (ஜனவரி 25 - ஏப்ரல் 30) இதன் மூன்றாம் கட்ட சோதனை நடைபெற்றது. ஆனால், இந்தியாவில் தற்போது அதிகம் பரவிவரும் டெல்டா வேரியன்ட் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்ட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பெரிதாகக் காணப்படவில்லை. அங்கு பரவலாகப் பரவிவரும் ஆல்ஃபா மற்றும் பிற வேரியன்ட்களுக்கு எதிராக நல்ல செயல்பாட்டைக் காட்டியிருக்கிறது நோவாவாக்ஸின் தடுப்பூசி. மேலும், தற்போது இந்தச் சோதனைகளில் பங்குபெற்ற 29,960 தன்னார்வலர்களில் வெறும் 5% பேர் மட்டுமே ஆசிய அமெரிக்கர்கள். இந்தியர்களும் இந்தப் பிரிவில்தான் வருவார்கள். இதனால், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிட்ஜ் ட்ரையல்ஸில்தான் டெல்டா வேரியன்ட்டுக்கு எதிரான திறன் என்ன, இந்தியர்களுக்குப் பலன் தருமா போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் கிடைக்கும்.

நோவாவாக்ஸ் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் விகே.பால். விரைவில் குழந்தைகளுக்கு இது எந்த அளவில் பயன் தருகிறது என்பதும் ஆய்வு செய்யப்படும். தற்போதைய சூழலில் அதுவும் மிகவும் அவசியமானதாகிறது.
அடுத்த கட்டுரைக்கு