Published:Updated:

`COVID - 19' - கொரோனா வைரஸின் புதிய பெயருக்கு `WHO' சொல்லும் விளக்கம்

கோவிட் - 19
கோவிட் - 19

கோவிட் - 19 எனப் பெயர் வைக்கப்பட்ட நாவல் கொரோனா!

உலகை அச்சுறுத்திவரும் நாவல் கொரோனா வைரஸ், வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்திவருகிறது. நேற்றைய தினம் மட்டும், நாவல் கொரோனாவால் இறந்தவர்கள் 108 பேர். இதுவரை இறந்தவர்கள் 1000 பேருக்கும் அதிகம். கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சீனாவுக்கு விரைந்தது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ்
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ்

நேரடியாக சீனா சென்று, கள நிலவரம்குறித்து அறிந்துகொண்ட பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள். அதில், ``நாவல் கொரோனாவுக்கு எதிராக உலகம் மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்ட இயக்குநர் டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ் (Tedros Adhanom Ghebreyesus), தொடர்ந்து, இந்த நாவல் கொரோனாவுக்கான பெயரையும் வெளியிட்டுள்ளார். அதன் பெயர், COVID - 19.

நாவல் கொரோனா என்பதே பெயர்தானே எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், நாவல் என்ற வார்த்தையின் பொருள், `புதிய' என்பதுதான். பாதிப்பு ஏற்படத் தொடங்கிய முதல் சில தினங்களில், இதை எப்படிக் குறிப்பிடுவது என்று அறியாத உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், இதை 'நாவல் (புதிய) கொரோனா' எனக் குறிப்பிட்டனர்.

இப்போது, நாவல் கொரோனாவுக்கு இடப்பட்டுள்ள பெயரான கோவிட் - 19 (COVID - 19), எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரையோ, விலங்கின் பெயரையோ குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ளார் கெப்ரேயேஸஸ். இதில், தாங்கள் மிகக் கவனமாக இருந்ததாகவும், அதனாலேயே பெயர் வைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் அவர்.

இந்தப் பெயரில் வரும் CO என்பது, கொரோனாவின்(Corona) முதல் இரு எழுத்துகளையும், VI என்பது வைரஸின் (Virus) முதல் இரு எழுத்துகளையும், D என்பது நோயின் (Disease) முதல் எழுத்தையும் குறிப்பதாக விளக்கம் தந்தார். இறுதியாக உள்ள 19 என்ற எண், வைரஸ் கண்டறியப்பட்ட வருடத்தைக் குறிப்பது.

கொரோனா வைரஸ்  தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

டிசம்பர் 31, 2019 - ம் தேதியே உலக சுகாதார நிறுவனத்துக்கு வைரஸ் குறித்த தகவல்கள் வந்துவிட்டதால், அந்த ஆண்டையே அவர்கள் பெயரில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு