Published:Updated:

மன அழுத்தமா... சட்டென்று விலக 3 சூப்பர் வழிகள்! #Destress

மனஅழுத்தம் போக்க டிப்ஸ்!
மனஅழுத்தம் போக்க டிப்ஸ்!

உடல்நலம் மனநலம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. ஒன்று பாதிக்கப்படும்போது தானாகவே இரண்டாவதும் பாதிக்கப்படும்.

கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவால் உடல்நலப் பிரச்னைகளுடன் மனநலப் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஆய்வில் இந்தியாவில் மார்ச் மாதத்தில் முதல் லாக்டௌன் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மக்கள் மத்தியில் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Nutritionist Sheela krishnasamy
Nutritionist Sheela krishnasamy

நோய் பற்றிய பதற்றம், வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு எனப் பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் மத்தியில் மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாம். மனஅழுத்தம் தரும் காரணிகள் அதிகரித்தாலும் மனதைத் திடமாக வைத்துக்கொண்டு, பாசிட்டிவ்வாக பிரச்னைகளைக் கடக்க முயன்றால், உடல்நலத்துடன் மனநலமும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல்நலம் மனநலம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. ஒன்று பாதிக்கப்படும்போது தானாகவே இரண்டாவதும் பாதிக்கப்படும்.

மனஅழுத்தத்தை எளிதாகப் போக்குவதற்கான 3 ஆலோசனைகளை அளிக்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி.

ஆரோக்கியமான உணவு!

Almonds
Almonds

சரியான உணவைச் சாப்பிடுவது என்பது மனநலம், உடல்நலத்திற்கு மட்டுமல்ல; உணர்வுகளுக்கும் நல்லது. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் உணவுப்பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவில் முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பால் பொருள்கள், முட்டை, இறைச்சி என அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டால் உடல்நலம், மனநலம் இரண்டும் மேம்படும்.

ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்கும்போது ஆரோக்கியமில்லாத நொறுக்குத்தீனிகள், உணவுகளை அதிகம் சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனம் சோர்வாக இருக்கும்போது பழங்கள், முளைகட்டிய தானியங்கள், பாதாம், ஆம்லெட், ஒரு துண்டு டார்க் சாக்லேட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் பாதாம் பருப்பைத் தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கு மனஅழுத்தத்தின்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ரத்தக்குழாய்களினுள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது ஒரு கை நிறைய பாதாம் பருப்பு அல்லது ஏதாவது ஒரு பழம் அல்லது ஒரு கிண்ணம் நிறைய சாலட் சாப்பிடலாம். பிஸ்கட், வேஃபர்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.

மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி!

Yoga
Yoga

உடற்பயிற்சி மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்! உடற்பயிற்சி செய்யும்போது சோர்வு குறைந்து, விழிப்புநிலை மற்றும் கவனக் குவிப்பு அதிகரிக்கிறது. மூளையின் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. அதுதவிர, நல்ல தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல் போன்ற பல்வேறு நல்ல விஷயங்கள் உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும்.

ஜிம்முக்குப் போவது, வெளியில் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் இவை மட்டும்தான் உடற்பயிற்சி என்றில்லை. வீட்டிலேயே யோகா, தரையில் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சிகள், மாடிப்படிகளில் பலமுறை ஏறி இறங்குவது இவையும் உடற்பயிற்சிகள்தான்.

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியைச் செய்ய விரும்பினால் வெர்ச்சுவல் ஸூம்பா நடனம், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து உடற்பயிற்சி செய்வது, வீட்டிலிருப்பவர்களுடன் குழுவாக இணைந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை முயலலாம். உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும்.

ஸ்க்ரீன் டைமைக் குறைக்க வேண்டும்!

screen time
screen time

காலையில் எழுந்ததிலிருந்து அடுத்த நாள் காலைக்கு அலாரம் வைத்துத் தூங்குவது வரை ஒருநாளில் பல மணி நேரத்தை மொபைலிலோ கணினியிலோ செலவழிக்கிறோம். கேட்ஜெட்டுகளில் நீண்ட நேரத்தைச் செலவிடுவதும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.

ஸ்க்ரீன் டைமைக் குறைப்பதற்கு அடிக்கடி சிறிய பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் அறையைச் சுத்தம் செய்வது, செல்லப் பிராணியுடன் விளையாடுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வது போன்றவை மனதை மட்டுமன்றி நரம்புகளையும் அமைதிப்படுத்தும்.

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கேட்ஜெட் பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள். அதேபோன்று காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே கேட்ஜெட்டுகளை கையிலெடுங்கள்.

கேட்ஜெட் பயன்பாட்டைக் குறைப்பதற்கு அவற்றை உங்கள் படுக்கையறையிலிருந்து மாற்றி வேறு அறையில் வைப்பதுதான் ஒரே வழி. வார இறுதி நாள்களில் விடுப்பு கிடைக்கும்போது புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள் அல்லது கிராஃப்ட் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, கிச்சனில் புதிய உணவை முயற்சி செய்துபார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு