Published:Updated:

உடல் பருமன் குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கலாம்... எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவரின் தீர்வுகளும்!

குழந்தை
குழந்தை

குழந்தைகளின் ரத்த மாதிரி, மூளையின் ஸ்கேன் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில்... அதிக உடல் எடை, குழந்தைகளைப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் பின்தங்க வைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

"ருமனாக இருப்பவர்கள் ஒல்லியாக இருப்பவர்களைப் போல் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். அதிக உடல் எடை உள்ளவர்களிடம் எப்போதும் ஒரு மந்தநிலை காணப்படும்" என்ற கருத்து சமூகத்தில் நிலவிவரும் நிலையில், இதைப் பற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

குழந்தை
குழந்தை

அமெரிக்காவில் உள்ள ஜமா குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், வெர்மான்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. இதில், சாதாரண எடை கொண்ட குழந்தைகளோடு ஒப்பிடுகையில், பருமனான குழந்தைகளுக்குத் தங்கள் வேலையைப் பற்றிய நினைவாற்றல் குறைவாக உள்ளது எனவும், இவர்கள் அதிக கவனச் சிதறலுக்கு உட்படுகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளன.

பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளுக்கு வருகிறது தடை!

உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளுக்குப் பெருமூளை புறணி எனப்படும் 'ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ்' சாதாரண உடல் எடை கொண்ட குழந்தைகளுக்கு உள்ளதைவிட மிகவும் மெலிந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 'ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ்' எனப்படும் பெருமூளையின் பகுதி, நாம் வேலை செய்யும்போது நினைவாற்றலைப் பராமரிப்பதிலும், கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. குழந்தைகளின் ரத்த மாதிரி, மூளையின் ஸ்கேன் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக உடல் எடை, குழந்தைகளைப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் பின்தங்க வைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை
குழந்தை

இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசிய போது...

"கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைவுள்ள, ஒல்லியான குழந்தைகளே அதிகம் காணப்படுவார்கள். ஆனால் தற்போது, அதற்கு நேரெதிராகப் பருமனான குழந்தைகளே அதிகம் காணப்படுகிறார்கள்.

இதற்குப் பல காரணிகள் உள்ளன. எல்லா விதத்திலும் வசதிகள் பெருகிக்கொண்டே வருவதும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். உடல் செயல்பாடுகள் என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. எல்லாவற்றிலும் நவீன வசதிகள் வந்தபிறகு, அவற்றைப் பயன்படுத்தவே அவர்களும் விரும்புகிறார்கள். இதனால் சாப்பிடும்போது உடலில் சேரும் கலோரிகள் அப்படியே இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு உணவில் கலோரிகளை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் உழைப்பும் அவசியம். இது, தற்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பெல்லாம், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைவாங்குவார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பெற்றோரை வேலைவாங்கும் நிலை வந்துவிட்டது.

குழந்தைநல மருத்துவர் கண்ணன்
குழந்தைநல மருத்துவர் கண்ணன்

உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணம் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள். குழந்தைகள், உணவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குப்பை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் இவற்றை வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம். பெரும்பாலும், அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் குழந்தைகளுக்கு ரெடிமேட் உணவு வகைகளைச் சமைத்துத் தருகின்றனர். அவை உடல் எடையை அதிகரிப்பதுடன், பல நோய்களுக்கும் காரணமாகின்றன.

குடும்பங்களின் அளவு சிறியதாகி வருவதும் குழந்தைகளின் எடை பெருகுவதற்கு முக்கியக் காரணம். கூட்டுக் குடும்பமாக இருக்கையில், ஒரு குடும்பத்தில் பத்துக்குக் குறையாமல் குழந்தைகள் இருப்பார்கள். எந்த உணவாக இருந்தாலும் அவர்களுக்குள் பகிர்ந்து உண்ணவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம், `ஒரு குழந்தை மட்டும்தான்’ என்று குடும்பங்கள் சுருங்கிய பிறகு, போட்டிபோடும் நிலையோ, பகிர்ந்து உண்ணவேண்டிய கட்டாயமோ அந்தக் குழந்தைக்கு ஏற்படுவதில்லை.

குழந்தை
குழந்தை

உடல் எடை அதிகரிப்பதால், ஒரு குழந்தைக்கு இதய நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், படிப்பில் ஆர்வம் குறைதல், கவனச்சிதறல், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமின்மை போன்றவை ஏற்படலாம். உடல் பருமனாகும்போது, அந்த எடையை எலும்புகள் தாங்க முடியாமல் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இதுபோன்ற பலவிதமான பிரச்னைகள் உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் விளையாடுவதற்கென்று கண்டிப்பாக விளையாட்டுத்திடல் இருக்க வேண்டும். இப்போது, அப்பார்ட்மென்ட்டுகளே பள்ளிகளாக மாறிய பிறகு, விளையாட்டுக்கு என்று தனி இடமெல்லாம் இருப்பதில்லை. எனவே, ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்றால், விளையாட்டுத்திடல் அவசியம் என்று விதிமுறை கொண்டு வர வேண்டும்.

``பப்பி லவ் ஆபத்தானதா?’’- பெற்றோர்களின் கவனத்துக்கு

மாடிப்படிகள் ஏறுவது மிக முக்கியமான உடற்பயிற்சி. ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் லிஃப்ட்டை மட்டும் தான் உபயோகிக்கிறார்கள். குழந்தைகள் மாடிப்படிகள் ஏறி இறங்குவதைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். எந்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அனுமதிக்கக் கூடாது.

குழந்தை
குழந்தை

இப்போது, நாட்டில் நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், பலர் குழந்தைகளை வெளியில் விடவே பயப்படுகிறார்கள். எனவே, குழந்தைகளைக் குறை கூறி ஒரு பயனும் இல்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்க, அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஓடி ஒளியக்கூடாது. குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதில் தவறில்லை. ஆனால், எப்போதும் அவர்கள்மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் மரபு ரீதியில் பருமனாக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சரிசெய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

குழந்தைகளுக்கு குப்பை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகளையும் தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியமாக வளருவார்கள். அதை அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் சமைத்துத் தருவதிலேயே பெற்றோர்களின் திறமை மறைந்துள்ளது. டிராஃபிக் நிற காய்கறிகள் எனப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது.

குழந்தை
குழந்தை

இது தவிர, பருமனாக உள்ள குழந்தைகளை எளிய உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்தலாம்" என்றார் குழந்தைநல மருத்துவர் கண்ணன்.

உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்பதே உண்மை.

அடுத்த கட்டுரைக்கு