Published:Updated:

101 வயது சீன முதியவரின் நம்பிக்கை... காணாமல்போன கொரோனா!

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்புடன் அல்ஸைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயலிழப்பு ஆகிய உடல்நலப் பிரச்னைகளால் கடுமையாக டேய் பாதிக்கப்பட்டிருந்தார்.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மாலைவரை உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109,648 எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3,825 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 61,982 பேர் குணம்பெற்றுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 44,234 பேர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Corona
Corona

இந்நிலையில், வயது முதிர்ந்தவர்களிடம் எளிதாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. அதுபோலவே, கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாடுகளின் புள்ளிவிவரங்களின்படி, வயது முதிர்ந்தவர்களே அதிகம் பாதிப்படைந்தும் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத் தன்மை அதிகரித்துச் செல்வது ஒருபுறம் இருக்க, வைரஸ் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக, 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் மீண்டு வந்துள்ள அதிசயம், சீனாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்தேறி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள அதிக வயதுடையவர் இவர் என சீன ஊடகமான Xinhuanet செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட முதியவர்
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட முதியவர்
The Sun

உள்ளூர் ஊடகங்களால் டேய் (Dai) எனும் குடும்பப் பெயரை வைத்துக் கண்டறியப்பட்ட இந்த முதியவர், ஹூபே மாகாணத்தின் வுகானில் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர், கடந்த மாதம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேய், சிகிச்சையில் உடல்நலம் தேறி கடந்த சனிக்கிழமை அன்று வீடு திரும்பினார். அதுவரையில், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய 98 வயதுடைய ஹூ ஹானிங் (Hu Haning) எனும் பெண்தான், கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அதிக வயதுடையவராக இருந்தார்.

China
China

சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறிய டேய், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போது மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததாக செவிலியர் மேட்ரான் லி லாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பேசிய செவிலியர், சிகிச்சையின்போது முதியவர் தன் 92 வயது மனைவியை நினைத்து வருந்திக்கொண்டிருந்ததாகவும், எனவே சிகிச்சையின்போது விரைவில் வீட்டுக்குச் சென்று தன் மனைவியைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என உறுதியுடன் இருந்தார் எனவும் கூறினார்.

கொரோனா பாதிப்புடன் அல்ஸைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயலிழப்பு ஆகிய உடல்நலப் பிரச்னைகளால் கடுமையாக டேய் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, அவருக்கு ஆன்டி வைரஸ் மருந்துகள், பிளாஸ்மா சிகிச்சை மற்றும் பாரம்பர்ய சீன மருத்துவ முறைகளால் சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hospital
Hospital
`வுகானில் கொரோனா நோயாளியுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்த மருத்துவர்!' - நெகிழும் நெட்டிசன்கள் #Viral

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறிய டேயை, மேலும் 15 நாள்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு மருந்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இவரோடு 80 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் சூழலில், முதியவரின் நம்பிக்கையும் அவர் குணமடைந்திருப்பதும் உலகம் முழுக்க பாசிட்டிவிட்டியைத் தந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு