கோவிட் தொற்றிலிருந்து குணமானதும் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மருத்துவரை அணுகி, உடல்நலம் இயல்புநிலைக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தச் சொல்கிறார்கள். இதே விதி கண்களுக்கும் பொருந்தும். தொற்றிலிருந்து குணமானவர்கள், கண் மருத்துவரையும் அணுக வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வசுமதி. அதற்கான அவசியம் மற்றும் காரணங்களையும் விளக்குகிறார் அவர்.
கொரோனா தொற்றின் காரணமாக உடல் தசைகள் பலவீனமடைவதைப் போலவே கண்களின் தசைகளும் பலவீனமடையலாம். அதனால் கண்களின் பவரில் மாற்றம் வரலாம்.

கோவிட் தொற்றிலிருந்து குணமானவர்கள் பல்வேறு அறிகுறிகளுடன் கண் மருத்துவர்களைப் பார்க்க வருகிறார்கள். அவை...
தெளிவற்ற, மங்கலான பார்வை
தலைவலி
களைப்பு
வாசிப்பதில் சிரமம்
கவனம் செலுத்துவதில் சிரமம்
கண்களில் வலி
கண்களில் சோர்வு
காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரிவது போன்ற உணர்வு
வாகனம் ஓட்டும்போது சிரமமாக உணர்வது
கண்களுக்குள்ள உள்ள லென்ஸானது, வெளியிலிருந்து வரும் ஒளிக்கேற்ப வளைந்துகொடுக்கக்கூடியது. நடன அசைவுகள் போன்ற லென்சின் இந்தச் செயலை `அகாமடேஷன்' (Accomodation) என்கிறோம். இப்படி விழித்திரையைச் சென்றடையும் ஒளியானது நமக்குத் தெளிவான காட்சிகளைத் தருகிறது. உடலும், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதீத ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்போது, லென்ஸின் இந்த அழகிய நடன அசைவானது முற்றிலும் மாறுகிறது. அதை `அகாமடேஷன் ஃபெயிலியர்' (Accomodation Failure) என்கிறோம். இது பயப்படும்படியான பெரிய பிரச்னை இல்லை என்றாலும் கண் மருத்துவரை அணுகி, கண்களுக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு பின்பற்றுவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே சரிசெய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதொற்றிலிருந்து குணமானவர்களுக்கு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை அணுகி, பார்வை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து கண்களுக்கான டிராப்ஸ், கண்ணாடி அல்லது ஏற்கெனவே கண்ணாடி அணிந்துள்ளவர்களுக்கு பவரில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கேற்ப வேறு பரிந்துரை, கண்களுக்கான மசாஜ் எனத் தேவையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
கொரோனா காலத்தில் பெரும்பாலானவர்களும் சொல்கிற பிரச்னை, கண்களின் வறட்சி. சிலருக்கு கண்களின் பின்பகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டதன் விளைவாகவும் இப்படி ஏற்படுகிறது. கண்களுக்குள் நீர் நிரம்பும் `சென்ட்ரல் சீரஸ் ரெட்டினோபதி' (Central serous retinopathy) என்ற பாதிப்பையும் சிலர் எதிர்கொள்கிறார்கள். நீர் நிரம்புவதால் பார்வை மங்கலாகத் தெரிகிறது. இது பயப்பட வேண்டிய அளவுக்கு பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. சாதாரண சிகிச்சையிலேயே சரியாகிவிடும்.

கோவிட் தொற்றில் தீவிர பாதிப்புக்குள்ளான சிலருக்கு மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். அப்படி ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டவர்கள், தொற்றிலிருந்து குணமானதும் கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்துக்கொள்வது பாதுகாப்பானது. கொரோனாவின் முந்தைய அலையில் இப்படி ஸ்டீராய்டு எடுத்துக்கொண்ட பலருக்கும் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டதை அதிகம் பார்த்தோம். அதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் நிரந்தர பார்வையிழப்புகூட ஏற்படலாம். மங்கலான பார்வை, இரண்டிரண்டாகத் தெரிவது, மூக்கிலிருந்தும் கண்களிலிருந்தும் நீர் வடிதல் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
- பார்ப்போம்
- ராஜலட்சுமி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்ய வேண்டியவை...
கண்களுக்கு போதுமான ஓய்வு மிக முக்கியம்.
அதீத சிந்தனை, கவலைகளைத் தவிர்த்தல் அவசியம்.
எந்த வேலையும் செய்யாமலிருப்பதும் தவறு. எனவே, உங்களை ஆக்டிவ்வாக வைத்திருங்கள். கண்களுக்குத்தான் ஓய்வு தேவையே தவிர, சிந்தனைக்கு அல்ல.
தொற்றிலிருந்து மீண்டதும் கண் பரிசோதனை செய்வது அவசியம்.
தேவைப்பட்டால் கண் மருத்துவரின் ஆலோசனையோடு கண்களுக்கான டிராப்ஸ் உபயோகிக்கலாம்.
மொபைல், கம்ப்யூட்டர் போன்றவற்றின் உபயோகத்தைத் தினமும் 3 - 4 மணி நேரத்துக்காவது குறைக்க வேண்டும்.
தொற்றுக்குள்ளாவதற்கு முன்பு பரபரப்பாக வேலை செய்ததைப் போலவே தொற்றிலிருந்து குணமான பிறகும் ஓட வேண்டாம். பரபரப்பின்றி, நிதானமாகச் செய்யப் பழகுங்கள்.
சரிவிகித உணவு உண்ணுங்கள்.
வாசகர் கேள்வி: ``கம்ப்யூட்டர் உபயோகிக்கும்போது பெரியவர்கள் 'ஆன்டிக்ளேர்' கண்ணாடி அணிவதைப் போல ஆன்லைன் வகுப்புகளின்போது குழந்தைகளுக்கும் கண்ணாடி அணிவிக்கலாமா?"

``உங்கள் குழந்தைக்கு கம்ப்யூட்டர் கண்ணாடி அணிவிக்கலாம். அது வெறும் கண்களை மட்டுமே கவர்செய்யும்படி இல்லாமல், புருவங்கள் முதல் கன்னங்கள்வரை மூடும்படி இருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் ஸ்டைல் பார்க்கத் தேவையில்லை. ஆனால், உங்கள் குழந்தைக்கு கண்களில் பவர் இருக்கிறதா, இல்லையா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பவர் இல்லை என்றால் மட்டுமே கம்ப்யூட்டர் கண்ணாடி அணிவிக்கலாம். பெரியவர்களுக்கு பார்வையில் பிரச்னை ஏற்படும்போது, பிரச்னைக்கு முன் பார்வை எப்படி இருந்தது, பிரச்னைக்குப் பிறகு பார்வையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உணர்கிறோம் என்பதைப் புரிந்து சொல்ல முடியும். ஆனால், குழந்தைகளுக்கு அப்படி கண் தொடர்பான பிரச்னைகளைச் சொல்லத் தெரியாது. எனவே, பெற்றோர், குழந்தைகளைக் கண்ணாடிக் கடைக்கு அழைத்துச் சென்று, கம்ப்யூட்டரில் டெஸ்ட் செய்து, கண்ணாடியை வாங்கி மாட்டக் கூடாது. குழந்தைகளுக்கான கண் மருத்துவரை அணுகி, பவர் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே கண்ணாடி அணிவிக்க வேண்டும்."
கண்கள் தொடர்பான, பார்வை தொடர்பான உங்கள் சந்தேகங்களை, கேள்விகளை அனுப்புங்கள். பதிலளிக்கக் காத்திருக்கிறார் விழித்திரை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வசுமதி.