கொரோனா காலத்தில் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்தது பற்றி ஏற்கெனவே பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பாதிப்பும் அதிகரித்திருக்கிறது. அதுதான் `தைராய்டு கண் நோய்' (Thyroid Eye Disease (TED).
அதென்ன தைராய்டு கண் நோய், அது யாரை பாதிக்கும், என்ன சிகிச்சைகள் கொடுக்கப்படும் என விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

``தைராய்டு கண் நோய் பாதிப்பு ஏற்கெனவே நம்மிடம் அதிகரித்துதான் காணப்படுகிறது. கொரோனா காலத்தில் அது பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்திருப்பதன் காரணம், மக்கள் அந்த பாதிப்பை, அதன் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதுதான். மற்றபடி கொரோனா கிருமியின் தாக்கத்துக்கும் இந்த நோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நம் கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிகள் இருக்கின்றன. அவற்றின் சில ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, கண்களில் ஏற்படும் பாதிப்பைதான் தைராய்டு கண் நோய் அல்லது தைராய்டு ஆப்தல்மோபதி என்கிறோம்.
தைராய்டு கண் நோய் என்பது ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் ஒருவித நோயெதிர்ப்பு மண்டல கோளாறு. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு இயக்கம் சரியாகச் செயல்படாது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் திசுக்களில் வீக்கம் காணப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅறிகுறிகள் எப்படியிருக்கும்?
இந்த பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளில் கண்களில் நீர் வடிதல், கண்கள் களைத்துப்போன மாதிரி தெரிவது, முறைத்துப் பார்ப்பது போன்று தெரிவது, எழுத்துகள் இரண்டிரண்டாகத் தெரிவது, கண்களில் வலி, கண்கள் சிவந்துபோவது, பார்வை மங்கலாகத் தெரிவது, கண்களை முழுவதுமாக மூட இயலாதது போன்றவை உணரப்படலாம். பாதிப்பு தீவிரமாகும் நிலையில்தான் கண்கள் முன்னே தள்ளியது போன்ற தோற்றம் வரும்.

யாரை பாதிக்கிறது?
தைராய்டு சுரப்பியில் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். ஆனால், தைராய்டு பாதித்த எல்லோருக்கும் இது வருவதில்லை.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் தைராய்டு பரிசோதனை செய்து அதன் அளவுகளை உறுதிசெய்துகொள்ளலாம். அது அசாதாரணமாகத் தெரிந்தால், கண் மருத்துவரை அணுகி, முறையான கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தீர்வுகள்
பெரும்பாலான அறிகுறிகளுக்கு கண்களின் வறட்சியைப் போக்கும் லூப்ரிகன்டுகள், ஸ்டீராய்டுகள், ரேடியோதெரபி மற்றும் மருந்துகள் போன்றவற்றால் சிகிச்சையளிக்க முடியும்.
பாதிப்பு தீவிரமாகும் நிலையில் சிலருக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம். நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தைராய்டு ஹார்மோன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் மற்றும் தைராய்டு, சர்க்கரைநோய் போன்றவை உள்ளவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
- பார்ப்போம்.
- ராஜலட்சுமி
.......................

வாசகர் கேள்வி
``கொரோனா காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?"
``அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதைப் போலவே கோவிட் காலத்தில் கண்களுக்கும் பாதுகாப்பு தேவை.
கொரோனா காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது பாதுகாப்பானதா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணாடி அணிவதுதான் பாதுகாப்பானதா, லென்ஸைத் தவிர்க்க வேண்டுமா என்கிறார்கள். லென்ஸை அணிவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதேபோல லென்ஸை அகற்றுவதற்கு முன்பும் கைகளைக் கழுவ வேண்டும். கண்ணாடி, லென்ஸ் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.
நீங்கள் கண்ணாடி அணிகிறவர் என்றால் கூடியவரை அதைக் கழற்ற வேண்டாம். வாகனம் ஓட்டும்போதும், பயணத்தின்போதும் சன் கிளாஸ் அணியலாம். தொற்றுக்குள்ளானவர்களுடன் இருக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவதும் ஓகே."
......................
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.