Election bannerElection banner
Published:Updated:

ஆண்களுக்கும் வரலாம் ஆஸ்டியோபோரோசிஸ்... எப்படி எதிர்கொள்வது?

Back Pain
Back Pain ( Image by mohamed Hassan from Pixabay )

மொபைல் கேம், நொறுக்குத்தீனி, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது என்று வாழ்ந்தால், வயதான காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

``ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற `எலும்புப்புரை பிரச்னை' பெண்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஆண்களுக்கும் வரும். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களைச் சற்று குறைவான எண்ணிக்கையில் தாக்கும். குறிப்பாக 60 வயதிலிருந்து 70 வயதுகளில் இருக்கிற ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது'' என்கிற எலும்பியல் மருத்துவர் அருண் கண்ணன், இதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாகச் சொல்கிறார்.

ஆண்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்
ஆண்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான காரணங்கள்...

சூரிய ஒளி உடம்பில் படாதது!

வெயிலோடு விளையாடிய காலம் கிட்டத்தட்ட இல்லையென்கிற லைஃப்ஸ்டைலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குறிப்பாக, நகரவாசிகள்... காலையில் வெயில் வருவதற்கு முன்னாடியே வேலைக்குச் சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்புபவர்களின் உடலில் வார இறுதிகளில் வெயில் பட்டால்தான் உண்டு. வாரம் முழுக்க உழைத்த களைப்பில் அன்றைக்கும் வீட்டுக்குள் அடைந்து கிடந்தால், உடம்பில் சூரியஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். அப்படியே வெயிலில் சென்றாலும், முழுக்கை சட்டை, ஹெல்மெட் என்று இருப்பவர்களுக்கும் உடலில் வெயில் படுவது குறைவுதான். இப்படித் தொடர்ந்து நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பவர்களுக்கு எலும்பின் வலிமைக்குத் தேவையான வைட்டமின் `டி' சத்து கிடைப்பதில்லை. இதனால் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்குள் போகாது. ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான மிக முக்கியமான காரணம் இது.

வாக்கிங், ஜாகிங், ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ் இல்லாமல் இருப்பது!

20-களின் இறுதியிலும் 30-களின் ஆரம்பத்திலும்தான் எலும்புகள் வலிமையடைவது உச்சத்தில் இருக்கும். இதை `பீக் போன் மாஸ் (Peak bone mass)' என்போம். அதன்பிறகு எலும்பின் வலிமை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். வாக்கிங், ஜாகிங், ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ், உடற்பயிற்சி செய்வது என்று சிறு வயதிலிருந்து சுறுசுறுப்பாக இருக்கிற ஆண்களுக்கு `பீக் போன் மாஸ்' நேரத்தில் எலும்புகள் நன்கு வலுப்பெறும். அப்படியில்லாமல் மொபைல் கேம், நொறுக்குத்தீனி, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது என்று வாழ்ந்தால், வயதான காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

எலும்பியல் நிபுணர் அருண் கண்ணன்
எலும்பியல் நிபுணர் அருண் கண்ணன்

கெட்ட பழக்கங்களும் தைராய்டும்!

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருப்பவர்களுக்கும், தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கும் எலும்புகள் வலுவில்லாமல் இருக்கும். வயதானபிறகு இவர்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கால்சியம் சத்தில்லா டயட்!

இளம் வயதில் பால் மற்றும் பால் பொருள்கள் சாப்பிடவில்லையென்றாலோ, கேழ்வரகு, கீரைகள், மீன், சிக்கன், இறால், நண்டு என்று கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடவில்லையென்றாலும் எலும்புகள் வலுவிழக்கும்.

Milk
Milk
Photo by ROBIN WORRALL on Unsplash

அறிகுறிகள்

ஆஸ்டியோபோரோசிஸ்க்கு பொதுவாக அறிகுறிகள் தெரிவதில்லை. எலும்புகளில் வலி, இறுக்கம் என்று எதுவுமே தெரியாது. அதனால்தான் இதை `சைலன்ட் டிசீஸ்' என்று சொல்வோம். ஆஸ்டியோபோரோசிஸ் வந்து எலும்புகள் ரொம்பவும் பலவீனமாக இருக்கையில், நடந்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலே பெரியளவில் எலும்பு முறிவு ஏற்படும். குறிப்பாக, இடுப்பு மற்றும் தண்டுவடத்தில்தான் இந்த எலும்பு முறிவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான், சம்பந்தப்பட்ட ஆணுக்கு `நமக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வந்திருக்கிறது' என்பதையே தெரிந்துகொள்ள முடியும்.

தீர்வுகள்

ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதாக சந்தேகம் வந்தால், எலும்பின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கும் டெக்ஸா ஸ்கேன் பரிசோதனையைச் செய்துபார்க்கலாம். ஒருவேளை ஆஸ்டியோபோரோசிஸ் வந்துவிட்டால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதோடு எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் வாக்கிங், ஜாகிங் போன்றவற்றைச் செய்யவும் அறிவுறுத்துவோம். தவிர, வாரத்துக்கு ஒரு மாத்திரை, வருடத்துக்கு ஓர் ஊசி போன்ற சிறப்பு சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Walking
Walking
Image by Daniel Reche from Pixabay
பெண்களை அதிகம் பாதிக்கும் எலும்புப்புரை... தவிர்ப்பது எப்படி?  #WorldOsteoporosisDay

கால்சியம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது,

உடலில் சூரிய ஒளிபடுவது,

உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பான லைஃப்ஸ்டைலில் இருந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புப்புரை நோய் ஆண்களுக்கு வராமலே தடுக்க முடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு