Published:Updated:

`எல்லா ஜிம்மையும் மூடுங்க...!' - டெல்லியை அதிரவைத்த உச்ச நீதிமன்ற உத்தரவு

`ஃபிட்னெஸ் சென்டர்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்'

Gym
Gym

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு திறக்கப்பட்ட ஃபிட்னெஸ் சென்டர்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் `மாஸ்டர் பிளான் - 2008' அறிக்கையில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் இணைந்த பகுதிகளில் (Mixed Lands) எந்த ஃபிட்னெஸ் சென்டரும் அமைக்கப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அந்த அறிக்கையின்படி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும் பல புதிய ஜிம்கள் தொடங்கப்பட்டன. 2008-க்குப் பிறகு தொடங்கப்பட்ட ஜிம்கள் அனைத்தும் தொடர்ந்து இயங்கி வந்ததால், உச்சநீதிமன்றம் `கண்காணிப்பு குழு' ஒன்றை அமைத்து ஆய்வு செய்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் `2008-க்குப் பிறகு திறக்கப்பட்டு இப்போது செயல்பட்டு வரும் அனைத்து ஜிம்களையும் மூட வேண்டும்' என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

எனினும், திடீரென இந்தத் தீர்ப்புக்குத் தீவிரமான எதிர்ப்புக்குரலை ஜிம் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். `நாங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தவும் இல்லை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவும் இல்லை. ரெஸ்டாரன்ட், பப்கள் போன்றவை குடியிருப்புப் பகுதிகளில் செயல்பட அனுமதிக்கும்போது உடற்பயிற்சிகூடங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன்?' என்று கொந்தளிக்கின்றனர் அவர்கள்.

யாரும் தங்களது வேலையை இழக்கும் சூழல் உருவாகாது
விஜேந்திர குப்தா
Vikatan

இந்த நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, '2021-ம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் இந்த விவகாரம் தொடர்பான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். அது உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

எனவே, ஜிம் உரிமையாளர்கள் பதற்றப்பட வேண்டாம்' என்று ஒரு நிகழ்வில் தெரிவித்ததாக, டெல்லியில் செயல்படும் பி.ஹெச்.டி. தொழில் வர்த்தக சபை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை பிரதமர் மோடியின் ஃபிட் இந்தியா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

ஜிம்
ஜிம்

இந்நிலையில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.கவைச் சேர்ந்த விஜேந்திர குப்தாவும், `ஜிம் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் யாரும் தங்களது வேலையை இழக்கும் சூழல் உருவாகாது' என்று தெரிவித்துள்ளார்.