Published:Updated:

கொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து - இந்தியாவில் சோதனை!

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து ( Pixabay )

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி குறித்து லான்செட் மருத்துவ இதழில், AZD 1222 தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட ஆராய்ச்சியில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுவரும் தடுப்புமருந்து ஆராய்ச்சி, இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்புதல் இந்தியாவில் கிடைத்தவுடன் ஆராய்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பு மருந்து ஆராய்ச்சி குறித்து லான்செட் மருத்துவ இதழில், 'AZD 1222 தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட ஆராய்ச்சியில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. அம்மருந்து ஆன்ட்டிபாடி உற்பத்தி மற்றும் T-செல் மூலம் ஏற்படும் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக உள்ளது. தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. மிதமான பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், அதை பாராசிட்டமால் மருந்து மூலம் கட்டுப்படுத்தலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் ஆராய்ச்சி தொடங்கப்படவிருப்பது குறித்து இந்திய சீரம் மையத்தின் தலைவர் அடர் பூனாவாலா கூறுகையில்,``இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறோம். இந்தியாவில் அம்மருந்தின் மூலம் சோதனை நடத்த ஒப்புதல் கிடைத்தவுடன், ஆய்வைத் தொடங்கிவிடுவோம். இன்னும் சில காலத்தில் இந்தத் தடுப்பு மருந்து உற்பத்தியைப் பெரிய அளவில் தொடங்கிவிடுவோம்' என்றிருக்கிறார்.

தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து
மாதிரி புகைப்படம்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் கண்டுபிடிப்பான AZD 1222 மருந்து, ஏப்ரல் 23 முதல் மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதன் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தவுடன் AZD 1222 மருந்துக்கான ஆராய்ச்சி நம் நாட்டிலும் தொடங்கப்படும்.

இந்தியக் கண்டுபிடிப்பான கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் ஆராய்ச்சியும், மனிதர்களிடம் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

COVAXIN: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி! -மனிதச் சோதனைக்கு ஒப்புதல்
அடுத்த கட்டுரைக்கு