Published:Updated:

கோவிட்-19: செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி?

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி

கோவிட்-19 நோய்க்கு எதிரான போரில் இது ஒரு மைல்கல்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் நம்பிக்கையளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக இரட்டைப் பாதுகாப்பு அளிப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

லான்செட் மருத்துவ இதழில் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை குறித்த தரவுகள் வெளியாகி, நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

Covid-19
Covid-19

பரிசோதனைக்கு தானாக முன்வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிலருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய கில்லர் டி (T) செல்கள் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி இரண்டும் உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்டிபாடிக்கள் குறுகிய காலத்துக்குப் பிறகு உடலிலிருந்து மறைந்துவிட்டாலும் கில்லர் டி செல்கள் பல ஆண்டுகள் உடலிலிருக்கும் என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனினும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி நீண்ட நாள்கள் வைரஸை எதிர்த்துச் செயல்படும் என ஆதாரபூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

Vaccine
Vaccine

``கில்லர் டி செல்கள் மற்றும் ஆன்டிபாடி இரண்டுமே கொரோனா வைரஸிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் பெரும் துணை புரியும். கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு மைல்கல். எனினும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"தடுப்பூசி உருவாக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தடுப்பூசி ஆராய்ச்சியின் இறுதி தேதியை யாரும் துல்லியமாகக் கணிக்க முடியாது. பெரிய மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியிலும் சில நேரங்களில் தவறான முடிவுகள் வந்துவிடும்.

எனினும், செப்டம்பர் மாதத்துக்குள் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் இலக்குடன் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பூசி சோதனைக்கு ஒப்புதல் அளித்த ஆராய்ச்சி நெறிமுறைக் குழுவின் தலைவர் டேவிட் கார்பென்டர் கூறியுள்ளார்.

Covid-19 Vaccine
Covid-19 Vaccine
கோவிட்-19 இறப்புகளைக் குறைக்கும் காசநோய் தடுப்பூசி - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு!

இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனை ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதால் மருந்தின் நோய்எதிர்ப்புத் திறன், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அறிந்துகொள்ள முடியும். ChAdOx1 nCoV-19 என்பது சிம்பன்சிகளுக்கு சளி அல்லது காய்ச்சலின்போது வழங்கப்படும் மருந்தின் வீரியம் குறைந்த வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு