Published:Updated:

`நோயாளிகளின் உயிரைக் காப்பதே முக்கியம்!' - அரசு மருத்துவமனைகளில் பேருந்து ஆக்சிஜன் சேவை

ஆக்சிஜன் வாகனத்தில் பயனாளர்கள்
ஆக்சிஜன் வாகனத்தில் பயனாளர்கள்

கொரோனா பாதித்தோருக்கு முதலுதவி கிடைக்க வழிசெய்யும் வகையில், இந்த ஆக்சிஜன் வாகனம் உதவுகிறது. சில மணி நேரத்துக்குள் படுக்கை வசதி உறுதிசெய்யப்பட்டதும் அவர்கள் மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் உச்சத்தில் இருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் படையெடுப்பால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதுவரை கண்டிராத மருத்துவ எமர்ஜென்சி நிலையை நாடு எதிர்கொள்கிறது. இந்த இரண்டாவது அலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதனாலேயே அடுக்கடுக்கான உயிர்களைப் பறிகொடுக்க நேரிடுகிறது.

ஆக்சிஜன் வாகனம்
ஆக்சிஜன் வாகனம்

மிகவும் வருந்தத்தக்க இந்தப் பேரிடர் சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க அரசுடன் இணைந்து சில தனியார் அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர். அந்த வகையில், `தி ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் அசோசியேஷன் (JITO)’ அமைப்பினர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, நடமாடும் ஆக்சிஜன் வாகனப் பயன்பாட்டை (Oxygen on Wheels) அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் இந்த வாகனம் முதல்கட்ட பயன்பாட்டில் இருக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெருந்தொற்றால், சாலைதோறும் ஆம்புலன்ஸ் சத்தம் மனதைப் பதை பதைக்கச் செய்கிறது. படுக்கைகள் நிரம்பி வழிவதால், பெரும்பாலான மருத்துவமனைகளின் வாசல்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த நேரத்தில் கொரோனா பாதித்தோருக்கு முதலுதவி கிடைக்க வழிசெய்யும் வகையில், இந்த ஆக்சிஜன் வாகனம் உதவுகிறது. கொரோனா பாதிப்புள்ளவர்கள் இந்த வாகனத்தில் அமர்ந்த நிலையில் ஆக்சிஜன் சுவாசம் பெறலாம். சில மணி நேரத்துக்குள் படுக்கை வசதி உறுதிசெய்யப்பட்டதும் அவர்கள் மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். கட்டணமில்லாத இந்தச் சேவை குறித்து, தி ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் அசோசியேஷன் அமைப்பின் தமிழகத் தலைவர் டி.கே.ஜெயினிடம் பேசினோம்.

ஆக்சிஜன் வாகனம்
ஆக்சிஜன் வாகனம்

``பெரும்பாலான மருத்துவமனைகளில் தற்போது படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. இந்தச் சிக்கலுடன், ஆக்சிஜன் பயன்பாட்டுக்கான தட்டுப்பாடும் அதிகளவில் இருப்பதால் பலரும் உயிரிழந்துவருகின்றனர். இந்தப் பாதிப்புகளின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கவும், நோயாளிகளை உயிர்ப்பிழைக்க வைக்க உதவும் `கோல்டன் ஹவர்’ நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலும்தான் நடமாடும் ஆக்சிஜன் வாகனத்தை வழங்கியிருக்கிறோம்.

மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பார்த்து, விரைவாக எடுத்த முடிவுதான் இந்த வாகனப் பயன்பாட்டுத் திட்டம். இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் ஆறு பேர் அமரலாம். ஒவ்வோர் இருக்கையிலும் தலா பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் (oxygen concentrator) இருக்கும். அதனுடன், ஒவ்வொரு பயனாளருக்கும் புதிய சுவாசக்குழாய் பயன்படுத்தப்படும்.

ஆக்சிஜன் வாகனம்
ஆக்சிஜன் வாகனம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் இந்த வாகனத்தைப் பயன்படுத்தலாம். பயனாளர்களின் உடல்நிலையைப் பொறுத்து, சராசரியாக சில மணிநேரம்வரை அவர்கள் வாகனத்தில் அமர்ந்து ஆக்சிஜன் சுவாசம் பெறுகின்றனர். அவசரத்தேவைக்கு 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களும் இருப்பதால், இந்த வாகனத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எப்போதும் ஏற்படாது” என்றவர்...

``சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையினருடன் இணைந்து இந்த வாகனப் பயன்பாட்டை வழங்குகிறோம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே எங்கள் பணி. இந்தச் சேவையைப் பயன்படுத்த வரும் பொதுமக்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்குவது, வாகனத்தில் அவர்களை அமர வைத்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமே பார்த்துக்கொள்கிறது. கொரோனா பாதித்தோர் மட்டுமே இந்த வாகனத்தைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் சுவாசக் கருவிகளைப் பொருத்த பாதுகாப்பு கவச உடை அணிந்த செவிலியர்கள் மட்டுமே இந்த வாகனத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

டி.கே.ஜெயின்
டி.கே.ஜெயின்

சில தினங்களுக்கு முன்புதான் இந்த வாகனப் பயன்பாட்டைத் தொடங்கினோம். இரண்டு மருத்துவமனைகளிலும் இதுவரை 150 பேர் இந்த வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால், அவர்களில் பலரின் உயிர்களும் அபாயகட்டத்துக்குச் செல்லாத வகையில் காப்பாற்றப்பட்டுள்ளது. இதேபோல புதிதாக நான்கு வாகனங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. அவை ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த இரண்டு மருத்துவமனைகளின் வளாகத்திலேயே 24 மணிநேரமும் இந்த வாகனம் ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அங்கு சிகிச்சைக்காக வந்திருக்கும் கொரோனா பாதிப்புள்ளோர் இந்த வாகனத்தைப் பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவப் பணியாளர்களிடமும் கேட்கலாம். அல்லது 9434343430 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம். உடனடியாக உதவி செய்யப்படும்” என்று முடித்தார்.

ஆக்சிஜன் வாகனம்
ஆக்சிஜன் வாகனம்
75% விலை உயர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், விநியோகத்திலும் சிக்கல்... எங்கே சறுக்கியது இந்தியா?

இந்தத் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து சோதனை செய்தோம். அழைப்பை ஏற்று பேசிய நபர், ``ஒரே நேரத்தில் பலரும் இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்வதால் சிலருக்கு அழைப்பு கிடைக்காமல் இருக்கலாம். அவர்கள் மீண்டும் அழைக்கலாம் அல்லது இந்த எண்ணுக்கு தங்களின் தேவை குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக வழிகாட்டப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு