Published:Updated:

`கொரோனாவால் 40% உயர்ந்த பாராசிட்டமால் மாத்திரை விலை!' - ஏப்ரலில் மருந்துத் தட்டுப்பாடு அபாயம்

பாராசிட்டமால்
பாராசிட்டமால்

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துப் பொருள்கள் செய்யத் தேவையான மூலக்கூறுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக அரங்கில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுகாதார அடிப்படையில் மட்டும் அல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் கொரோனாவால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து மற்றும் சுற்றுலா இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவின் பல்வேறு தொழிற்சாலைகள் முடங்கிக்கிடக்கின்றன. இதனால் சீனாவில் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைந்த அளவு ஏற்றுமதியின் விளைவு இந்தியாவில் எதிரொலிக்கிறது.

கொரோனா வைரஸ்... சீனாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்... இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுமா?

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துப் பொருள்கள் செய்யத் தேவையான மூலக்கூறுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவிகிதமும், பாக்டீரியா தொற்றுகளுக்கு முக்கியமான ஆன்ட்டிபயாட்டிக்காகப் பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் விலை 70 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.

இந்த விலை உயர்வு குறித்து முன்னணி மருந்து நிறுவனமான ஸைடஸ் கார்டிலாவின் தலைவர் பங்ராஜ் ஆர் பட்டேல், ``தற்போதுள்ள மருந்துப் பொருள்களை நாம் சேமிக்காமல் விட்டுவிட்டால் அடுத்து வரும் ஏப்ரலில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். கொரோனாவால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது உலக விநியோகச் சங்கிலியை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் பொருளாதாரம் சரிவை எட்டியுள்ளது. மருந்துப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.

மருந்துப் பொருள்கள் தட்டுப்பாடு
மருந்துப் பொருள்கள் தட்டுப்பாடு

இந்தத் திடீர் விலையேற்றம் மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களுக்கான தட்டுப்பாடே இதற்கு காரணம். மருந்துப் பொருள்கள் உற்பத்தியில், உலகத் தேவையில் இந்தியா 12 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்த மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருள்களுக்கு சீனாவைத்தான் இந்தியா 80 சதவிகிதம் நம்பியுள்ளது. சீனாவின் இந்த இடைநிறுத்தம் இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை மட்டுமல்லாது பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவால் சுகாதாரம், பொருளாதாரம், ஏற்றுமதி என எல்லாத் துறைகளும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு