Published:Updated:

அப்பா திட்டும்போது அம்மாவும், அம்மா திட்டும்போது அப்பாவும் என்ன செய்ய வேண்டும்? #Parenting

`குழந்தையை ஒருவர் திட்டும்போது, மற்றவர்கள் அதைக் கண்டும் காணாமல் இயல்பாகக் கடந்துவிடுங்கள்.’

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

பெற்றோரின் சண்டைகள் குழந்தையின் முன்னிலையில் நிகழக்கூடாது என்பது மனநல ஆலோசகர்களின் அறிவுரை. ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை எல்லா சண்டைகளும் குழந்தையின் முன்னிலையில்தான் நிகழும்! அவ்வளவு ஏன், குழந்தையையே மையமாக வைத்துக்கொண்டு, அவர்களின் முன்னிலையிலேயே சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர்கள் இங்கு ஏராளம்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

`உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அவ சின்னக் குழந்தை... அவளைப்போயி இப்படி அதட்டுறியே... குழந்தை பாவம்' எனப் பெற்றோரில் ஒருவர் சொன்னால்,

`அவளுக்கு செல்லம் கொடுத்துக் கெடுத்ததே நீங்கதான். அன்னைக்கே நாலு அடி வச்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பிரச்னை வந்திருக்குமா?' என இன்னொருவர் சொல்வார்.

குழந்தைகளிடம் `white lies’ சொல்லும் பெற்றோரா நீங்கள்?! தெரிந்து கொள்ளுங்கள்! #GoodParenting

``இப்படி இரு வேறு நிலைப்பாடுகளுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு, எது சரி - எது தவறென்றே தெரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் அம்மாவுக்கு சரியாக இருப்பது, அப்பாவுக்கு தப்பாகத்தான் இருக்கும். எனவே, அம்மா திட்டும்போது அப்பாவையும் அப்பா திட்டும்போது அம்மாவையும் வாதத்துக்குத் தேடிக்கொள்ள எண்ணுவார்கள்" என்கிறார், குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா.

குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா
குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா

தொடர்ந்து பேசியவர்,

``எப்போதுமே, வீடுகளில் அம்மாவோ அப்பாவோ திட்டும்போது, அங்கிருக்கும் குழந்தைகளைக் கவனித்துப்பாருங்கள். முதலில் அவர்களின் கண்கள், `நம்மை யாராவது பார்க்கிறார்களா' எனத் தேடிக்கொண்டே இருக்கும். அடுத்தது, திட்டும் நபரின் எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத மற்றொரு நபரைத் தேடுவார்கள். தாத்தா பாட்டியோடு வளரும் பிள்ளைகளிடம், இப்படியான மனப்பாங்கு இருப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கலாம். இவர்கள், அப்பாவோ அம்மாவோ திட்டும்போது, வேகவேகமாக பாட்டி தாத்தாவிடம் ஓடுவார்கள். பெரும்பாலான நேரம், வீட்டுப் பெரியவர்களும் குழந்தைகளுக்கே சப்போர்ட்டாக இருப்பார்கள். தங்களின் இந்தச் செய்கைக்குப் பெரியவர்கள் சொல்லும் நியாயம், `சின்னப் பிள்ளைகள், அப்படி இப்படித்தான் இருப்பார்கள். இது வெறும் வயதுக் கோளாறுதான். போகப் போக சரியாகிடுவர்' என்பது.

குழந்தைகளை அதிகம் மிரட்டினால் `அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ஆபத்து! அலெர்ட்
`நாம் தவறு செய்தால், பெற்றோரில் யாரேனும் ஒருவர் நம்மைக் கேள்வி கேட்பார்' என்று குழந்தைக்குப் புரிய வேண்டும்.
குழந்தைகள் உளவியல் ஆலோசகர், பூங்கொடி பாலா

மேலும், `குழந்தைகள் தவறே செய்ய மாட்டார்கள் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் குழந்தைகள்தானே... சின்னச் சின்ன தவறுகளுக்காக வீட்டிலுள்ள எல்லோரும் அவர்களைத் திட்டினால், குழந்தை தன்னைக் குற்றவாளி போல நினைத்துக்கொள்ளும். யாராவது ஒருவர் குழந்தையின் பக்கம் நின்று, அவர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இப்போதைக்கு அவர்களை விட்டுவிட்டு, பிறகு விஷயத்தைப் புரியவைத்துக்கொள்ளலாம்' என்பார்கள். இன்னும் சில பெரியவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் `நாங்களெல்லாம் ஐந்து பிள்ளைகளை வளர்த்தவர்கள்... எங்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப்போகிறது' எனக் குழந்தையின் முன்னிலையிலேயே சொல்வார்கள்.

குழந்தையை ஒருவர் திட்டும்போது, மற்றவர்கள் அதைக் கண்டும் காணாமல் இயல்பாகக் கடந்துவிடுங்கள்.
குழந்தைகள் உளவியல் ஆலோசகர், பூங்கொடி பாலா

பெரியவர்களின் அடிப்படை வாதத்திலேயே பிரச்னை இருக்கிறது. என்னவெனில், வீட்டுக்குள்ளேயே இரு வேறு எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் வளரும் குழந்தைகள், தன்னுடைய தவறு என்னவென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்ளாமலேயே போய்விடுவார்கள். புரிந்துகொண்டாலும்கூட, அதை முதலில் கோபமாகச் சுட்டிக்காட்டிய நபரின்மீது, வெறுப்பு மனப்பான்மையை அதிகரித்துக்கொள்ளும் சூழலும் உண்டு.

என்னதான் செய்யலாம்?

சிம்பிள். குழந்தையை ஒருவர் திட்டும்போது, மற்றவர்கள் அதைக் கண்டும் காணாமல் இயல்பாகக் கடந்துவிடுங்கள். வீட்டுப் பெரியவர்கள் உட்பட, அனைவருமே அந்தச் சூழலை தற்காலிகமாகக் கடக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

ஒருவேளை, குறிப்பிட்ட விஷயத்தில் 'குழந்தையைத் திட்டியிருக்கக்கூடாது, குழந்தை தரப்பில் எந்தத் தவறும் இல்லை' என நீங்கள் எண்ணினால், அதைக் குழந்தையின் முன்னிலையிலேயே சொல்ல வேண்டும் என்றில்லை. குழந்தையைத் திட்டியவரைத் தனியாக அழைத்துச்சென்று விஷயத்தை அவருக்குப் பொறுமையாக உணர்த்தலாம்.

ஒருவேளை, குழந்தைமீதுதான் தவறென்றால், நீங்களும் சேர்ந்துகொண்டு குழந்தையைத் திட்ட வேண்டும் என்றில்லை. முன்பே சொன்னதுபோல, சூழலைக் கடந்துவிடுங்கள். பிரச்னை குறித்து உங்கள் இணையருடன் ஆலோசித்துவிட்டு, தேவைப்பட்டால், பின்வரும் நாள்களில் குறிப்பிட்ட விஷயத்தில் உங்கள் தரப்பு என்னவென்று குழந்தையிடம் சொல்லுங்கள். இது, பாட்டி தாத்தாவுக்கும் பொருந்தும்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

சில நேரம், பெற்றோர் இருவரில் ஒருவர் எப்போதுமே குழந்தையைக் கண்டுகொள்ள மாட்டார். மற்றொருவர், எப்போதும் கண்டிப்புடன் இருப்பார். இது மோசமான குழந்தை வளர்ப்பு. எப்போதுமே, பெற்றோர் இருவருமே குழந்தையின் நடத்தை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். `நாம் தவறு செய்தால், பெற்றோரில் யாரேனும் ஒருவர் நம்மைக் கேள்வி கேட்பார்' என்று குழந்தைக்குப் புரிய வேண்டும்.

இப்படி கேள்வி கேட்கும்போது, சில பெற்றோர் ஒருவரைக் காண்பித்து மற்றொருவர் குழந்தையை மிரட்டும் சூழல் உண்டு. உதாரணமாக, `ஐஸ்க்ரீம் சாப்பிட்டா, அம்மாகிட்ட சொல்கிறேன் இரு' என அம்மாவைக் காண்பித்து அப்பா மிரட்டுவது, `மார்க் குறைவாக வாங்கினா, அப்பாகிட்ட சொல்லிடுவேன்' என அப்பாவைக் காண்பித்து அம்மா அதட்டுவது என்றிருப்பது. இதுபோன்ற சூழலில் வளரும் குழந்தைகள், ஒருகட்டத்துக்குமேல் `இந்தத் தவற்றை இவருக்குத் தெரியாமல் செய்ய வேண்டும்' என்கிற ரீதியில் வளரத் தொடங்குவார்கள்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

குழந்தையின் முன்னால் இருக்கும் பெற்றோரின் இணக்கமும், அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வும்தான் குழந்தை ஆரோக்கியமான மனநிலையோடு வளர உதவும்.