Published:Updated:

`மூளை அறுவை சிகிச்சையின்போது வயலின் இசைத்தார்!' -அமெரிக்க மருத்துவர்களை ஆச்சர்யப்படவைத்த நோயாளி

டாக்ம்ருக்கு அறுவை சிகிச்சை செய்த காட்சி
டாக்ம்ருக்கு அறுவை சிகிச்சை செய்த காட்சி ( Twitter, @KingsCollegeNHS )

மூளையில் அறுவை சிகிச்சை செய்த போது, முழுக்க முழுக்க தன் கைகளை அசைத்து இசைத்துக்கொண்டே இருந்த லண்டன் நோயாளி.

`இசை, என்னவெல்லாம் செய்யும்' என யாராவது கேட்டால், நொடிகூட யோசிக்காமல் `இசை நம் நோய்களைக் குணப்படுத்தும்' எனச் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு இசை ஒருவருக்கு மருந்தாக, சிகிச்சையாகச் செயல்படும். அதற்கான சமீபத்திய உதாரணம்தான், அமெரிக்காவின் லண்டனில் நடந்துள்ள சம்பவம்.

மூளை
மூளை

லண்டனைச் சேர்ந்த 53 வயது வயலின் கலைஞர் டாக்மர் டர்னர் (Dagmar Turner). இவரின் இடப்பக்க மூளையில் புற்றுநோயில்லாக் கட்டியொன்று இருப்பதாக 2013-ம் ஆண்டு உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே வலிப்பு பிரச்னையும் இருக்கும் டாக்மருக்கு, இந்தக் கட்டி எந்த நேரத்திலும் மூளையின் நரம்புகள் அல்லது ரத்த நாளங்களில் உரசி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டாக்மருக்கு மூளையில் அறுவை சிகிச்சைசெய்து, கட்டியை நீக்கியுள்ளனர் மருத்துவர்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது டாக்மர் வயலின் இசைத்துக்கொண்டே இருந்துள்ளார். மில்லி மீட்டர் அளவுக்குத் துல்லியமான அளவுகளைக்கொண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை முழுக்க முழுக்க, தன் கைகளை டாக்மர் அசைத்துக்கொண்டேதான் இருந்துள்ளார். ஸாரி ஸாரி, இசைத்துக்கொண்டேதான் இருந்துள்ளார்!

அறுவை சிகிச்சைக்கு முன்பு டாக்மரை வயலின் இசைக்கவைத்து, அப்போது அவரது மூளையின் எந்தப் பகுதிகள் எல்லாம் செயல்திறனோடு இருக்கின்றன என்பதையும் மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.

சீக்கிரமே நான் என் ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் இசைக்க வேண்டும்
டாக்மர்

டாக்மரின் முன் - வலப்பக்க மூளையில்தான் கட்டியிருந்தது. இது, இடது கையின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் மூளையின் நரம்புப் பகுதியை ஒட்டிய பகுதி. இடது கை தொடர்ச்சியாக வயலின் மீட்டுக்கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர்கள் கொஞ்சம் இடறினாலும், பிரச்னை தீவிரமாகிவிடும். ஆகவே மிக கவனமாக அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார்கள் மருத்துவர்கள். வயலின் மீட்பதற்காகக் கைகளுக்குத் தொடர்ச்சியாக அசைவுகள் தரப்பட்டதால், மூளைக்கும் கைக்குமான இசைவு எதுவென தெளிவாகக் கண்டறிந்துவிட்டதாகவும், அதற்கேற்ப குறிப்பிட்ட அந்தப் பகுதிகளைத் தொந்தரவு செய்யாத வகையில், சிகிச்சையை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

மூளையின் பிற பகுதிகளுக்கு எந்தச் சேதாரமுமின்றி 90 சதவிகிதக் கட்டி நீக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாள்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டாக்மர், ``சீக்கிரமே நான் என் ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் இசைக்க வேண்டும்'' என விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இசைதானே எல்லாமும்!

அடுத்த கட்டுரைக்கு