Election bannerElection banner
Published:Updated:

பிசிஆர், ஆன்டிபாடி, ஆன்டிஜென், சிடி ஸ்கேன்... கொரோனா பரிசோதனைகள் FAQ!

Covid 19 Test
Covid 19 Test ( Representational Image )

பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்கள் திறந்தவெளியில் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. பரிசோதனை செய்யும்போது நோயாளிகள் இருமக்கூடும் என்பதால், N95 முகக் கவசம், கண்களுக்குப் பாதுகாப்பு, கைஉறைகள் அவசியம்.

கோவிட்-19 தொற்றை உறுதிசெய்ய மட்டுமல்ல, தொற்றின் பரவலைக் கண்காணிக்கவும் பரிசோதனைகள் மிக அவசியம். பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை குறித்து மக்களிடம் பரவலாக உள்ள சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார், தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ்குமார்.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்
தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்

1. கொரோனா தொற்றுக்கான ஆர்டி-பிசிஆர்(RT-PCR) பரிசோதனையில், false positive, false negative என்பவை என்ன?

பரிசோதனை முடிவு பிழையாக இருப்பதைக் குறிக்கும் பதங்கள் இவை. ஃபால்ஸ் பாசிட்டிவ் என்பது, தொற்று இல்லாத நபருக்குத் தொற்று இருப்பதாகப் பரிசோதனை முடிவு கூறுவது. ஃபால்ஸ் நெகட்டிவ் என்பது, தொற்றுள்ள நபருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு கூறுவது.

கொரோனா தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனையில், ஃபால்ஸ் பாசிட்டிவ் வருவது அரிதே. கொரோனா வைரஸில் E gene, Rd-RP (RNA dependant, RNA polymerase) gene என்று இரண்டு வகை ஜீன்கள் உள்ளன. E gene என்பது மற்ற ஏழு வகையான கொரோனா வைரஸ்களிலும் காணப்படும். Rd-RP gene என்பது கோவிட்-19ன் காரணியான SARS CoV 2-ல் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும். RT-PCR-ல் இந்த இரு ஜீன்களுக்குமான பரிசோதனை ஒரே நேரத்தில் செய்யப்படுவதால், ஃபால்ஸ் பாசிட்டிவ் ஏற்படாது. இரண்டு ஜீன்களும் பாசிட்டிவ்வாக இருந்தால் மட்டுமே பாசிட்டிவ் ரிசல்ட் கொடுக்கப்படும். ஆதலால் ஃபால்ஸ் பாசிட்டிவ் என்பது அரிதே.

Swab test
Swab test

ஆனால் சில நேரங்களில் பாசிட்டிவ் மாதிரிகள், நெகட்டிவ் மாதிரிகள் ஆகியவற்றை அருகருகில் வைக்கும்போதும், மற்றும் மாதிரிகளைப் பரிசோதிக்க எடுக்கும்போது ஏற்படும் தூய்மைக்குறைவாலும் (contamination) தொற்று இல்லாதவருக்குத் தொற்று இருப்பதாக, பரிசோதனை முடிவு ஃபால்ஸ் பாசிட்டிவ்வாக வரலாம்.

ஃபால்ஸ் நெகட்டிவ்வை பொறுத்தவரை, பரிசோதனைக்கான மாதிரிகள் (samples) நோயாளிகளிடமிருந்து முறையாக எடுக்கப்படவில்லை என்றாலோ, மாதிரி சரியான முறையில் கையாளப்படவில்லை என்றாலோ, தொற்று உள்ள ஒருவருக்குத் தொற்று இல்லை என்று முடிவு காட்டப்படலாம். மேலும், இப்பரிசோதனை 70% சரியாகவும், 30% தவறாகவும் முடிவுகளைக் கொடுக்கலாம் என்பதாலும் ஃபால்ஸ் நெகட்டிவ் ரிசல்ட் கிடைக்கலாம்.

2 .கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எடுக்க உகந்த நேரம் எது? சிலருக்கு முந்தைய நாள் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டு, பிறகு அடுத்த நாள் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்படுகிறதே?

அறிகுறிகள் ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாள்களில் வைரஸின் அளவு (viral load) அதிகமாக இருக்கும். அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு ஒன்றிரண்டு நாள்களுக்கு முன் வைரஸின் அளவுகூட ஆரம்பித்து, அறிகுறி ஏற்பட்ட இரண்டாம் நாள் உச்சத்தைத் தொடும். இங்கு பெரும்பாலும் பலர், குடும்பத்தில் யாருக்காவது கொரோனா உறுதியானால், உடனே தாங்களும் சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர். ஆனால் அறிகுறிகள் வெளிப்பட்ட பிறகு 48 முதல் 72 மணி நேரம் கழித்துப் பரிசோதனை மேற்கொள்வதே சிறந்தது. அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, ஐந்து நாள்கள்வரை காத்திருந்து, அறிகுறிகள் தென்பட்ட பின்னர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவதன் காரணம் இதுதான்.

Covid-19 testing labs
Covid-19 testing labs

3. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்ற நபருக்கு, சிகிச்சை முடிந்த பின்னர் அவர் குணமாகிவிட்டத்தை உறுதிப்படுத்தும் 'எக்ஸிட்' டெஸ்ட் செய்யப்படுவதில்லை. இந்நிலையில், அவருக்குத் தொற்று இல்லை என்று எப்படி உறுதிசெய்வது?

இன்ஃப்ளூயென்ஸா, ஸ்வைன் ஃப்ளூ பரிசோதனைகள் உட்பட எந்த வைரஸ் தொற்றுக்கும் தொற்றை உறுதி செய்ய மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறதே தவிர, சிகிச்சை முடிந்த பிறகு மறு பரிசோதனை செய்யப்படுவதில்லை.

சீனாவில் கோவிட்-19 தொற்று அதிகமாகப் பரவிய காரணத்தால் அவர்கள் மறு பரிசோதனை செய்தார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவருக்குத் தொற்று இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதை அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம். மூன்று நாள்கள் காய்ச்சல் இல்லை, ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவைப்படவில்லை, அறிகுறிகள் ஆரம்பித்து 10 நாள்களாகிவிட்டன, தற்போது இருமல், தொண்டை எரிச்சல் ஆகிய அறிகுறிகள் இல்லை என்றால், அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள், அவர்களுக்கு பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து பத்து நாள்கள் கழித்து நோயிலிருந்து மீண்டவர்களாக எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா போரில் ஓராயுதம்!

4. ஆர்டி-பிசிஆர் தவிர கொரோனா தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பிற பரிசோதனைகள் என்னென்ன?

பிசிஆர் பரிசோதனை முறைப்படி ஆர்டி-பிசிஆர் தவிர, Xpert, Truenat ஆகிய பரிசோதனைகளும் உள்ளன.

ஆர்டி-பிசிஆரில் RNAவை நீக்கிவிட்டுப் பரிசோதனை செய்யப்படும். Xpert, Truenat முறைகளில் மாதிரியை மட்டும் மெஷினில் வைத்தால் தானாகவே RNAவை நீக்கி, வைரஸை பெருக்கி, ஒரு மணி நேரத்தில் பரிசோதனை முடிவைக் கொடுக்கும். 'லேப் கன்டாமினேஷன்' ஏற்படாது. ஆய்வகத்தில் பணிபுரிபவர்களுக்குத் தொற்று பரவுவதற்கான வாய்ப்பும் குறைவு.

ஆனால் Xpert முறையில் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதனை செய்யமுடியும். ஆர்டி-பிசிஆரில் பல மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதனை செய்யலாம். Xpert-ல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதிக்க முடியும் என்பதால், ஒரு நாளைக்கு 20 மாதிரிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும். இந்தியக் கண்டுபிடிப்பான Truenat-ல் நான்கு மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதிக்கலாம்.

corona and throat problem
corona and throat problem

இவற்றைத் தவிர, ஆன்டிஜென் பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஆனால் இதன் துல்லியத்தன்மை 40% முதல் 50% மட்டுமே. இந்தப் பரிசோதனைக்கு ரத்த மாதிரி பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட தொற்று உடலில் ஏற்பட்டதை, அந்த நோயை எதிர்க்க உடலில் தோன்றிய ஆன்டிபாடியை வைத்து அறிவது, ஆன்டிபாடி டெஸ்ட். ஆன்டிபாடி பரிசோதனையில் IgM, IgG ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. IgM பரிசோதனையில் கண்டறியப்பட காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்து 10 முதல் 14 நாள்கள் ஆக வேண்டும். IgG பரிசோதனையில் கண்டறியப்பட 15 நாள்கள் ஆகும். ஆன்டிபாடி பரிசோதனையில் ஃபால்ஸ் நெகட்டிவ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிடி ஸ்கேனை மட்டுமே வைத்து கொரோனா தொற்றை உறுதிசெய்ய முடியாது். நுரையீரலில் Ground Glass opacities கண்டறியப்பட்டால் கொரோனாவாக இருக்கலாம். ஆனால் இதேபோல் நுரையீரலில் நீர்கோத்தல் நிலை, இதயம் செயலிழத்தல் ஆகிய நோய்களிலும் காணப்படும்.

கஷாயம், ஆவிபிடித்தல், குடிநீர் மருந்து... வைரஸுக்கு எதிரான ஆயுர்வேத சிகிச்சைகள்!

5. சமூகப் பரவலைக் கண்காணிக்க ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா?

IgG ஆன்டிபாடி டெஸ்ட் ஒருவருக்கு பாசிட்டிவ் ஆக இருந்தால், அவர் தொற்றிலிருந்து மீண்டுள்ளார் என்று அர்த்தம்.

சமூகத்தில் எத்தனை பேர் அறிகுறிகள் அற்று, அல்லது மிதமான அறிகுறிகளுடனான தொற்றுடன் உள்ளனர் என்பதைக் கண்டறிய, அதிவிரைவுப் பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொண்டுவர நினைத்தது. ஆனால் அந்தப் பரிசோதனையின் துல்லியத்தன்மை குறைவாக இருந்ததால், அம்முடிவை கைவிட்டது. தற்போது சமூகப் பரவலைக் கண்காணிக்க IgG பரிசோதனையை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருகிறது. இதன் மூலம் சமூகத்தில் உள்ள தொற்றின் பரவலை அறிய முடியுமே தவிர, ஒருவருக்குத் தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாது.

Testing Stick
Testing Stick
Representational image

6. ஆன்டிபாடி பரிசோதனை முடிவு ஒருவருக்குப் பாசிட்டிவ் என்றால், அது கொரோனா தொற்றிற்கு மட்டுமே பிரத்யேகமானதா? அல்லது, அவர்கள் வேறு தொற்றில் இருந்து மீண்டு வந்தால்கூட ஆன்டிபாடி பரிசோதனை முடிவு பாசிட்டிவ்வாக இருக்கக்கூடுமா?

IgM ஆன்டிபாடியைவிட IgG ஆன்டிபாடி நம்பகத்தன்மை வாய்ந்தது. IgG பாசிட்டிவ் என்றால், அவருக்கு இரண்டு வாரம் முதல் இரண்டு மாதம்வரை தொற்று ஏற்பட்டதற்கான மறைமுக அறிகுறியாக அதைக் கொள்ளலாம்.

டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்றுகளுக்கு IgG பரிசோதனை முடிவு பாசிட்டிவ்வாக வருவது அரிது. IgGல் ஃபால்ஸ் நெகட்டிவ் வருவதும் மிக அரிது.

7. கொரோனா தொற்றுக்காக ஒருவர் பரிசோதனை மேற்கொள்ளச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கோ, ஆய்வகங்களுக்கோ செல்ல வேண்டி இருப்பதால், அவை தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, முகக் கவசம் அவசியம் அணிந்து செல்ல வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளப்படும்போது மட்டுமே முகக்கவசத்தை விலக்கவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுடன் தேவையற்ற இடங்களில் உட்கார்வதோ, கைகளை வைப்பதோ கூடாது. பரிசோதனைக்காகக் காத்திருக்கும் மற்ற நபர்களுடன் உரையாடக் கூடாது. கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

corona test
corona test

8. பரிசோதனை செய்யும் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்கள் திறந்தவெளியில் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. பரிசோதனை செய்யும்போது நோயாளிகள் இருமக்கூடும் என்பதால், N95 முகக் கவசம், கண்களுக்குப் பாதுகாப்பு, கைஉறைகள் அவசியம். ஏப்ரன் (Apron) அணிந்து கொள்ளலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு