Published:Updated:

மனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்!

Pets
Pets ( Petfinder )

உடல் நலமின்மைக்காக சிகிச்சைகள் எடுத்து வருபவர்கள், அந்த நேரத்தில் செல்லப்பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுவது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

`எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு' என யாராவது சொன்னால், `மனநல மருத்துவரைப் பார்' என்று அறிவுரை சொல்பவர்களைவிடவும், `செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடு', `பூச்செடிகள் வளர்த்துப்பாரேன்' என்று மாற்று யோசனைகள் சொல்பவர்கள்தான் இன்றைக்கு அதிகம். உண்மையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, மனிதர்களின் மனநலனுக்கு எந்தளவுக்கு உதவும்? மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

``பொதுவாகவே, மனதளவில் ஒருவர் துவண்டுபோய் இருக்கும்போது, `நமக்கு இப்போது யாராவது துணையாக இருந்தால் நன்றாக இருக்குமே' என்ற எண்ணம் அதிகமாக வரும். அதேநேரம், உடனிருக்கும் மனிதர்களிடம் அதைக் கேட்பதில் தயக்கமும் இருக்கும். தயக்கத்தை மீறிக் கேட்டாலும்கூட, இன்றைய பரபரப்பான உலகில், நடைமுறையில் இது சாத்தியப்படுவதும் கடினம்தான். வேறு என்னதான் செய்வது என்றால், இப்படிப்பட்ட திக்கற்ற நேரங்களில், செல்லப்பிராணிகளின் அன்பை நாடலாம்!

Representational Image
Representational Image

நாம் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்பது, நம் உணர்வுகளுக்கேற்ப ரியாக்ட் செய்வது, நாம் விருப்பப்படும்போதெல்லாம் நம்மோடு நேரம் செலவிடுவது என நம் மனம் எதிர்பார்க்கும் அனைத்தையும் செல்லப்பிராணிகள், எந்தவித கண்டிஷனும் இல்லாமல் செய்யும். குறிப்பாக, மனிதர்களைப் போல நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தச் சொல்லி அறிவுரை சொல்லாது. அதனால், செல்லப்பிராணிகளிடம் மனம் விட்டுப் பேசலாம். இந்த வகையில் மனஅழுத்தம் இருப்பவர்கள் மட்டுமன்றி, வயதானவர்கள், தனிமையாக வாழ வேண்டிய நிலைமையில் இருப்பவர்களும் தங்கள் மனநல மேம்பாட்டுக்குச் செல்லப்பிராணிகள் வளர்க்கலாம்.

செல்லப்பிராணிகள் வளர்க்கப்படும் வீடுகளில் வளரும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்தால், பொறுப்பானவர்களாக, பிறரின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த, மற்ற உயிர்களின் இன்ப, துன்பங்களைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதை அறியலாம். ஆக, சிறந்த குழந்தை வளர்ப்புக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது உதவும்!

Vikatan

உடல் நலமின்மைக்காக சிகிச்சைகள் எடுத்து வருபவர்கள், அந்த நேரத்தில் செல்லப்பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், ஒருவரின் மனநலன் மேம்பட்டு இருக்கும்போது, இயல்பாகவே அவரின் உடல்நலனும் மேம்பட்டுவிடும்.

`பெட் தெரபி' என்றொரு உளவியல் சிகிச்சை முறை, சமீபகாலமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றபோதிலும், எந்தவொரு பிரச்னைக்குமே பெட் தெரபி மட்டுமே முழுமையான தீர்வாகாது. குறிப்பிட்ட பிரச்னைக்கான மருத்துவத்துடன் இணைந்து, பெட் தெரபியை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், பெட் தெரபியை `மேம்பாட்டுக்கான சிகிச்சை' என்றே குறிப்பிடமுடியும்" என்கிறார் ஸ்வாதிக்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``செல்லப்பிராணிகள் நமக்கு நன்மைகள் பல தந்தாலும்கூட, அவற்றைச் சரியாகப் பராமரிக்காமல் விடும்பட்சத்தில் அவற்றால் நமக்கு நிச்சயம் கெடுதல் ஏற்படும்" என்கிற கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன், செல்லப்பிராணிகளின் பராமரிப்புப் பற்றி விளக்கமாகச் சொன்னார்.

செய்யவேண்டியவை...

* அதிகாலை சூரிய ஒளியிலும் அந்திமாலை சூரிய ஒளியிலும் வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும்.

* மருத்துவர் அறிவுரையுடன், தினமும் என்சைம், மைக்ரோககால், அமினோ போன்ற மருந்துகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

* வாரம் ஒருமுறை செல்லப்பிராணியைக் குளிப்பாட்டுவது கட்டாயம். அவற்றின் கண்கள், காதுகள், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் குளியல் சோப் படாமல் கவனமாகக் குளிக்க வைக்க வேண்டும்.

செய்யவே கூடாதவை...

* நாம் சாப்பிடும் டேபிளில் வைத்து அவற்றுக்கும் உணவு பரிமாறுவது

* மிகப்பெரிய எலும்புத்துண்டையோ கோழியின் ஈரலையோ உணவாகக் கொடுப்பது

* அவை குடிக்க டீ, காபி, சாக்லேட் கொடுப்பது.

* காரமான உணவுப்பொருள்களை சாப்பிடக் கொடுப்பது

* விதை நீக்காத தக்காளியை சாப்பிடக் கொடுப்பது

கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன்
கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன்

* காதுகளுக்குள் தண்ணீர் போகும்வண்ணம் குளிப்பாட்டுவது

* சோப் ஆயில், பினாயில் போன்றவற்றை அவற்றின் காதுகளுக்குள் செல்லும்படி குளிப்பாட்டுவது

* கல், மண், காகிதங்கள், மரத்துகள்கள் போன்றவற்றை அவை சாப்பிட்டால், கண்டுகொள்ளாமல் விடுவது

* வீட்டுக் கழிப்பறைக்குள் செல்லப்பிராணியை அனுமதிப்பது

* செல்லப்பிராணி வயிறு நிறைய சாப்பிட்டபின், அவற்றை விளையாட அனுமதிப்பது

செல்லப்பிராணிகளைக் குளிப்பாட்டும் முறை...

20 மி.லி. கற்றாழைச் சாறு அல்லது மாய்சரைசர் + 10 மி.லி. கீடோகொனாசோல் (Ketoconazole) + 10 மி.லி. சைபெர்மெத்ரின் (Cypermethrin) 1.2 % + 300 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மிக்ஸை, செல்லப்பிராணியின் தலை தவிர்த்து, உடல் பகுதிகளில் க்ளஸ்டர் ஸ்பான்ஜ் உதவியுடன் நன்கு தேய்க்கவும். 10 - 15 நிமிடங்களுக்கு குளியல் பிரஷ் கொண்டு, அதன் உடல்முழுக்க நன்கு மசாஜ் செய்துவிடவும். பின், நீர் விட்டு நன்கு குளிப்பாட்டவும். அடுத்து செல்லப்பிராணியின் மீதுள்ள ஈரத்தை, டவலால் துடைத்துக் காயவிடவும்.

குறிப்பு: சூரிய ஒளிக்கு அடியில் வைத்து மட்டும் இதைச் செய்யவேண்டாம். துடைக்கும்போது, செல்லப்பிராணியின் கால்களை நன்கு துடைக்கவும்.

Dog
Dog
pixabay

உடல் பாதியளவு காய்ந்தவுடன், அவற்றுக்கென இருக்கும் பிரத்யேக பவுடர்களை அப்ளை செய்து விடவும். (குறிப்பு: தினமும் அப்ளை செய்யும் பவுடர், வாரம் ஒருமுறை அப்ளை செய்து விடும் பவுடர் என இருவகை பவுடர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன)

செல்லப்பிராணியின் மீதுள்ள ஈரம் முழுமையாகக் காய்ந்தபிறகு, ஏர் கண்டிஷன்டு க்ரூமிங் பிரெஷ் உதவியுடன், அதிகமாகப் போட்டு விட்ட பவுடரை நீக்கிவிடவும். அதோடு உதிர்கிற முடிகளையும் நீக்கி விடவும்.

* செல்லப்பிராணியின் தலையை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான வழிமுறையை கால்நடை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, பின் செய்யுங்கள். செல்லப்பிராணியின் தலைப்பகுதியை சுத்தப்படுத்தினால், காது சுத்தப்படுத்தும் கருவி உதவியுடன் அதன் காதுகளையும் பிரத்யேகமாக சுத்தப்படுத்தவும். மூன்று மாதங்களுக்குக் குறைவான குட்டிகளின் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்த வேண்டாம்'

Vikatan
cat
cat

குடற்புழு நீக்கும் மருந்துகள் தரும் முறை...

பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை - 15 நாள்களுக்கு ஒருமுறை கொடுக்கவும்

ஆறு முதல் ஒரு வயது வரை - 30 நாள்களுக்கு ஒருமுறை கொடுக்கவும்

ஒரு வயதுக்கு மேல் - 60 நாள்களுக்கு ஒருமுறை கொடுக்கவும்

குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

* செல்லப்பிராணியின் உடல் உள்ளுறுப்புகள் யாவும் பாதுகாக்கப்படும்.

* செல்லப்பிராணி மூலமாக மனிதர்களுக்குப் பரவும் அனைத்துப் பிரச்னைகள், 70 சதவிகிதம் தடுக்கப்படும்

* செல்லப்பிராணியின் சருமப்பிரச்னைகள், முடி உதிர்வு பிரச்னைகள், பசியின்மை சிக்கல்கள் தடுக்கப்படும்" என்கிறார் மருத்துவர் சரவணன்.

முறையாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டுமே, மனிதர்களின் மனதுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

அடுத்த கட்டுரைக்கு