Published:Updated:

நெற்றி, கன்னம், மூக்கு: முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை? #FaceMapping

முகப்பரு ( மாதிரிப்படம் )

உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நெற்றி, கன்னம், மூக்கு: முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை? #FaceMapping

உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Published:Updated:
முகப்பரு ( மாதிரிப்படம் )

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை பருக்கள் பாதிக்கலாம். குறிப்பாக, முகப்பரு வந்தாலே முகத்தை சுளித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர் பல டீன் ஏஜ் பெண்கள்.

ஆனால், நம் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் காரணிகளாகவும் சில நேரங்களில் முகப்பருக்கள் உள்ளன.

மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களாலேயோ மட்டுமே பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம்.

நமது முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வரும் பருக்கள், நமது ஆரோக்கியம் தொடர்பாக நமக்கு சில தகவல்களை மறைமுகமாகச் சொல்கின்றன. முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன பிரச்சனை? அவற்றுக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்...

Pimples (Representational Image)
Pimples (Representational Image)
Photo by Anna Nekrashevich from Pexels

இரண்டு புருவங்களுக்கு மத்தியில்

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நம் உடலில் உள்ள கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைக் காணலாம். சிலருக்கு உணவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையினாலும் இங்கே பருக்கள் உண்டாகும். இதனைத் தவிர்க்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேல் நெற்றி

உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கும் கிரீன் டீ, காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, கருநீலக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி மற்றும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

கீழ் நெற்றி

புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம். மனஅழுத்தம், மனச்சோர்வு, அத்துடன் சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் பருக்கள் ஏற்படும். இந்தப் பருக்கள் வந்தவர்கள், மூளையையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்திருக்கவும். வாரத்துக்கு நான்கு நாட்களுக்காவது உடற்பயிற்சி செய்யவும். தினமும் ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்கவும்.

காதுகள்

கஃபைன் மற்றும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால், காதுகளில் பருக்கள் தோன்றும். தவிர உடலில் நீர்த்தன்மை குறையும்போதும் தோன்றும். உணவில் உப்பை அளவாகச் சேர்த்துக்கொள்வதன் மூலமும், அதிக அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் இதைத் தடுக்கலாம்.

மூக்கு

இதயம் அல்லது ரத்த அழுத்தத்தில் பிரச்னை வரும்போது மூக்கில் பருக்கள் வரும். இதைப் போக்க, மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தியானம் அல்லது பிடித்த விஷயங்களில் நேரத்தைச் செலவிடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கன்னங்கள்

கன்னங்களுக்கும் குடல்களுக்கும் தொடர்பு உண்டு. அதிகமாக புகைப்பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும் கன்னத்தில் பருக்கள் வரலாம். உங்கள் தலையணை உறைகளில் உள்ள கிருமிகளாலும் கன்னங்களில் பருக்கள் பரவும். மூன்று நாள்களுக்கு ஒருமுறை தலையணை உறையைத் துவைப்பது சுகாதாரமானது. வெளியில் செல்லும்போது கூடுமான வரை துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லலாம். வீட்டுக்கு வந்ததும் சோப்பால் முகத்தை கழுவ வேண்டும்.

Skin care
Skin care
Representational Image

தாடை

ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் தாடைப் பகுதியில் பருக்கள் வரும். இந்தப் பருக்கள் உள்ளவர்கள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பீன்ஸ், கீரை போன்ற உணவுகளைச் சாப்பிடவும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளவும்.

கன்னங்களின் ஓரம்

இந்தப் பகுதி இனப்பெருக்க உறுப்புகளோடு தொடர்புடையது. உடலில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும்போது கன்னங்களின் ஓரத்தில் சிறியதாக பருக்கள் தோன்றும். பெண்களின் மாதவிடாய் காலங்களின்போது மட்டும் இந்த இடத்தில் பருக்கள் அதிகமாக வருவதைக் காணலாம். சிலருக்கு மாதவிடாய் காலத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே அதன் அறிகுறியாகப் பருக்கள் தோன்றும்.

முகத்தில் தோன்றும் பருக்களில் இவ்வளவு விஷயங்களா என்று மலைக்கிறீர்களா? ஆமாம், அவை நம் உடல் சுகாதாரம் தொடர்பான அறிகுறிகள். எனவே, உரிய முறையான வழிமுறையைப் பின்பற்றி முகப்பருக்களை போக்கலாம்!

- கி. சிந்தூரி