Published:Updated:

கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபி... தானமளிக்கத் தகுதியானவர்கள் யார்?

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த ஒருவர், தனக்கு தொற்று குணமடைந்து 14 நாள்களுக்குப் பிறகே பிளாஸ்மா தானம் அளிக்க முடியும்.

ந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா தொற்றால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கென்று குறிப்பிட்ட மருந்து, சிகிச்சை என இதுவரை எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு வகையான பிரத்யேக சிகிச்சைகளும், மருந்துகளும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

Plasma treatment
Plasma treatment

அதில் ஒன்றுதான் பிளாஸ்மா தெரபி. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடலிலிருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொருவரின் உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா தெரபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது.

`62 நாள்கள்;181 பக்க பில்; ரூ.8 கோடி கட்டணம்!’-கொரோனாவிலிருந்து மீண்டவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த ஒருவரின் பிளாஸ்மாவை தானமாகப் பெற்று, கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு செலுத்தி, இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு பெண், கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கும் நிலையில், அவர் குழந்தை பெற்றவராக இருக்கும் பட்சத்தில், அவரால் தன் பிளாஸ்மாவை இந்த சிகிச்சைக்குத் தானமாக அளிக்க முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்
ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்

குழந்தை பெற்ற பெண்களின் பிளாஸ்மா, கொரோனாவுக்கான பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளப்படாதது ஏன்? இவர்களின் பிளாஸ்மாவை சிகிச்சைக்குப் பயன்படுத்தினால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜனிடம் பேசினோம்.

பிளாஸ்மா தெரபி:

Plasma treatment (Representational Image)
Plasma treatment (Representational Image)

"ஏதேனும் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியம் கிருமியால் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைதான் 'பிளாஸ்மா தெரபி'. தற்போது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சைமுறை பரிந்துரை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு முழுமையாகக் குணமடைந்த ஒருவரின் உடல் ரத்தத்தில், அந்த நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். இந்த ஆன்டிபாடிகள், பிளாஸ்மா மூலமாகத் தொற்றுள்ள ஒருவருக்கு மாற்றம் செய்யப்படும்போது, அவருக்குள்ள நோய்த்தொற்று குணமாக நிறைய வாய்ப்புள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தைராய்டு பாதிப்பு - ஏன்? மருத்துவர் விளக்கம்

குழந்தை பெற்ற பெண்கள்:

mother
mother

இந்த சிகிச்சைக்கு, குழந்தை பெற்ற பெண்களால் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது. ஏனெனில், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் மனித லுகோசைட் ஆன்டிஜென்களுக்கு (HLA - Human leukocyte antigen) எதிராக ஆன்டிபாடிகள் உற்பத்தியாகின்றன. கருவில் உருவாகும் குழந்தையின் ரத்த வகைக்கு ஏற்ப இந்த ஆன்டிபாடிகள் அந்தப் பெண்ணின் ரத்தத்தில் உருவாகும். அந்தப் பெண் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்கிறாரோ அத்தனை குழந்தைகளின் ரத்த வகைக்குத் தகுந்தாற்போல வெவ்வேறு வகையான ஆன்டிபாடிகள் உற்பத்திசெய்யப்படும். குழந்தை பிறந்த பின்னும் இவை அந்தப் பெண்ணின் ரத்தத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்த ஆன்டிபாடிகள் பிளாஸ்மா வழியாக மற்றொருவரின் உடலுக்குள் செலுத்தப்படும்போது, யார் தானமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடலில் வீக்கம், அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்படலாம்.

Blood cells
Blood cells

குழந்தை பெற்ற ஒரு பெண், கொரோனா பாதிப்பிற்குள்ளாகி அதிலிருந்து மீண்டிருக்கும் பட்சத்தில், அவரின் உடலில் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். இந்த ஆன்டிபாடிகளை பிளாஸ்மா வழியாக, தொற்று உள்ள ஒருவருக்கு மாற்றும்போது ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட HLA ஆன்டிபாடிகளும் சேர்ந்தே செல்லும். இதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படலாம். கொரோனா தொற்று உள்ளவர்கள், ஏற்கெனவே நோய்எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்கள். இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களின் பிளாஸ்மா கொரோனா சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

பிளாஸ்மா தானம் - கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

* கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த ஒருவர், தனக்கு தொற்று குணமடைந்து 14 நாள்களுக்குப் பிறகே பிளாஸ்மா தானம் அளிக்க முடியும்.

* பிளாஸ்மா தானம் அளிப்பவர்கள், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

* பிளாஸ்மா தானம் அளிப்பவர்களின் உடல் எடை 50 கிலோவிற்கும் மேலாக இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு 8-க்கு மேலாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* நாள்பட்ட சிறுநீரக, இதய, நுரையீரல் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யக்கூடாது. புற்றுநோயிலிருந்து மீண்டவர்களும் பிளாஸ்மா தானம் செய்யக் கூடாது" என்றார், ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்.

அடுத்த கட்டுரைக்கு