Published:Updated:

கொரோனா பிரிவில் பணியாற்றியதால் பாதிப்பு... நோயிலிருந்து மீண்டு பிளாஸ்மா தானமளித்த இளைஞர்!

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

வீட்டிலும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டார். அவருக்கு எந்தவொரு பாதிப்பும் மீண்டும் வரவில்லை.

தமிழகத்திலயே முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனை தயாராகிவிட்டது. இதற்காக பிளாஸ்மா தானம் வழங்கிய தூய்மைப் பணி செய்த இளைஞர் பாராட்டப்பட்டு வருகிறார்.

பிளாஸ்மா சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பல்வேறு நாடுகள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரம் கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் பிளாஸ்மா மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தலாம் என்பதால் தற்போது பிளாஸ்மா சிகிச்சை பல்வேறு நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும் மருத்துவத் துறையினர் பிளாஸ்மா சிகிச்சையில் ஆர்வம் காட்டினார்கள். கடந்த ஏப்ரல் 14-ல் முதன் முதலாக டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நல்லவிதமாக குணமடைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அதில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கருதிய ஐ.சி.எம்.ஆர், இதை முழுமையான சிகிச்சை முறை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சோதனை அடிப்படையில் வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று இச்சிகிச்சைக்குத் தற்காலிகத் தடை விதித்தது.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில்தான் தற்போது நாட்டிலுள்ள 28 மருத்துவமனைகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். அதில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையும் ஒன்று. தமிழகத்தில் முதல் கொரோனா மரணம் மதுரையில்தான். அந்தவகையில் மதுரையில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பத்தில் அதிகம் இருந்தது. தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இராசாசி மருத்துவமனை கொரோனா சிறப்புப் பிரிவில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். அவர் இங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து 15 நாள்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டிலும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டார். அவருக்கு எந்தவொரு பாதிப்பும் மீண்டும் வரவில்லை.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

அவர் தற்போது மற்ற நோயாளிகளைக் குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்வதாக மருத்துவ அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து அவரிடமிருந்து 500 மில்லி பிளாஸ்மா எடுக்கப்பட்டுள்ளது. அவர் உடலிலிருந்து 750 மில்லி ரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ள 500 மில்லி பிளாஸ்மா ரத்த வங்கியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இனி கொரோனாவினால் சீரியஸ் நிலைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா மூலமும் சிகிச்சை அளிக்கப்படும் என்கிறார்கள்.

பிளாஸ்மா வழங்கிய இளைஞர், மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகத் தூய்மைப் பணியாளராகத்தான் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கொரோனா பிரிவில் பணிபுரிய வந்த இடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, குணமடைந்து நடந்தவை பற்றிக் கவலைப்படாமல் மற்றவர் குணமடைய, தன் பிளாஸ்மாவை தானம் செய்ய முன் வந்த அவரை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

கொரோனா பிரிவில் ரோபோ அறிமுகம்
கொரோனா பிரிவில் ரோபோ அறிமுகம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதுபற்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணியிடம் பேசினோம் "பிளாஸ்மா சிகிச்சைக்காக ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்த மருத்துவமனைகளில் இராசாசி மருத்துவமனையும் ஒன்று. தற்போது பிளாஸ்மாவை ஒரு டிரையலாகத்தான் பயன்படுத்த உள்ளோம். இதுவே முழுமையான சிகிச்சை அல்ல. தேவைப்படும் நோயாளிகளுக்குச் செலுத்திப் பார்ப்போம். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். வேறு யாரிடமும் பிளாஸ்மா எடுக்கவில்லை. இதன் மூலம் நல்ல ரிசல்ட் கிடைத்தால் பரிசோதனையைத் தொடர்வோம்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு