போர்ச்சுக்கல்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர் இரு நாள் கழித்து உயிரிழப்பு!

இந்தத் தடுப்பூசியானது பாதுகாப்பானதோடு 90 சதவிகிதத்துக்கும் மேல் செயல்திறனுள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
கோவிட்-19 தடுப்புக்காக அமெரிக்க நிறுவனமான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு முப்பது நாடுகளுக்கும் மேல் அனுமதியளித்துள்ளன. பல்வேறு நாடுகள் அவர்களது நாட்டிலுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சோனியா அசிவிடோ என்ற 41 வயது செவிலியர் தடுப்பூசி போட்ட 48 மணி நேரத்துக்குப் பிறகு அவரது வீட்டில் திடீரென உயிரிழந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்தார். அவர் திடீரென உயிரிழந்ததாக `டெய்லி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தாண்டுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் அவருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 538 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டதும் `கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டேன்' என்ற வரிகளுடன் மாஸ்க் அணிந்தவாறு எடுத்த செல்ஃபியை சோனியா பதிவேற்றியிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள டெய்லி மெயில் ஊடகத்திடம் பேசியிருக்கும் சோனியாவின் தந்தை, ``சோனியாவுக்கு எவ்வித மருத்துவப் பிரச்னைகளும் இல்லை. அவள் நன்றாகத்தான் இருந்தாள். கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்குப் பிறகும் எவ்வித அறிகுறிகளும் இல்லை. திடீரென என்ன நடந்ததென்றே தெரியவில்லை. டிசம்பர் 31-ம் தேதி இரவுதான் என்னுடன் புத்தாண்டு கொண்டாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டுக்குச் சென்றாள். அதற்குப் பின் என் மகளை நான் உயிருடன் பார்க்கவில்லை. காலை 11 மணியளவில் அவள் இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
சோனியாவின் மகள் பேசும்போது, ``தடுப்பூசி போட்ட இடத்தில் சிறிது அசௌகர்யம் இருந்ததாகவே அம்மா என்னிடம் தெரிவித்தார்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து சோனியா பணியாற்றிய மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு தடுப்பூசி கொடுத்த பின்னரும் அதற்குப் பிறகும் அவருக்குப் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. உடற்கூராய்வு உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகே இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியானது பாதுகாப்பானதோடு 90 சதவிகிதத்துக்கும் மேல் செயல்திறனுள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.