Published:Updated:

வருகிறது கொரோனா ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட்? சாதக, பாதகங்களை அலசும் மருத்துவர்

 Rapid Test Kit
Rapid Test Kit

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வரும் புதன்கிழமை முதல் கோவிட் - 19 தொற்றைக் கண்டறிய அதிவிரைவுப் பரிசோதனையைப் ( Rapid Testing) பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க `ஸ்வாப் டெஸ்ட்' என்ற பரிசோதனை முறையே நம் மாநிலத்தில் செய்யப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் சுரக்கப்படும் நீர், ஸ்வாப் பரிசோதனைக்காக எடுக்கப்படும். மேலும், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிக்கு இடையில் (Nasopharayngeal Swab) உள்ள மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase Chain Reaction- PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

கொரோனா
கொரோனா
மாதிரி புகைப்படம்

இதில், நோயாளியின் மாதிரியில் ஒரு வைரஸ் இருந்தால்கூட, அதன் தன்மையை அறியச்செய்யும். வைரஸின் நோய் அரும்பு காலத்திலேயே (Incubation period), அதாவது அறிகுறிகளற்ற முதல் 14 நாள்களிலேயே இந்த நோய்த்தொற்றை அறியலாம். இதன் மூலம், நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும் முன்னரே நோயை அறிய இந்தப் பரிசோதனை கைகொடுக்கும்.

இந்தப் பரிசோதனையில் நம்பகத்தன்மை அதிகம். பரிசோதனை முடிவுகள் இரண்டு மூன்று மணி நேரத்தில் கிடைத்துவிடும். ஆனால், இதைவிடவும் விரைவாகப் பரிசோதனை செய்து தொற்றை உறுதிசெய்ய ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் உதவும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 Rapid Test
Rapid Test

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வரும் புதன்கிழமை முதல் கோவிட் - 19 தொற்றைக் கண்டறிய அதிவிரைவுப் பரிசோதனையைப் ( Rapid Testing) பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

"கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.... இந்தியாவில் குறைவு என்பது சரியா?" - மருத்துவர் விளக்கம்

ஐ.சி.எம்.ஆரின் தலைவர் ராமன் ஆர். கங்காகேத்கார் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது, ``தற்போது கோவிட் 19-ஐக் கண்டறிய பி.சி.ஆர் (PCR) பரிசோதனை முறைப்படி செய்யப்படுகிறது. இத்துடன் அதிவிரைவுப் பரிசோதனையையும் (Rapid test) வரும் புதன்கிழமை முதல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பரிசோதனை, பாதிப்பு அதிகமிருக்கும் பகுதிகளிலும், வெளிமாநிலத்திலிருந்து வந்து முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கும் செய்யப்படுகிறது.

 Rapid Test Kit
Rapid Test Kit

பரிசோதனை முடிவை விரைவாகத் தெரிந்துகொள்ள உதவும் Rapid Test எவ்வாறு செய்யப்படுகிறது... அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என்பது குறித்து நெஞ்சகத்துறை மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தரிடம் பேசினோம்.

`` `அதிவிரைவுப் பரிசோதனை ( Rapid Test ) முறை என்பது டெங்கு, குழந்தை உருவானதைக் கண்டறிதல் போன்ற சோதனைகளுக்குப் பயன்படுகிறது. தற்போது, கோவிட் 19 தொற்றை உறுதிசெய்யவும் இது பெரிய அளவில் உதவும்.

மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்
மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றால், அந்த வைரஸில் உள்ள எதிர்ப்புத் திறனூட்டியை ( Antigen) எதிர்க்க, அவர் உடலில் எதிர்ப்புரதம் (Antibody) உருவாகும். IgM, IgG என்ற ஆன்டிபாடீஸ் உருவாகும். ரேபிட் பரிசோதனைப் பெட்டகம் அந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு நோயாளியின் ரத்தம், பிளாஸ்மா மற்றும் சீரம் ஆகியன மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.அந்த மாதிரிகளில் IgM, IgG ஆன்டிபாடீஸ் இருப்பின், அந்த பரிசோதனைப் பெட்டகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறம் மாறும். இந்த நிறப் பகுப்பியல் சோதனை (Chromatographic Technique) மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும்.

இம்போர்ட்டட், லோக்கல், கம்யூனிட்டி, எபிடெமிக்... நான்கு வகை கொரோனா கடத்திகள்... மருத்துவர் விளக்கம்!

பயிற்சிபெற்றவர் என்றில்லாமல், இந்தப் பரிசோதனையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பரிசோதனைக்கான செலவும் குறைவு. ஒரு பரிசோதனை அட்டையின் (strip) விலை 50 ரூபாய்தான். பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்துகொள்ள முடிவதால் நேர விரயமில்லை. நிறைய மக்களுக்கு குறைந்த நேரத்தில் பரிசோதனை செய்துவிடலாம். அறிகுறி உள்ளவர், இல்லாதவர்கள், தொற்று உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம்.

Representational Image
Representational Image

ஆனால், இந்தப் பரிசோதனையின் நம்பகத்தன்மை PCR பரிசோதனையைவிடக் குறைவு. காரணம், ஒருவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி இருந்தால் மட்டுமே இந்தப் பரிசோதனை பாசிட்டிவ் ஆகும். அவருக்குத் தொற்று இருந்தும் ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்பே பரிசோதனை செய்தால், பரிசோதனை நெகட்டிவ்வாகத்தான் இருக்கும்.

PCR பரிசோதனையில், முடிவுகள் வர இரண்டு மூன்று மணி நேரம் ஆகும். ஆனால், Rapid Test முடிவுகள் உடனே கிடைக்கும் என்பது இதில் சாதகமான ஒரு விஷயம்" என்கிறார் மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்.

அடுத்த கட்டுரைக்கு