Published:Updated:

``கலக்கமே தேவையில்லை... முதியவர்களே உற்சாகமாக இருங்கள்!" - சித்த மருத்துவர் #FightCovid-19

முதுமை
முதுமை

கொரோனா அச்சத்தில், முதியவர்கள் தங்களுக்கு ஏற்கெனவே உள்ள நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைச் சிதறவிடக்கூடாது.

பல சேனல்களில் பிரேக்கிங் நியூஸ். ’மேலும் ஒரு முதியவர் கொரோனாவால் பாதிப்பு…!’ அதுவும் திகிலூட்டும் BGM உடன் வெளியாகும்போது, அதைப் பார்க்கிற கேட்கிற ஒரு முதியவரின் மனநிலை எப்படி இருக்கும்? முதியவர்களின் மன உறுதி நிச்சயம் சற்று ஆட்டம் காணவே செய்யும்.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

முதியவர்களின் மனநிலையை இரு வகையாகப் பிரிக்கலாம்.

எனது சித்த மருத்துவப் பிரிவுக்கு வரும் முதியவர்களிடம் கொரோனா பற்றிக் கேட்டபோது, பெரும்பாலான முதியவர்களின் பதில் ‘அது ஏதோ கிருமியாம்... காத்துல பரவுதாம். அது என்னவா இருந்தா என்ன... நம்மள ஒண்ணும் பண்ணாது. இந்த முட்டி வலிக்கும் அரிப்புக்கும் மருந்து கொடுங்க...’ என்பதாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் முதல் ரகம். கிராமத்தில் வசிக்கும் இவ்வகையான முதியவர்கள் மெத்தப்படித்தவர்கள் அல்லர். கொரோனா சூழலில் கவலை இல்லாமல் இருக்கிறார்கள்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்!

இரண்டாம் ரகம்... வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக ’அப் – டு – டேட்’ ஆக இருக்கும் முதியவர்கள். இவர்களுக்குப் பல்வேறு சிந்தனைகள் கொரோனா சார்ந்து இருக்கும். முதியவரான நம்மை கொரோனா தாக்கிவிடுமோ, நாம்தான் அதற்கு இலக்கோ எனப் பல கேள்விகள் இவர்களுக்குள். மனதளவில் வலிமை இழந்து காணப்படுவர்.

சரி இப்போது ஒரு கேள்வி? யார் மனதளவில் ஆரோக்கியமானவர்கள்? அந்த கிராமத்தினரா, இந்த மெத்தப்படித்தவர்களா?!

அது இருக்கட்டும். இப்போதைய சூழலில் முதியவர்கள் செய்ய வேண்டியது என்ன?

95 வயது முதியவர் ஆன்டோனியோ ஃபின்னெல்லி
95 வயது முதியவர் ஆன்டோனியோ ஃபின்னெல்லி

ஓர் உண்மை சொல்லட்டுமா? இப்போது இருக்கும் முதிய தலைமுறையே ஓரளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கடைசித் தலைமுறை! 20 வருடங்கள் கழித்து இந்த நோயின் தாக்கம் இருக்குமானால், இப்போதைய இளைஞர் கூட்டம் முதியவர்களாக மாறும் போது, தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்களா? ஹ்ஹூம்ம்ம்!

ஆக, கலங்காதீர்கள் முதியவர்களே. நீங்கள் இளவயதில் ஆரோக்கியமாகச் சாப்பிட்ட உணவுகள் இப்போது உங்களுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும்!

Vikatan

கொரோனா அச்சத்தில், முதியவர்கள் தங்களுக்கு ஏற்கெனவே உள்ள நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைச் சிதறவிடக்கூடாது. இதுவரை பின்பற்றிவந்த வாழ்க்கை முறை, உணவியல் முறை போன்றவற்றை இப்போதைய சூழலிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 'கொரோனாவே வரப்போகுது... இனி சுகர் என்ன, பி.பி என்ன...’ என்று சோர்வடையாதீர்கள்! வீட்டுக்கு வெளியே செல்ல முடியாவிட்டாலும், உள்ளேயோ அல்லது மாடியிலோ நடைப்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்வது அவசியம்.

சளி, இருமல் தொந்தரவுகள் இருப்பின் கொரோனா என அச்சப்பட வேண்டாம். முதிய வயதில் அவ்வப்போது கபம் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படுவது இயல்பே. உங்கள் குடும்ப மருத்துவரைத் தொடர்புகொண்டு தெளிவடையுங்கள். தூதுவளை, ஆடாதொடை எனக் கணக்கிலடங்கா மூலிகைகள் முதியோர் நலம் காக்க நம்மிடம் இருக்கின்றன.

முதுமை
முதுமை
Pixabay

மகன்களுக்கும் மகள்களுக்கும் சில வார்த்தைகள். வயதான உங்கள் பெற்றோருக்கு இப்போதைய சூழலில் நம்பிக்கையும் அரவணைப்பும் தேவை. எனவே, ஊரில் தனித்தோ, முதியோர் இல்லங்களிலோ பெற்றோரை விட்டிருக்கும் பிள்ளைகள், அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்துவந்து பார்த்துக்கொள்ளுங்கள். அம்மா, அப்பாவோடு நேரம் செலவழிக்கத் தவறிய நேரமில்லா இளைஞர்கள், அந்தக் குறையை இப்போது தீர்த்துக்கொள்ளுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

`தாத்தா இத சாப்பிடுங்க...' அன்பு கசிந்த நிமிடம்! - ரயில்பெட்டிக் கதைகள்

’கொரோனாவால் முதியவர் மரணம்...’ எனும் செய்தி டிவியில் வந்தால், அந்தச் சேனலை மாற்றி, ’கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர், நலம் பெற்று வீடு திரும்பினார்...’, ’75 வயது ஜெய்ப்பூர் முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் தேறினார்...’ போன்ற நேர்மறைச் செய்திகளை உங்கள் பெற்றோர்களுக்குக் காட்சிப்படுத்துங்கள். தாத்தா, பாட்டி - பெயரன், பெயர்த்தி இடையே மரபுக் கடத்தல் நடைபெற இப்போது நமக்குப் போதுமான நேரம் கிடைத்திருக்கிறது. வழிவகை செய்யுங்கள் இளைய பெற்றோர்களே!

கொரோனா
கொரோனா

முதியவர்களே... பதற்றமடையாமல் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். எம்.எஸ்.வி பாடல்கள் உங்களைத் தாலாட்டவிடுங்கள். புத்தகங்களால் உங்களுக்கு இளமையூட்டுங்கள். கதை சொல்லிகளாக மாறி, பெயரன் பெயர்த்திகளுக்கு அனுபவமூட்டுங்கள். பழைய மரபு பேசி, இந்தத் தலைமுறைக்கு ஆசான்களாக மாறுங்கள். இது நீங்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டிய நேரம். உங்கள் அனுபவ ஆட்டம் தொடங்கட்டும்.

வயதானவர்களே... இப்போது நீங்கள்தான் ஹீரோ, ஹீரோயின். நீங்கள்தான் ராஜா, ராணி. வீடு உங்கள் ராஜாங்கம். ஆட்சி நடத்துங்கள். கொரோனா சில நல்ல விஷயங்களையும் கற்றுக்கொடுத்துவிட்டுப் போகட்டும், உங்கள் மூலமாக!

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!  #FightCovid-19
அடுத்த கட்டுரைக்கு