Published:Updated:

கொரோனா: நீண்டகால பாதிப்பு முதல் அக்டோபர் அச்சம் வரை... இனிதான் நாம் ரொம்ப உஷாரா இருக்கணும்!

ஊரடங்கிற்குப் பிறகு...
ஊரடங்கிற்குப் பிறகு...

எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு 14 நாள்களுடன் முடிந்துவிடுவதில்லை. சிலருக்கு நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தின. மிகுந்த கட்டுப்பாட்டுடன் தொடங்கிய ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு தற்போது பேருந்து, ரயில் சேவைகள் இயங்கத் தொடங்கியதுடன் வழிபாட்டுத் தலங்கள் முதல் சலூன்கள் வரை அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்க தளர்வு காரணமாகச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இன்னொரு பக்கம், கொரோனா நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஊரடங்குத் தளர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் பொது மருத்துவருமான டாக்டர்.முகமது ரபியிடம் பேசினோம்.

மெத்தனம் கூடாது... எச்சரிக்கை தேவை!

``மக்கள் தொழில் செய்வது, சம்பாதிப்பது மட்டும் முக்கியமல்ல. அவர்கள் உயிரோடு இருக்க வேண்டியதுதான் மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் என்பது யாரிடம் இருந்தும் யாருக்கும் பரவும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

டாக்டர் முகமது ரபி
டாக்டர் முகமது ரபி

நோய்த்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் பொதுமக்களிடம் இருந்த எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டன. சிலர், `கொரோனா என்ற ஒரு நோய்த் தொற்றே கிடையாது’ என்று சொல்லும் அளவுக்கு மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் நாம் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் வீட்டிலும், நம்மைச் சுற்றியும் இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் என எல்லோரையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். அதனால் நம்மால் பிறர் துன்பப்படக் கூடாது என்கிற கவனத்துடன் இருக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளபடி அடிக்கடி கை கழுவ வேண்டும். சாதாரண சோப்பு கொண்டுகூட கையைக் கழுவலாம். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சிறிய பாட்டில்களில்கூட சானிடைசர் கிடைப்பதால் கையோடு எடுத்துச் சென்று அவசியப்படும்போதெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நோயுடன் வாழக் கற்றுக்கொள்வோம்!

கொரோனாவுக்கு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்னரே நோய்த்தொற்று மறையும். அதனால் இன்னும் சில மாதங்களுக்கு நோயுடன் வாழப் பழகிக்கொள்வதுடன், நோய் நம்மை தாக்காத அளவுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தனி மனித இடைவெளி, கையுறை அணிவது, முகக்கவசம் அவசியம்.

இவையெல்லாம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், சிலர், `கொரோனா வந்தா ஆஸ்பத்திரிக்கு போய்வந்துக்கலாம்' என்ற அசட்டு தைரியத்துடன் இப்போது இருக்கிறார்கள். ஆனால், இது யாரை எந்தளவுக்கு பாதிக்கும், யாருக்கு உயிரிழப்புவரை ஏற்படுத்தும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளும் முனைப்புடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கிற்குப் பிறகு...
ஊரடங்கிற்குப் பிறகு...

நீண்டகால உடல்நல பாதிப்புகள்

மேலும், எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு 14 நாள்களுடன் முடிந்துவிடுவதில்லை. சிலருக்கு நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், காசநோய் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுத்துவதைவிடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் திசுக்களில் பாதிப்பு ஏற்படுவதால் இதய பாதிப்பு உருவாகும். கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகும் நுரையீரல் பாதிப்பு சரியாகாவிட்டால் ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் இதயம் செயலிழக்கும் நிலைமை உண்டாகலாம். அதனால் நோய் பாதிப்பு ஏற்படாதபடி எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.

சலூன்களுக்குச் செல்வது பாதுகாப்பானதா?

மனிதனுக்கு உயிர் முக்கியம். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். இது ஆபத்தானது. சலூன்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஏ.சி இல்லாத கடைகளுக்குச் செல்ல வேண்டும்.

ஊரடங்கிற்குப் பிறகு...
ஊரடங்கிற்குப் பிறகு...

உடலை மூடிக்கொள்வதற்கான துணியை நீங்களே வீட்டிலிருந்து கொண்டு செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்ததும் அந்தத் துணியை சோப்புத் தண்ணீரில் ஊற வைத்து துவைக்க வேண்டும். அதேபோல, கத்தரி, சீப்பு, டவல் என்று உங்களுக்கான பெர்சனல் சலூன் கிட் ஒன்றை வாங்கி, சலூன் செல்லும்போது எடுத்துச் சென்று, உங்களுக்கு ஹேர்கட் செய்ய அதையே பயன்படுத்தச் சொல்லலாம். முடி வெட்டுபவரை கையுறை, மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள்.

சலூன்களில் காத்திருக்கும்போது உள்ளே அமர்ந்து இருக்காமல் வெளியில் காற்றோட்டமான இடத்தில் இருங்கள். கொரோனா வைரஸ் மூக்கு, வாய் வழியாக மட்டுமல்லாமல் கண் வழியாகவும் செல்லும் என்பதால் சலூன் சர்வீஸின்போது கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள்.

ஊரடங்கிற்குப் பிறகு...
ஊரடங்கிற்குப் பிறகு...

சலூன்களில் வழக்கமாக, காத்திருப்போருக்காக பேப்பர், புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதைப் பலர் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்பதால் தொடாதீர்கள். அவசியம் இல்லாமல் எந்த இடத்திலும் கை வைக்காமல் சலூனில் இருந்து திரும்பிச் செல்லுங்கள்.

வழிபாட்டுத் தலங்களில் என்ன செய்ய வேண்டும்?

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோயில், சர்ச், மசூதிகளில் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிபாடு அவசியம் என்றாலும் அதிகக் கூட்டம் இருந்தால் சிறிது நேரம் காத்திருந்து உள்ளே செல்வதே நல்லது. அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு தெரிவித்துள்ளது. அதைப் பின்பற்றத் தவறாதீர்கள்.

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

கடவுளைத் தரிசிக்க வேண்டும், வழிபாடு நடத்த வேண்டும் என்பதற்காகக் கூட்டத்துக்குள் முண்டியடிப்பதைத் தவிருங்கள். தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள். குழந்தைகள், வயதானவர்கள் இன்னும் சில வாரங்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.

பொது இடங்களில் அலைமோதும் கூட்டம்!

பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத போதிலும், ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டதால் நிறைய இளைஞர்கள் சாலையில் சுற்றுகிறார்கள். அது நல்லதல்ல. ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதுபோல மாஸ்க் கட்டாயமாக்கப்பட வேண்டும். மூக்கு, வாயை மூடுவதற்கு மாஸ்க் பயன்பட வேண்டுமே தவிர கழுத்தில் தொங்கவிடுவதற்கு அல்ல.

பேருந்துகள் இயக்கம்
பேருந்துகள் இயக்கம்

நமக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்படாது என யாரும் நினைக்கக் கூடாது, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பேருந்துகள், ரயில்களில் செல்லும்போது ஓர் இருக்கை விட்டு அடுத்த இருக்கையிலேயே அமர வேண்டும்.

அக்டோபர் அச்சம்

பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மார்க்கெட், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் சேரக் கூடாது. மக்கள் நோய்த் தொற்றைத் தேடிச் சென்று ஏற்கக் கூடாது.

அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உச்சம் அடையலாம் என்று கூறப்படுகிறது. அந்நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சைக்கான இட வசதி இல்லாத சூழல் ஏற்படும். அத்துடன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அதனால் சிகிச்சை கிடைக்காத நிலைமை உருவாகும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார் டாக்டர்.

அடுத்த கட்டுரைக்கு