Published:Updated:

பரவும் டைபாய்டு காய்ச்சல்... தற்காத்துக்கொள்வது எப்படி?

அசுத்தமான நீரை அருந்துவதே டைபாய்டு காய்ச்சல் பாதிப்பதற்கான முதல் காரணம். எனவே, நீர் அருந்தும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சி ஆற வைத்து, வடிகட்டிய நீரை அருந்துவது மிகவும் நல்லது.

Typhoid
Typhoid ( pixabay )

வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில நாள்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சலில் தொடங்கி டெங்கு, டைபாய்டு போன்றவை மக்களை பாதித்துவருகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகப் பரவும் தொற்றுநோய்களில் ஒன்றான டைபாய்டு காய்ச்சலால் பலரும் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர்.

Typhoid
Typhoid
pixabay

'டைபாய்டு காய்ச்சல் பாதிக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?' என்று பொதுநல மருத்துவர் சிவராமக் கண்ணனிடம் கேட்டோம்.

`` அசுத்தமான நீரை அருந்துவதே டைபாய்டு காய்ச்சல் பாதிப்பதற்கான முதல் காரணம். எனவே, நீர் அருந்தும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சி ஆற வைத்து, வடிகட்டிய நீரை அருந்துவது மிகவும் நல்லது. முதல் மழை பெய்கிறது, மறுநாள் வெயில் அடிக்கிறது என்பதால், சிலர் ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரைக் குடிக்கிறார்கள். இன்னும் சிலர் சூடான நீருடன் குளிர்ந்த நீரையோ சாதாரண நீரையோ கலந்து குடிப்பார்கள். அது மிகவும் தவறானது. டைபாய்டு காய்ச்சல் வர இத்தகைய தவறான பழக்கங்களும் ஒரு காரணம்.

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. அப்படிச் சாப்பிட்டால் டைபாய்டு காய்ச்சல் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில், புதிதாகத் தயாரித்த சூடான உணவுகளை உண்பதே நல்லது. டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டால், உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுகள் தேவையில்லை. காரம் இல்லாத, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொண்டால் போதுமானது.

Typhoid
Typhoid
pixabay
Typhoid
Typhoid

காய்ச்சல் வந்த முதல்நாளே அது டைபாய்டுதானா என்று கண்டுபிடிக்க முடியாது. 3-வது மற்றும் 7-வது நாளில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். முறையான சிகிச்சை பெறாவிட்டால், சிறுகுடல் பகுதி அரித்து ஓட்டை விழுமளவுக்குப் பிரச்னை ஏற்படவும், மீண்டும் காய்ச்சல் வரவும் வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவு, நீர் விஷயத்தில் கவனம் செலுத்தினால் டைபாய்டு காய்ச்சலிலிருந்து முழுமையாகக் குணமடையலாம்.

இப்போது, டைபாய்டு காய்ச்சலுக்குத் தடுப்பூசி வந்திருக்கிறது. முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதன்மூலம் காய்ச்சல் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்'' என்றார்.