Election bannerElection banner
Published:Updated:

கர்ப்பப்பை வலுவிழப்பு, ரத்தசோகை.... இளவயதில் கருத்தரிக்கும் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகள்!

இளவயது கர்ப்பம்
இளவயது கர்ப்பம் ( pixabay )

இளம்வயதில் குழந்தை பெற்றால் கருப்பை வலுவிழக்கும்! அலெர்ட்.

மக்கள்தொகை அதிகரிப்பு பற்றி ஆண்டுதோறும் விவாதிக்கப்படுகிறது. நவீன கருத்தடை முறைகள், கருத்தடை உபகரணங்கள் பற்றியும் விவாதிக்கிறோம். ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பதன் பின்னணியில் பாதிக்கப்படும் பெண்களின் உடல்நலம் பற்றி யாரும் அவ்வளவாகப் பேசுவதில்லை. மக்கள்தொகை பெருகுவதற்கும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, கிராமத்து இளம்பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைப்பேறு குறித்த முறையான விழிப்புணர்வு, கிராமங்களில் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

இளவயது கர்ப்பம்
இளவயது கர்ப்பம்
pixabay

திருமணம் நடக்கவேண்டிய வயதில், மூன்று நான்கு குழந்தைகளைப் பெற்று நிரந்தர கருத்தடை செய்யுமளவுக்கு கிராமங்களில் உள்ள பெண்கள் தயாராகிவிடுகின்றனர். இப்போதும்கூட ஆங்காங்கே குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த அளவுக்கு பெண்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வில் நாம் பின் தங்கியிருக்கிறோம்.

முதல் குழந்தையை கருவில் சுமந்தபடி மருத்துவமனை வரும் ஒரு பெண், ஓரளவு ஆரோக்கியமாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அதுவே இரண்டாம் கருவை சுமந்துகொண்டு வரும்போது, பெரும்பாலான கிராமத்துப் பெண்கள் சோர்வுற்று வலுவிழந்து காணப்படுகின்றனர். காரணம், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் போதிய இடைவெளி விடாமல் தாய்மைக்குத் தயாராவதுதான். இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

`இரண்டு பிரசவங்களுக்கும் நடுவே குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும்'

போதிய இடைவெளி இல்லாமல் அடுத்த குழந்தைக்குத் தயாராவதற்கான காரணங்கள்குறித்து அறிய கள ஆய்வு நடத்தியபோது, பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. இரண்டு பிரசவங்களுக்கும் நடுவே குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும் என்ற தெளிவோ விழிப்புணர்வோ கிராமங்களில் இல்லை. முதல் குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பு தானாக நிற்பதற்கு முன்பே அடுத்த தாய்மைக்குத் தூண்டும் கணவன்கள் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர், முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால், ஆண் குழந்தை வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். சிலர், முதல் இரண்டு பிரசவங்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகையைப் பெறுவதற்காக தங்கள் மனைவியரை வற்புறுத்துகிறார்கள். கணவனின் ஆசையை நிறைவேற்றவில்லையென்றால், அவர் வேறு திருமணம் செய்துவிடுவாரோ என்ற பதற்றத்தில் பெண்ணும் தனது உடல்நிலை பற்றி கவலைப்படாமல் கருத்தரிக்க சம்மதிக்கிறார். குடிபோதையில் கணவன்களால் சில பெண்கள் பாலியல் வலியுறுத்தலுக்கு உட்பட்டு, குழந்தை உருவாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

கருக்கலைப்பு
கருக்கலைப்பு
Pixabay

கருத்தடை சாதனங்கள் பற்றி போதுமான தெளிவு இல்லாததால் அடிக்கடி கருவுறுகின்றனர். பொய்யான தகவல்களை நம்புவது, ஆண்களுக்கு தற்காலிக கருத்தடை செய்வது சுலபமானது மற்றும் பாதுகாப்பானது என்றபோதும், அதை ஆண் வர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நிரோத் பயன்படுத்துவது சுலபம் என்றாலும், அதில் முழுமை பெறமுடியாது என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. இவை அனைத்தும் இளம் பெண்களின் நலத்தின்மீது வன்முறை நிகழ்வதற்கான காரணங்களாகும். இயற்கை முறையிலான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். காப்பர் – டி, கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றைப் பின்பற்றி, தேவைப்படும் இடைவெளியில் குழந்தைப்பேற்றை பெறலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் அப்படி நிகழ்வதில்லை.

Vikatan

ஒரு குடும்பத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வரை போராடும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்பத்துக்காக பெண்களை கர்ப்பமாக்கிவிட்டு, கருக்கலைப்பு செய்யுமாறு பெண்களைத் தூண்டும் கணவன்மாரும் இங்கே உண்டு. கருக்கலைப்பு என்பது மற்றொரு பிரசவம் மாதிரி. அதனால் ஏற்படும் உடல், மனம் சார்ந்த பாதிப்புகள் பற்றி அறிய, சமீபத்தில் கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்! அதன் வலியும் வீரியமும் புரியும். பெண்ணை ஒரு பொருளாக பாவிக்கும் ஆண்களால் ஏற்படும் தொந்தரவுகள் அதிகம். பெண்களின் உடல் நிலைபற்றி கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் ஆண்கள் செயல்படுவது மிகப்பெரிய தவறு.

கருக்கலைப்பு என்பது மற்றொரு பிரசவம் மாதிரிதான். சமீபத்தில் கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்! அதன் வலியும் வீரியமும் புரியும்.
மருத்துவர் விக்ரம்குமார்

மக்கள்தொகை சார்ந்து பெண்கள் சந்திக்கும் மற்றொரு முக்கியப் பிரச்னை இருக்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்றால், சில கிராமங்களில் குடும்பத்தில் உள்ள மூத்த தலைவன்/தலைவியின் வசைபாடலுக்கு ஆளாக வேண்டும். பெண்பிள்ளை பெற்றதற்கு தாய் (பெண்) மட்டுமே காரணம் என்பார்கள். உண்மையில், ஆண்களிடமே பெண் குழந்தை உருவாவதற்கான குரோமோசோம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஆணாதிக்க சமுதாயம் என்பதால், பழியை ஏற்றுக்கொள்வதில்லை.

மக்கள் தொகை அதிகரிப்பதால் தனி குடும்பமும் சரி, சமுதாயமும் சரி, பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பால் பாதிக்கப்படும் மிக முக்கியமான உயிர் பெண் என்பதை எப்போது உணரப்போகிறோம். போதுமான இடைவெளி இல்லாமல் அதிக குழந்தைகளைப் பெறும்போது, இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலுவிழப்பது, உடல் நலிவடைவது, ரத்தசோகை குறிகுணங்கள் அதிகரிப்பது என பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

டீன் ஏஜ் கர்ப்பம்
டீன் ஏஜ் கர்ப்பம்
Pixabay

ஏற்கெனவே, இப்போதிருக்கும் இளம் கர்ப்பிணிகளுக்கு ரத்தக் குறைவு, பனிக்குட நீர் குறைவு எனப் பல குறைபாடுகள். இதில் பிரசவம் சார்ந்து தெளிவில்லாமல் இல்லற வாழ்க்கையில் பயணப்பட்டால், ஆரோக்கியமான சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தே. பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

மனைவிமீது அன்பும் பாசமும் அதிகமாக இருக்கும் கணவன்களும், விவரங்களைத் தெளிவாக புரிந்து மனைவியை நேசிப்பவர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்களது எண்ணிக்கை சில நேரங்களில் குறைவதுதான் பிரச்னை.

கர்ப்பிணி
கர்ப்பிணி

ஆண், பெண் இருவரும் சிற்றின்பம் பெறுவதற்காக மட்டுமே சேர்ந்து வாழ்வது வாழ்க்கை அல்ல. துன்பத்தின் தாக்கத்தையும் சேர்ந்து அனுபவிக்கும் மனம் வேண்டும். கஸ்தூரிபாயின் பிரசவத்தை நான்காவது முறையாக நேரில் கண்டு, அவர்பட்ட துன்பத்தைப் பொறுக்க முடியாமல், பிரம்மச்சர்யத்தை மேற்கொண்ட மகாத்மா காந்தி `பெண்மையின் பாதுகாவலர்’ என்பதற்கான எடுத்துக்காட்டு. பெண்மையைப் போற்றுவோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு