Published:Updated:

``தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான்!'' - அலெர்ட் அலசல்

தனிமை
தனிமை

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று.

"தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும்; மற்றவர்கள் நமக்குக் கொடுத்தால் அது கசக்கும்!"

என்ற வரிகளைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. எவ்வளவு ஆழமான வரிகள்! தனிமை என்பது யாருக்கும் தானே வருவதில்லை. ஒன்று நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டிருப்போம் அல்லது மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டிருப்போம்.

தனிமை
தனிமை

சில நேரங்களில் யாரும் நமக்கு அருகில் இல்லை என்றாலும்கூட மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க மொபைலில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று பல வழிகள் இருக்கும்போது நாமே வலிந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது நாம் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பதையே குறிக்கிறது.

முதுமை, மனஅழுத்தம், நெருக்கமானவர்களின் பிரிவு என்று தனிமைக்கான காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.

ஒருவரின் தனிமைக்கான காரணங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதைப் பற்றி மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம்.

"ஒருவர் தனிமையை உணர்கிறார் என்றால் அதற்குப் பலவிதமான சூழல்களும் எண்ணங்களும் காரணமாக இருக்கலாம்.

மனநல மருத்துவர் டி.வி.அசோகன்
மனநல மருத்துவர் டி.வி.அசோகன்

வாழ்க்கைத் துணையை இழந்தவர்களும் காதல் தோல்வி அல்லது நெருங்கியவர்களின் மரணத்தைச் சந்தித்தவர்களும், குடும்பம் மற்றும் நண்பர்களைவிட்டுப் பிரிந்து வெளியில் சென்றவர்களும் திருமணமான புதிதில் கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்களும் அதிகமாகத் தனிமையை உணரலாம்.

சிலர் தங்கள் அருகில் யாரும் இல்லை என்றால் தனிமையை உணர்வார்கள். சிலரோ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மத்தியில் இருந்தால் கூட தனித்து விடப்பட்டதைப்போல உணர்வார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவரவர்களின் எண்ணங்கள் மட்டும்தான்.

தனிமையை உணர்வதற்கு எண்ணம்தான் காரணம் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் கூறலாம். இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு. தான் செய்த கொலைக் குற்றத்துக்காக ஒருவன் சிறைக்குச் செல்கிறான். அவனுக்குத் தனிமை சிறைத் தண்டனையாகக் கிடைக்கிறது. பத்துக்குப் பத்தடி அறை. அதில் வெளிச்சமோ, வெளியிலிருந்து சத்தமோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.

தனிமை
தனிமை
அதிகம் பேசும் பெண்... அதை  விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

தினமும் அவனுக்கு உணவு வைப்பதற்காக மட்டுமே அந்த அறை லேசாகத் திறக்கப்படும். அதுவும் சில விநாடிகள் மட்டும்! அந்தச் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததால் அவன் தனிமை சிறை வாசத்தின் நாள்கள் மேலும் அதிகரித்தன.

வெளிச்சமோ, சத்தமோ வராத இதுபோன்றதோர் அறையில் தனிமையில் 72 மணி நேரம் இருந்தாலே ஹாலுசினேஷன் போன்ற மனச்சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், தனது பல ஆண்டுக்கால தனிமை சிறைவாசம் முடிந்து அந்த மனிதன் வெளியில் வந்தபோதும் நல்ல மனநிலையிலேயே இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இது எப்படி சாத்தியமானது என்று அனைவரும் வியந்து அவனிடம் கேட்டபோது அவன் கூறிய விஷயம் கவனம் ஈர்த்தது. "தனிமை சிறைவாசத்தில் என் உடல் மட்டுமே அந்த இருட்டு அறையில் இருந்தது. என் எண்ணங்கள், நினைவுகள் அனைத்தும் என் இளமைக்கால வாழ்வின் இனிய நினைவுகளைச் சுற்றியே இருந்ததால் எனக்குத் தனிமை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை" என்று கூறினான். தனிமையிலிருந்து மீண்டுவர எண்ணங்களை நம் வசப்படுத்துவது மிகப்பெரிய தீர்வாக இருக்கும்.

தனிமை
தனிமை

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. இதுவே அருகில் அனைவரும் இருந்தாலும் தனிமையை உணர்வது `வெறுமை தனிமை' எனப்படும். இது வெறுப்பினால் ஏற்படக்கூடிய ஒன்று. இரண்டுமே நம் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்.

தனிமையினால் வரும் பிரச்னைகள்:

ஒருவர் தனிமை உணர்விலேயே அதிகம் இருந்தார் என்றால் அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை இரண்டையும் பாதிக்கும்.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
வாட்ஸ்அப், சாட், அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்கள் சிதைக்கும் தாம்பத்யம்! விடுபட ஆலோசனைகள்

தனிமையினால் தலைவலி, டென்ஷன், வெறுப்பு மற்றும் மனஅழுத்தம் போன்றவையும் ஏற்படும். மேலும் எதையாவது பற்றி தேவையில்லாமல் தீவிரமாக யோசிக்கத் தோன்றும்.

ஒருவர் வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலோ யாருடனும் பழகாமல் தனிமையிலேயே அதிக நேரம் இருந்தால் அது அவரை பற்றிய ஒரு தவறான புரிந்துணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

தனிமையிலிருந்து விடுபடத் தீர்வுகள்:

சாதாரணமாகவே தனிமையைக் கையாள ஒரே வழி உங்களின் ரசனைகளை வெவ்வேறு வழிகளில் விரிவுபடுத்திக் கொள்வது மற்றும் எல்லாவற்றுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பது.

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, இசையை ரசிப்பது, எழுதுவது... இது போன்ற ரசனைகளை வளர்த்துக்கொள்வது தனிமையிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழியாக இருக்கும்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவற்றைக் கொஞ்சி விளையாடுவதும் கூட தனிமையிலிருந்து நம்மை மீட்கும். தனிமையாக உணரும்போது ஏதாவது பிடித்த உணவுகளை நீங்களே தயார் செய்து சாப்பிடலாம்.

நமக்குப் பிடித்தவர்கள் தொலைவில் இருந்தால் கூட அவர்களைத் தொடர்புகொள்ள வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு சரியான வழிகளில் உபயோகிப்பது தனிமையை விரட்டப் பயன்படும்" என்றார் மனநல மருத்துவர் அசோகன்.

நண்பர்கள்
நண்பர்கள்
`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...

ஆக, 'தனிமை' என்பது பல நேரங்களில் காயங்களாகவும் சில நேரங்களில் மட்டுமே அந்தக் காயங்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. சில பிரச்னைகளுக்குத் தனிமையில் யோசிக்கும்போது தீர்வு கிடைக்கலாம். ஆனால், ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தனிமை ஒரு தீர்வாகாது என்பதை மனதில் கொண்டு எப்போதும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் இணைந்திருக்க முயல்வோம்.

அடுத்த கட்டுரைக்கு