Published:Updated:

தவறான முறையில் எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட்... பிரச்னைகளும் தீர்வுகளும்!

Swab test
Swab test

மூக்கில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப் பயன்படுத்தப்படும் உபகரணம் பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட, மெல்லிய தண்டுபோல் இருக்கும். இதைச் சற்று வேகமாக மூக்கினுள் விட்டால்கூட Nasopharynx-ல் காயங்கள் ஏற்படலாம்.

ருவருக்குக் கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய ஆர்.டி பிசிஆர் (RT-PCR - Reverse transcription polymerase chain reaction) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் செய்யப்படுவதற்கு முன்பு ஸ்வாப் டெஸ்ட் (Swab test) என்றொரு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

Testing
Testing
Pixabay

ஸ்வாப் டெஸ்ட்!

மூக்கின் உள்ளே Nasopharynx பகுதியிலிருந்தோ, தொண்டையில் உள்ள Oropharynx என்ற இடத்திலிருந்தோ எச்சில், நீர் போன்ற மாதிரியைச் சேகரிக்கும் முறைக்கு ஸ்வாப் டெஸ்ட் என்று பெயர். இம்முறையில் ஒருவரிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரியானது அடுத்ததாக ஆர்.டி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒருவேளை சேகரிக்கப்பட்ட அந்த மாதிரியில் கொரோனா வைரஸ் இருப்பின் அவருக்கு ஆர்.டி பிசிஆர் டெஸ்டின் ரிசல்ட் பாசிட்டிவ் என வரும். அவருக்குத் தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்படும். சேகரிக்கப்பட்ட மாதிரியில் வைரஸ் இல்லையென்றால் ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வரும்.

Swab test
Swab test

ஒருவருக்கு எத்தனை முறை ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படுகிறதோ அத்தனை முறையும் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தாக வேண்டும். ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப் பயன்படும் உபகரணங்களால் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதாகவும், ஸ்வாப் டெஸ்ட் எடுத்த பின் ஒரு வாரம் சரியாக மூச்சுவிட முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அரசு மருத்துவமனைகளில் ஸ்வாப் டெஸ்ட் எடுத்துக்கொண்ட சிலர் கூறினர்.

ஏன் இந்த நிலைமை?

test
test

இது குறித்து கோவிட்-19 வார்டில் பணிபுரியும் அரசு மருத்துவமனை லேப் டெக்னீஷியன் ஒருவரிடம் பேசினோம்.

"பொதுவாக ஸ்வாப் டெஸ்ட் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால்தான் எடுக்கப்படும். நன்றாகப் பயிற்சி பெற்ற லேப் டெக்னீஷியன்களில் சிலரும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். ஆனால், தற்போது கொரோனா தொற்றை உறுதிப்படுத்த தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டியுள்ளது. முறையாகப் பரிசோதனை செய்யும் மருத்துவர்களும் லேப் டெக்னீஷியன்களும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளதால் சரியான பயிற்சி இல்லாத லேப் டெக்னீஷியன்கள் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதில் அனுபவம் இல்லாத காரணத்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். டெஸ்ட் எடுக்கப்படும்போது நோயாளிகள் சரியாக ஒத்துழைக்காமல் இருந்தாலும் டெஸ்ட் எடுக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூக்கிலோ, தொண்டையிலோ அழுத்தமாகப் பதிந்து காயங்களை ஏற்படுத்தலாம்" என்றார் அவர்.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

சரியான முறையில் எடுக்கப்படாத ஸ்வாப் டெஸ்ட் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரியிடம் பேசினோம்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரி
காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரி

ஸ்வாப் டெஸ்ட் என்பது மிகவும் நுண்ணிய பரிசோதனை. ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்படும் இடங்களான மூக்கின் உள்ளே உள்ள Nasopharynx பகுதியும், தொண்டையில் உள்ள Oropharynx பகுதியும் மிகவும் மென்மையானவை. இந்தப் பகுதிகளில் உள்ள சவ்வு போன்ற மேற்பரப்பின் ஈரப்பதம், மாதிரியாக ஸ்வாப் டெஸ்ட்டின் மூலம் சேகரிக்கப்படுகிறது. சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும் நுண்ணுயிரிகளில் சில இந்த ஈரப்பதத்தில் தங்கியிருக்கும். ஸ்வாப் டெஸ்ட் மூலம் இவை சேகரிக்கப்பட்டு பிசிஆர் டெஸ்டுக்கு உட்படுத்தப்படும். Nasopharynx மற்றும் Oropharynx இரண்டு பகுதிகளும் மிகவும் மென்மையானவை என்பதால் ஸ்வாப் டெஸ்ட் கவனமாக எடுக்கப்பட வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணர்களும், ஸ்வாப் டெஸ்ட் செய்வதில் அனுபவமும் பயிற்சியும் இருக்கும் லேப் டெக்னீஷியன்களும் இந்தப் பரிசோதனையை மற்றவர்களுக்கு மேற்கொள்ளும்போது பிரச்னைகள் எதுவும் வராது. பயிற்சி இல்லாத ஒருவர் இந்தப் பரிசோதனையைச் செய்யும்போது பிரச்னைகள் உருவாகலாம்.

தவறான ஸ்வாப் டெஸ்ட்டால் ஏற்படும் பிரச்னைகள்!

Swab Test
Swab Test

ஒருவருக்குச் சரியான முறையில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்படாவிட்டால் அவருக்குக் கொரோனா தொற்று இருந்தாலும் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வர வாய்ப்பிருக்கிறது. அதுபோல் உண்மையில் தொற்று இல்லாத ஒருவருக்கு பாசிட்டிவ் என்றும் ரிசல்ட் காட்டலாம்.

மூக்கில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப் பயன்படுத்தப்படும் உபகரணம் பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட, மெல்லிய தண்டுபோல் இருக்கும். இதைச் சற்று வேகமாக மூக்கினுள் விட்டால்கூட Nasopharynx-ல் காயங்கள் ஏற்படலாம். மூக்கின் துவாரத்தில் ஏதாவது ஒன்றின் வழியாகவே ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும்போது அந்த பிளாஸ்டிக் உபகரணம் சென்று வரும் பாதையில் வீக்கம், எரிச்சல் ஏற்படலாம்.

தொண்டையில் உள்ள Oropharynx-ல் பட்ஸ் போன்ற உபகரணத்தைக் கொண்டு மாதிரி சேகரிக்கப்படும்போது சிலருக்குத் தொண்டைவலி, காதுவலி, குமட்டல் ஏற்படலாம். எச்சில், உணவை விழுங்க முடியாமலும் போகலாம்.

இந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு... காரணம் என்ன? - மருத்துவர் விளக்கம் 

தீர்வுகள்!

Tablets
Tablets

ஸ்வாப் டெஸ்ட் செய்யும் லேப் டெக்னீஷியன்களுக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

ஸ்வாப் டெஸ்ட் சரியாகச் செய்யப்பட்டால் சாதாரணமாக இரண்டு, மூன்று மணி நேரத்திலேயே தொண்டை, மூக்கில் ஏற்பட்ட லேசான வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் நீங்கிவிடும்.

ஒருவேளை ஸ்வாப் டெஸ்ட் தவறாக எடுக்கப்பட்டு அதனால் மூக்கு, தொண்டையில் ஏதேனும் புண்கள் ஏற்பட்டிருந்தால் பயப்படத் தேவையில்லை. பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

வீக்கமும் எரிச்சலும் அதிகமாக இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்" என்றார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரி.

அடுத்த கட்டுரைக்கு