Published:Updated:

அமர்ந்தவாறு நீண்ட நேரம் பணிபுரிகிறீர்களா? மூட்டுப்பிரச்னை முதல் வெரிக்கோஸ் வெயின்ஸ் வரை... கவனம்!

Representational Image
Representational Image

நெடுநேரம் ஒரே நிலையில் அமரும் பணியா? - பிரச்னைகள், தீர்வுகள்!

காலை நேரத்தில், நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாகப் பணிக்குக் கிளம்பும் இளம் தலைமுறையொன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. பரபரப்புடன் சுற்றிச்சுழன்று அலுவலகம் கிளம்பும் இவர்களிடமெல்லாம், `ஏங்க இப்படி பரபரப்பா இருக்கீங்க?' என்று கேட்டால், சொல்லிவைத்தாற்போல `நிற்கக்கூட நேரமில்லங்க... வேலைக்கு லேட்டாச்சு' என்பார்கள் அனைவரும்.

பணி
பணி

கொஞ்சம் பொறுமையாக அமர்ந்து சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடும் இவர்களெல்லாம், அலுவலகத்தில் நாள் முழுக்க ஓடியாடி வேலை செய்பவர்களா என்றால், அதுவும் இல்லை. பெரும்பாலானோர் வேலையிடத்தில் நான்கு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக, தங்களது சீட்டிலிருந்து எழாமலேயே பணிபுரிபவர்களாக இருப்பார்கள். கேட்டால், `எங்க வேலை அப்டிங்க!' என்பார்கள். கணினிமயமாகிவிட்ட அலுவலகங்களில், இது தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டது.

ஆய்வில்...
தினமும் 9.30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகள் கணிசமாகக் குறைவது தெரியவருகிறது

ஆனால், இப்படி ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் உட்கார்ந்தே பணி செய்வது, உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் எனக்கூறி, அப்படிப் பணி செய்பவர்களையெல்லாம் எச்சரிக்கிறது, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வின் முடிவு!

பணி
பணி

தங்களின் ஆய்வு மற்றும் அதன் முடிவு குறித்து ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் டாம் யேட்ஸ் கூறும்போது, ``பணிக்குச் செல்லும் 36,000-த்துக்கும் மேற்பட்ட நபர்கள் உட்படுத்தப்பட்டிருந்த எங்கள் ஆய்வின் முடிவில், தினமும் 9.30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகள் கணிசமாகக் குறைவது தெரியவருகிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இப்படியானவர்களுக்கு வாழ்நாள் குறைந்து, மரணம் முன்கூட்டியே ஏற்படுகிறது'' என்றிருக்கிறார்.

`பிடித்த வேலையில் சேர முடியாததால் ஏற்படும் மன அழுத்தம்’ - எப்படிச் சரிசெய்வது?' #NoMoreStress

இதை வாசிக்கும்போது `பல மணி நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது, இவ்வளவு ஆபத்தானதா?' என உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான் என்கின்றனர் மருத்துவர்கள். சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் சிவராம கண்ணனிடம், பல மணி நேரம் ஒரே பொசிஷனில் அமர்ந்தே இருப்பதால் என்னென்ன பிரச்னைகளெல்லாம் வரலாம் என்பது குறித்துக் கேட்டோம். பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகளையும் பரிந்துரைத்தார் அவர்.

டாக்டர் சிவராம கண்ணன்
டாக்டர் சிவராம கண்ணன்

``அதிக நேரம் அமர்ந்தே இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் :

* உட்கார்ந்த நிலையில் வேலைபார்க்கும்போது, கால்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படத் தொடங்கும். கால்கள் இரண்டும் அசைக்கப்படாமல் ஒரே நிலையில் அதிக நேரம் இருக்கும்போது, தசைப்பகுதிகள் பலவீனமாகத் தொடங்கும். இது தொடரும்போது, வயதாகும்போது எளிதில் தடுமாறிவிழும் சூழல் உருவாகலாம்.

* உடலுக்கு அசைவு கொடுக்காமல் இருப்பதால், அடிக்கடி செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். இது அசிடிட்டி தொடங்கி வளர்சிதை மாற்றங்கள்வரையில் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும். இவை, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

மூட்டு வலி
மூட்டு வலி
* மூட்டுப் பகுதிகள் வலிமை இழக்கத்தொடங்கி, இளம் வயதிலேயே மூட்டுப் பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் போஸ்ச்சரில் சிக்கல் போன்றவை ஏற்படும். இளம் வயதிலேயே கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வலி ஏற்படத் தொடங்கும்.

* உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் பலரும், பணி நேரத்தில் வழக்கத்தைவிடக் குறைவாகவே மனிதர்களை அணுகுவார்கள். இது மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கலாம். நீண்ட நாள் மனஅழுத்தம், மனநலச் சிக்கல்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாழ்வியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

* தொடர்ச்சியாகப் பல மணி நேரம் கணினி பார்க்கும்போது, கண் பிரச்னைகள் வரக்கூடும். குறிப்பாக வறண்ட கண்கள், டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின் போன்ற பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிக்கோஸ் வெயின்
வெரிக்கோஸ் வெயின்

* அன்றாட வாழ்வில் நீண்ட நேரம் நிற்பவர்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, வெரிக்கோஸ் வெயின்ஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காலின் ரத்தக் குழாய்கள் சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரிவது வெரிக்கோஸ் வெயின்ஸ் எனப்படும். சிலருக்கு `டீப் வெயின் த்ரோம்போசிஸ்' என்ற பிரச்னையும் ஏற்படலாம். இது, கால்களிலுள்ள நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படுவது.

பணிக்கு இடையில், அடிக்கடி உடலை நன்கு ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்
டாக்டர் சிவராம கண்ணன்

தீர்வுகள்

மனித உடலமைப்பே, நின்ற வடிவில் செயல்படும் வடிவில் வடிவமைக்கப்பட்டதுதான். நிமிர்ந்து நின்றபடி செயலாற்றும்போது, இதயம் தொடங்கி எலும்பு, அடிவயிற்றுப் பகுதி போன்றவையாவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியோடும் செயல்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தலின்படி 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் அன்றாடம் 150 நிமிடங்களுக்கு (2.15 மணி நேரம்) ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்.

Excercise
Excercise

காலை அல்லது மாலையில் சைக்கிள் ஓட்டுவது, அலுவலகத்தில் லிஃப்ட்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளை உபயோகிப்பது, தினமும் 45 நிமிடங்களாவது வாக்கிங் மேற்கொள்வது போன்றவை, இந்த டார்கெட்டை பூர்த்திசெய்ய உதவும்.

அலுவலகம்
அலுவலகம்

அமர்ந்தே பணிபுரிவர்கள் அனைவரும் அலுவலகத்தில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம், உடலை நன்கு ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். கண்களுக்கு அசைவுகள் கொடுக்க வேண்டும். பணி இடத்தில் இயந்திரத்தனமாக இல்லாமல், உடனிருப்பவர்களை இயல்பாக அணுக வேண்டும். டிஸ்கஷன்கள், மீட்டிங் போன்றவற்றையெல்லாம், செயலிகள் வழியாக நடத்தாமல், நேரடியாக டீமோடு அமர்ந்து பேசும்படி பார்த்துக்கொள்ளலாம்" என்று பரிந்துரைக்கிறார் டாக்டர்.

அடுத்த கட்டுரைக்கு