Published:Updated:

சோப், மண், பெயின்ட் - ஒவ்வாத பொருள்களைச் சாப்பிடும் `பிகா சிண்ட்ரோம்'; தீர்வுதான் என்ன?

Soap (Representational Image)
News
Soap (Representational Image) ( Photo by Curology on Unsplash )

இதுபோன்ற ஆபத்தான பொருள்களைச் சாப்பிடுவதால் அரிதாக மரணம்கூட ஏற்படலாம். ஆனால், உரிய மருத்துவ ஆலோசனையும் கண்காணிப்பும் இருந்தாலே எளிதாகக் குணப்படுத்திவிடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை மனநல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்கூட எளிதாகச் சரிசெய்துவிடுவார்கள்.

என்னுடைய தோழி ஒருவருக்கு சோப்பை சாப்பிடும் பழக்கம் இருந்தது. நண்பர்கள் வட்டாரத்தில் இதை வைத்து அந்தத் தோழியைக் கேலி, கிண்டல் செய்வது வழக்கம். ``உன் கல்யாணத்துக்கு ரெண்டு பெட்டி சோப் வாங்கி கிஃப்ட் கொடுத்திடுறோம்" என்றெல்லாம் பேசுவோம்.

டால்கம் பவுடர், பசை, மண், அடுப்புக் கரி, சாம்பல் போன்ற விநோதமான பொருள்களைச் சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரை நமக்குத் தெரிந்திருக்கலாம். உணவு அல்லாத பிற பொருள்களை உட்கொள்ளும் பழக்கம் பிகா சிண்ட்ரோம் (Pica syndrome) எனப்படும் ஒருவித குறைபாடு என்கிறது மருத்துவ அறிவியல்.

Soap (Representational Image)
Soap (Representational Image)
Photo: Unsplash

பிகா சிண்ட்ரோம் பற்றி விளக்குகிறார் சிவகாசியைச் சேர்ந்த அரசு மனநல மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன்.

``எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம். ஊட்டச்சத்து இல்லாத பொருள்கள் எனும்போது பேப்பர், மண், கற்கள், க்ரேயான்ஸ், துணி, ரப்பர் பேண்ட், பட்டன் இதுமாதிரியான பொருள்களும் அடங்கும். சிறிய வயதில் நம்மில் பலர் சிலேட் குச்சிகளைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் இதே பிரச்னைதான். இந்தப் பிரச்னை குறிப்பாக குழந்தைகளிடமும், கர்பிணிகளிடமும்தான் அதிகமாகக் காணப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனநலம் குன்றியவர்கள் மற்றும் சிலவகை மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் காணப்படலாம். இரும்புச்சத்து, ஸிங்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கான முக்கியமான காரணம். குழந்தைகள் மண்ணைத் திண்பதும் ஊட்டச்சத்து குறைபாடுதான். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும்பட்சத்தில் போதுமான ஊட்டச்சத்து கொடுத்தாலே பிரச்னை சரியாகிடும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பிரச்னை நீண்ட நாள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

Psychiatrist 
Dr.Nishanth ravichandran
Psychiatrist Dr.Nishanth ravichandran

இது உணவு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் எந்த வகையான உணவுப்பொருள் சாப்பிடுகிறார்களோ அதை வைத்து உடல் பாதிப்புகள் வேறுபடும். பேப்பர், மண், மரத்தூள் போன்றவற்றைச் சாப்பிட்டால் பெரிய ஆபத்து ஏற்படாது என்றாலும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். சிலர் பெயின்ட், பசை போன்ற அதிக ரசாயனங்கள் நிறைந்த பொருளையோ ஊசி, ஊக்கு மாதிரி கூர்மையான பொருள்களையோ சாப்பிட்டால் ஆபத்துதான். வாயில் காயம் ஏற்படுவது, உணவுக்குழாயில் அடைப்பு, செரிமானக் கோளாறுகள், வாந்தி, குடல்களில் அடைப்பு எனப் பல வகை பாதிப்புகள் ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற ஆபத்தான பொருள்களைச் சாப்பிடுவதால் அரிதாக மரணம்கூட ஏற்படலாம். ஆனால், உரிய மருத்துவ ஆலோசனையும் கண்காணிப்பும் இருந்தாலே எளிதாகக் குணப்படுத்திவிடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை மனநல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்கூட எளிதாகச் சரிசெய்துவிடுவார்கள். இதுபோன்ற பழக்கம் உள்ள குழந்தைகளை பெற்றோர் அடிக்காமல், திட்டாமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

Crayons
Crayons
Photo by Nathan Dumlao on Unsplash

பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்காணித்துப் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெரியவர்களுக்கு இதே பிரச்னை இருந்தால் அவர்களையும் குடும்பத்தினர், நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இந்தப் பழக்கங்கள் Addiction என்ற வகையிலும் வரும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைககளும் அவசியம். இது சாதாரண பழக்கம்தானே என்று யாரும் அலட்சியப்படுத்தக்கூடாது" என்கிறார்.