போதை மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்படுவோர் தாக்கப்படுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெறுவோர் தப்பித்து ஓடுவதற்கு முயற்சிசெய்வார்கள் என்பதால் அவர்களைச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள் என்றெல்லாம் கூறப்படும். உண்மையில், போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை எப்படியிருக்கும் என்று விளக்குகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றும் மனநல மருத்துவரும் உதவிப் பேராசிரியருமான தேவி.
``கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம் என்பது என்பது ஒரு மருத்துவமனை. இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுவோருக்கு ஆரம்பகட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் அதனைச் சரிசெய்ய குளூக்கோஸ் கொடுக்கப்படும். அதற்குப் பிறகு போதையை மீண்டும் நாடாமல் இருப்பதற்கு, அமைதிப்படுத்துவதற்கு, தூங்குவதற்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படும். அதற்குப் பிறகு உடலுக்குத் தேவையான சத்து மாத்திரைகள் கொடுக்கப்படும். சுமார் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை தொடரும். அதற்குப் பிறகு நோயாளிகள் சற்று இயல்புக்குத் திரும்பிவிடுவார்கள். தங்கியிருக்கும் பிற நோயாளிகளுடன் சேர்ந்து கேரம்போர்டு விளையாடுவது, தோட்ட வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
அவர்களை அடிப்பது, தாக்குவது போன்ற செயல்கள் முற்றிலும் இங்கு நடைபெறுவதில்லை. அதேபோல சங்கியிலால் கட்டி வைப்பது போந்ற செயல்களும் நடைபெறுவதில்லை. இயல்பாக எல்லாரையும் போன்றுதான் இவர்களும் தங்கியிருப்பார்கள். சுமார் மூன்று வாரம் இங்கு தங்கி சிகிச்சை பெறுவார்கள். சிகிச்சை முடிந்து வெளியே செல்லும்போது போதைப்பழக்கத்தை மறந்துதான் செல்வார்கள். பிரச்னை எங்கு ஆரம்பிக்கும் என்றால் மீண்டும் அவர்கள் வெளியே சென்றதும் அந்த போதைப்பொருள் அவர்களுக்குக் கிடைக்கத் தொடங்கும்.
சிகிச்சை பெற்று பல மாதங்கள், வருடங்கள் போதைப்பழக்கத்தைத் தொடாமல் இருந்தவர்கள்கூட மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு ஆட்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஒருவர் மீண்டும் அந்தப் பழக்கத்துக்குப் போவதற்கு அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பம், தனிநபர் ஆளுமை, வேலை, சூழல், உடல்நிலை போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் பார்த்தால் 10 பேர் இங்கிருந்து சிகிச்சைபெற்று பழக்கத்தை மறந்து திரும்பினால், சுமார் 4 பேர் மீண்டும் பழக்கத்துக்கு ஆளாகி திரும்ப சிகிச்சைக்கு வருகிறார்கள். இதில் கால நேரம் மாறும். சிலர் இரண்டு மாதங்களில் திரும்பி வந்தால், சிலர் இரண்டு ஆண்டுகள் கழித்துகூட வருவார்கள்.

போதைப்பொருள், மதுப்பழக்கம் போன்றவற்றுக்குப் பழகும் யாரும் அதற்கு அடிமையாக வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் பயன்படுத்துவதில்லை. அதில் என்னதான் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதை எடுத்தால் தைரியம் கிடைக்கும், கூலாக இருக்கலாம் என்று நினைத்து எடுக்கிறார்கள். அதை அதிகமாகப் பயன்படுத்தும்போதுதான் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். தூக்கமின்மை, அதிக கோபம், தன்னை மறந்த நிலையில் இருப்பது, வேலையில், படிப்பில் கவனமின்மை, நண்பர்களுடன் இணக்கமில்லாமல் இருப்பது அல்லது அதிக இணக்கமாக இருப்பது, வீட்டைவிட்டு அதிக நேரம் வெளியிலேயே இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.
போதைப்பொருளை அதிக நாள்கள் எடுத்துவிட்டு, திடீரென்று அந்தப் பழக்கத்தை நிறுத்தும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை Withdrawl Symptoms என்கிறோம். உதாரணத்துக்கு நீண்ட நாள் குடிப்பழக்கத்தைக் கைவிட்டவர்களுக்கு தலைவலி, வாந்தி வரும் உணர்வு, படபடப்பு, அதிக கோபம், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்று இங்கு வரும் நோயாளிகளுக்கு அந்த அறிகுறிகளைச் சமாளிக்கும் வகையிலான மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்ற சிகிச்சையளிக்கப்படும்.
இந்த அறிகுறிகள் அனைவருக்கும் தோன்றாது. நீண்ட நாள்கள் போதைப்பழக்கத்திலிருந்து அதை விடுபவர்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் வரும். இதிலும் விதிவிலக்குகள் உண்டு. சிலருக்கு 6 மாதப் பழக்கத்தை விட்டால்கூட இந்த அறிகுறிகள் தோன்றலாம். இதுவும் தனிநபரைப் பொறுத்ததுதான். Withdrawl Symptoms தோன்றும்போது அவற்றைக் கையாள்வதற்கு நோயாளிகள் அதிகம் சிரமப்படுவார்கள். இந்த நேரத்தில்தான் குடும்பத்தினர், சிகிச்சை என அனைத்து கவனிப்புகளும் தேவைப்படும்.
சிகிச்சையே எடுக்கவில்லை என்றால்...
தொடர்ந்து போதைப்பழக்கத்திலேயே இருக்கிறார்கள், அதற்குச் சிகிச்சை எடுக்கவில்லையென்றால் உடல்நிலை, மனநிலை, குடும்ப சூழல் என அனைத்தும் பாதிக்கப்படும். மிக முக்கியமாக ஒருவரின் ஆயுள் வெகுவாகக் குறையும். எனவே, போதைப்பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டால் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். அந்த நபருக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.
நிறைவு
`நான் அடிமை இல்லை' என்ற தொடர் 25 வாரங்களாக விகடன் தளத்தில் வெளியானது. போதைக்கு அடிமையாவது தொடங்கி, அதிலிருக்கும் அரசியல், சட்டம், ஆன்லைன் போதைப்பொருள் விற்பனை, போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை, குடும்பத்தினர் பங்கு என அனைத்து கண்ணோட்டத்திலும் இந்தத் தொடர் வெளியானது. இதன் முந்தைய அத்தியாயங்களையும் படித்துப் பயன்பெறுங்கள்.