Published:Updated:

`டிப்ரெஷனுக்கு போதைப்பொருள்கள் தீர்வல்ல!' - தவறான நம்பிக்கையும் மருத்துவ எச்சரிக்கையும்

அன்றாட வாழ்க்கையில் கவலை, கஷ்டங்கள், சோர்வு ஏற்படுவது, அழுவது எல்லாம் இயல்பான உணர்ச்சிகள். இவற்றை மன அழுத்தம் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில தினங்களாக பாலிவுட், மன அழுத்தம், போதைப் பழக்கம் போன்ற வார்த்தைகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதாவது, திரைத்துறை பிரபலங்கள் சிலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதாக சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. கங்கணாவின் ட்வீட்டையடுத்து தீபிகா படுகோனை மையமாக வைத்தே பலரும் மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தை இணைத்துப் பேசி வருகின்றனர். தீபிகா விஷயத்தில் அதுகுறித்து விசாரிப்பதும், உண்மையை அறியவேண்டியதும் அரசின் பொறுப்பு. எனவே, அதை விட்டுவிடுவோம்.

ஆனால், பொதுவாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் பலரும் உடனே போதைப்பொருள்களை தற்காலிக நிவாரணிகளாகவே கருதுவதும், பின் அத்னால் உடல்ரீதியான பிரச்னைகளில் சிக்குவதும் நடக்கிறது. இந்த நிலையில், ``மன அழுத்தம் அதிகமாகையில் போதைப்பொருள்களைத் தேடிப்போவதும், போதைப் பழக்கம் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை'' என்ற மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம், மன அழுத்தத்துக்கான தீர்வுகள், போதைக்குள் சிக்காமலிருப்பதற்கான வழிகள் குறித்துக் கேட்டோம்.

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

மன அழுத்தம் அதிகரித்துவிட்டது!

20 வருடங்களுக்கு முன்னாலும் மன அழுத்த பிரச்னை மக்களிடையே இருந்தது. ஆனால், கடந்த 10 வருடங்களாகத்தான் இந்தப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. அதிகரித்துவிட்ட பொருளாதார தேவைகள், குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைந்துபோனது, உலகம் கார்ப்பரேட் மயமானது என்று இதற்கான காரணங்கள் பல. இதில், டார்கெட்டை அடிப்படையாகக்கொண்டு வேலையிடங்கள் இயங்க ஆரம்பித்ததை மிக முக்கியமான காரணமாகச் சொல்ல வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னால், வேலை கிடைப்பது வேண்டுமானால் கடினமாக இருந்திருக்கலாம். ஆனால், கிடைத்த வேலையில் நீடித்திருப்பது கடினமானதாக இருக்கவில்லை. இன்றைக்கு வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால், கிடைத்த வேலை எப்போது பறிபோகுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்ற நிலையில் பெரும்பாலானோர் இருப்பதால், அவர்கள் அத்தனை பேருமே மன அழுத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

இதெல்லாம் மன அழுத்தம் இல்லை!

அன்றாட வாழ்க்கையில் கவலை, கஷ்டங்கள், சோர்வு ஏற்படுவது, அழுவது எல்லாம் இயல்பான உணர்ச்சிகள். இவற்றை மன அழுத்தம் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன அழுத்தம் (Depression) எப்படியிருக்கும்?

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேல் காரணமே இல்லாமல் மனம் கனமாக இருக்கும். எதிலும் ஈடுபாடு இருக்காது. எதையும் யாரையும் நம்ப மாட்டார்கள். அடிக்கடி கோபம் வரும். தூக்கம் வராது. சோர்வாக இருப்பார்கள். செத்துப்போகலாம் என்று நினைப்பார்கள். இவை அத்தனையும் ஒருவருக்கு இருந்தால், அவருக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

Depression (Representational Image)
Depression (Representational Image)

மன அழுத்தத்துக்கான தீர்வுகள்...

உடம்புக்கு ஒரு பிரச்னை வருவதுபோலதான் மனதுக்கு வருகிற பிரச்னையையும் பார்க்க வேண்டும். அதற்கு எப்படி மருத்துவரைப் பார்க்க வேண்டுமோ, அதேபோல இதற்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இந்த இடத்தில்தான், பலரும் தவறு செய்கிறார்கள். அதாவது, `என் மனதை நான் பார்த்துக்கொள்வேன். இதற்கெல்லாம் டாக்டரைப் பார்த்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால் காலம் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்' என்று நினைத்துக்கொண்டு, மருத்துவரைப் பார்ப்பதையே தவிர்த்துவிடுகிறார்கள். மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் உடனடியாக உளவியல் ஆலோசகரையோ, மனநல மருத்துவரையோ பார்ப்பது மட்டுமே இதற்கான முதல் மற்றும் முழுமையான தீர்வு.

மன அழுத்தத்தால் வருகிற போதைப் பழக்கம்!   

தான் நார்மலாக இல்லையென்பதை வெளியே சொல்ல பயம், அப்படியே மீறி சொன்னாலும் `இதெல்லாம் ஒரு பிரச்னையா' என்று குடும்பத்தினர் செய்கிற அலட்சியம் ஆகிய காரணங்களால், மெல்ல மெல்ல போதைக்கு அடிமையாக ஆரம்பிப்பார்கள். போதைப் பழக்கத்தைப் பொறுத்தவரை, அதை ஆரம்பித்தவுடன் பிரச்னைகள் எல்லாம் குறைந்ததுபோல் தெரியும். இதனால், போதைப் பொருள்களை எடுத்துக்கொள்கிற அளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கும். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் மன அழுத்தமும் அதிகமாகும், போதைப் பழக்கமும் விட முடியாத அளவுக்கு அவர்களை அடிமையாக்கியிருக்கும். மருத்துவ ஆராய்ச்சிகள், மன அழுத்தத்துடன் போதைப் பழக்கமும் இருப்பவர்கள்தாம் அதிகளவு தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கின்றன.

Drug (Representational Image)
Drug (Representational Image)

போதைப் பழக்கத்தில் சிக்காமல் இருப்பது எப்படி? சிக்கியவர்கள் எப்படி மீண்டு வருவது?

போதைப்பழக்கம் எந்தவிதத்திலும் நம்மை மன அழுத்தத்தில் இருந்து மீட்காது என்பதையும், அது இன்னும் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் புரிந்துகொண்டாலே, அந்தப் பழக்கத்துக்கு யாரும் அடிமையாக மாட்டார்கள். டிப்ரெஷனுக்கு போதைப்பொருள்கள் தீர்வல்ல.

உடல்ரீதியாக ஒரு பிரச்னை வந்தால், மற்றவர்களிடம் அதைப் பற்றி சொல்லி உதவி கேட்போம் இல்லையா? அதேபோல, உங்களுடைய போதைப் பழக்கத்தைப் பற்றியும் உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் சொல்லி மருத்துவரை நாடுங்கள். பிரச்னை சரியாகும் வரை மருந்து, மாத்திரை சாப்பிட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டுவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு