``மூணு மாசம் நல்லாத்தான் இருந்தான். டீஅடிக்ஷன் சென்டர்ல இருந்தவரைக்கும் போதைங்கிற வார்த்தையைக்கூட உச்சரிக்கலை. ட்ரீட்மென்ட் முடிஞ்சு மூணே மாசத்துல மறுபடி பாழாப்போன அந்தப் போதைப் பழக்கத்துக்குள்ளே போயிட்டான்... என்ன செய்யறதுன்னே தெரியலை...'' என்ற புலம்பலோடு, உறவினர்களையோ, நண்பர்களையோ சிகிச்சைக்கு அழைத்து வருகிறவர்கள் ஏராளம்.

தகாத ஒன்றிலிருந்து மீண்டபிறகு மீண்டும் அது ஏன் ஒருவரை தன் வசம் இழுக்கிறது... எங்கே கோளாறு... சிகிச்சையிலா..?
இப்படி அவர்களைப் போலவே நமக்கும் பல கேள்விகள். மீண்டும் மீண்டும் போதைக்கு அடிமையாகும் நபர்களின் பின்னணி, காரணங்கள் பற்றியும், போதைப் பழக்கம் பரம்பரையாகத் தொடருமா என்பதற்கான விளக்கத்தையும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்.
``சிலருக்கு கோமார்பிட் சைக்யாட்ரிக் டிஸ்ஆர்டர்ஸ் (comorbid psychiatric disorders) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது அடிக்ஷனோடு சேர்த்து சிலருக்கு பதற்றமோ, மன அழுத்தமோ, ஏடிஹெச்டி எனப்படும் கவனக்குறைவு பாதிப்போ (ஏடிஹெச்டி எனப்படும் பாதிப்பு, குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் பாதிக்கலாம்) இருக்கலாம்.
மனநலம் சார்ந்த இத்தகைய பிரச்னைகளைச் சரிசெய்தாலே சிலர் அடிக்ஷனிலிருந்து வெளியே வந்துவிடக்கூடும். அவர்களுக்கு இருக்கும் இத்தகைய பிரச்னைகளைக் கவனிக்காமல், அடிக்ஷனுக்கு மட்டும் சிகிச்சை கொடுப்பது பலனளிக்காமல் போகலாம். அதே நபர் மீண்டும் மீண்டும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதும் அதனால்தான்.

மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கவுன்சலிங்கைவிடவும் மாத்திரைகள்தான் முக்கியமாகப் பரிந்துரைக்கப்படும். ஆனால், போதை அடிமைத்தனத்திலிருந்து மீள நினைக்கிறவர்களுக்கு கவுன்சலிங்தான் முக்கியமான சிகிச்சை.
முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்ட `ஆன்டி கிரேவிங் மெடிசின்' (போதைக்கான தேடலைக் குறைக்கும் மருந்துகள்) போதைப் பொருள் உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை 50 சதவிகிதம் குறைத்தாலும் மீதி 50 சதவிகிதம் சம்பந்தப்பட்ட நபரின் கைகளில்தான் உள்ளது. எது அந்த நபரை போதைப் பொருளை உபயோகிக்க வைக்கிறது, எந்தச் சூழல் அதைத் தூண்டுகிறது என நிறைய பேசி, கவுன்சலிங் கொடுத்து மீட்க வேண்டியிருக்கும்.
குடிப்பழக்கம் உள்ள ஒரு நபருக்கு, ஒயின் ஷாப்பை பார்த்தாலே குடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுவே அதே நபர், சில மாதங்களுக்கு குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்த நிலையில், மீண்டும் ஒயின் ஷாப்பை பார்க்கும்போது, முன்பிருந்த அதே உந்துதல் இருக்காது. அந்த இடைப்பட்ட காலத்தில் மூளை அதற்கேற்ப தன்னைப் பழக்கியிருக்கும்.

இதை `நியூரோ அடாப்டேஷன்' என்கிறோம். தீவிர குடிப்பழக்கம் உள்ள ஒரு நபர், காலையில் எழுந்தது முதல் இரவுவரை ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வார். ஒரே கடைக்குச் செல்வார், மது வாங்குவார், குடிப்பார். இந்தத் தொடர் நடவடிக்கைகளுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளி விடும்போது, நியூரோ அடாப்டேஷன் மாறி, மூளையில் புதிய மாற்றங்கள் உருவாகும். அந்த இரண்டு, மூன்று மாதங்களைத் தாண்டுவதே பாதி வெற்றிதான்.
அதன்பிறகு அந்த நபர் போதையிலிருந்து முழுவதுமாக வெளியே வருவாரா என்பது மேற்குறிப்பிட்ட மற்ற காரணிகளையும் பொறுத்தது. போதை மறுவாழ்வு மையங்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும்போது இப்படி நிறைய பேரை சந்திக்கிறேன்.
அந்த மையத்தில் இருக்கும்வரை, `இனிமே குடிக்கவே மாட்டேன் டாக்டர்... போதையெல்லாம் யூஸ் பண்ணவே மாட்டேன் டாக்டர்...' என்று உறுதியாகச் சொல்வார்கள். நமக்கும் நம்பிக்கை வரும். ஆனால், அதே நபர் வீட்டுக்குத் திரும்பியதும் அவரது போதைப் பழக்கத்துக்குக் காரணமான சூழல் மாறாமல் அப்படியே இருக்கும். மீண்டும் அதே பிரச்னை... அதிலிருந்து மீள மறுபடி போதைக்குள் போவார். அதனால்தான் சிகிச்சை அளிக்கும்போதே அவரது உடல்ரீதியான, உளவியல் ரீதியான, சமூக ரீதியான காரணங்கள் என எல்லாவற்றையும் விசாரித்து, அதற்கேற்ப அவரைத் தயார்படுத்த வேண்டும்.

ஆறு நண்பர்கள்... வழக்கமாக எல்லோரும் சேர்ந்து குடிப்பது வழக்கம். அவர்களில் ஒருவர் மட்டும் இனி அந்தப் பழக்கத்தைத் தொடர வேண்டாம் என்று போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்புகிறார். மீண்டும் பழைய நண்பர்களுடன் சேர வேண்டாம் என்ற அறிவுறுத்தலைத் தாண்டி, அவர் அதே ஐவருடன் இணைகிறார்.
முதல் மாதம் அந்த நபரிடம் குடிக்க மாட்டேன் என்ற மன உறுதி தொடரும். மற்றவர்கள் குடித்தாலும் இவர் மட்டும் குடிக்கவே மாட்டார். ஆனால், இந்த வைராக்கியம் தொடருமா என்றால் தொடராது. அடுத்தடுத்த மாதங்களில் மீண்டும் குடிக்க ஆரம்பிப்பார். எனவே, அதே சூழலும் நபர்களும் மீண்டும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொள்ள காரணமாக இருப்பார்கள்.
போதைப் பழக்கம் பரம்பரையாகத் தொடருமா?
அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருக்கும். அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் வேறு வேறு பொருள்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம். மகன் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி இருப்பான். ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருள்தான் வேறே தவிர, அந்த அடிமைத்தனம் என்பது பொது. மூளையில் டோபமைன் என்ற ரசாயனம் குறிப்பிட்ட ஓரிடத்தில், அதாவது `ப்ளெஷர் பாத்வே' எனுமிடத்தில் அதிகம் சுரப்பதுதான் அடிமைத்தனத்துக்கான பாதை. இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்.

மற்றவர்களைப் பொறுத்தவரை அதீத ஸ்மார்ட்போன் பயன்பாடெல்லாம் அடிக்ஷனில் வருமா என்ற கேள்வி இருக்கலாம். மனநல மருத்துவர்களாகிய நாங்கள் அதையும் அடிக்ஷனாகவே அணுகுகிறோம். திடீரென போன் உடைந்துபோனாலோ, போன் இல்லாத சூழலிலோ இது வெளிப்படும்.
`என் பையனுக்கு எந்த அடிக்ஷனும் இல்லை' என்று பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அந்த நபர் கேமிங் அடிக்ட்டாகவோ, ஸ்மார்ட்போன் அடிக்ட்டாகவோ இருக்கலாம். ஆபாச வீடியோ பார்க்கும் அடிக்ஷன் இருக்கலாம். காரணம் மூளையில் நிகழும் அந்த ரசாயன மாற்றம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு குடிப்பழக்கம் இருக்கும். `உங்க குடும்பத்துல யாருக்காவது குடிப்பழக்கம் இருக்கா' என கேட்டால், `எங்க குடும்பத்துல வேற யாரும் குடியைத் தொடவே மாட்டாங்க... இவன் மட்டும்தான் குடிக்கிறான்' என்று அழைத்து வருவார்கள். அந்தக் குடும்பத்தின் கிளைகளை ஆராய்ந்தால் யாரோ ஒருவருக்கு சூதாட்டத்தில் அடிக்ஷன் இருந்திருக்கும். இன்னொருவருக்கு புகையிலைப் பழக்கம் இருந்திருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று... குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டிய அந்த நபரை சூதாட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு மத்தியில் விட்டால் அந்த நபர், குடியை விட்டு, சூதாட்டத்துக்கு அடிமையாகிவிடுவார்.

எனவே, அந்தச் சூழலும் இடமும்தான் ஒரு நபர் எதற்கு அடிமையாகிறார் என்பதை நிர்ணயிக்கின்றன.
இப்படி அடிக்ஷன் உள்ள குடும்பச் சூழலில் வளரும் ஒரு நபருக்கு, அதெல்லாம் சாதாரணம் என்ற மனநிலை வரும். உதாரணத்துக்கு அப்பா குடிக்கிறார்... குடித்தால்தான் அவருக்குத் தூக்கம் வரும் என்று குடும்ப நபர்களே அதை சாதாரண விஷயமாகப் பதியவைத்திருப்பார்கள். அந்த நபர் வளரும்போது, `தூக்கம் வரலைனா குடிக்கலாம்' என்ற எண்ணத்துடன்தான் இருப்பார். எனவே அடிக்ஷன் என்ற விஷயத்தை ஒரு பெரிய வட்டமாகப் பார்ப்பதுதான் சரியான அணுகுமுறை.
அடிக்ஷனை பொறுத்தவரையில் ஆரம்பநிலையில் அதைக் கண்டறிவது சுலபம். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு, தீவிரநிலைக்குப் போன பிறகு பார்த்து மருத்துவரிடம் அழைத்துவருவார்கள். அந்தநிலையில் அதைக் கையாள்வது சற்று சிரமமானது.
மதுவாகட்டும், போதைப் பொருளாகட்டும்.... ஆரம்பத்தில் மாதத்தில் ஒருநாள், வாரத்தில் ஒருநாள் என்று தொடங்கி, பிறகு தினசரி பழக்கமாக மாறியிருக்கும். ஒரு கட்டத்தில் அது அந்த நபரை அடிமைப்படுத்தும் என்று தெரிந்தாலும், `வாரத்துக்கு ஒருதடவைதானே எடுக்கறான்... என்னாயிடப் போகுது' என்று விடும்போதுதான் அது கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்கு எல்லை மீறுகிறது.''

போதைக்கு அடிமையானவர்கள் வன்முறையாக நடந்துகொள்வார்களா.... `வாரணம் ஆயிரம்' சூர்யா மாதிரி தன்னிலை மறந்துபோவார்களா.... அவர்களை போதையிலிருந்து மீட்கும் சிகிச்சை எப்படி இருக்கும்....? அடுத்த அத்தியாயத்தில்..!