Published:Updated:

கோவிட் 19: மாற்றமடையும் நோய்க்கான அறிகுறிகள்; காரணம் என்ன?

``பெரும்பாலானவர்களுக்கு உடலில் கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால் கோவிட் வந்தால் ஆரம்ப நாள்களில் உடலில் வைரஸ் இருந்தாலும் அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் கழித்துதான் அறிகுறிகள் வெளியே தெரியும்."

இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துவிட்ட நிலையில், கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு உடனுக்குடன் தெரிந்த அறிகுறிகள் சற்று கால தாமதமாகத் தெரிவதாகவும், தாக்கமும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள நுரையீரல் மருத்துவர் சிந்தூராவிடம் பேசினோம்:

Covid-19 Pandemic
Covid-19 Pandemic

``இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று (Pandemic) என்ற நிலையிலிருந்து பல இடங்களில் சாதாரணமாக உருவாகும் நோயாக (Endemic) மாறிக்கொண்டிருக்கிறது. பெருந்தொற்று என்றால் அதிக எண்ணிக்கையிலானோர் நோயால் பாதிக்கப்படுவார்கள், பாதிப்பு குறையும், பின்னர் அதிகரிக்கும். அதுபோல இந்தியாவில் இரண்டு அலைகள் ஏற்பட்டு முடிந்துவிட்டன. ஆனால், பல நாடுகளில் இன்னும் பெருந்தொற்று காலம்தான் நீடிக்கிறது. எண்ணிக்கை அதிகரித்து அதிகரித்து குறைந்துகொண்டிருக்கிறது.

Endemic என்றால்...

`எண்டெமிக்' எனும்போது இந்தத் தொற்று மக்களிடையே நிரந்தரமாக அல்லது சில ஆண்டுகளுக்கு காணப்படும். ஆனால் பாதிப்பின் தீவிரம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்காது. டைபாய்டு, மலேரியா போன்று கோவிட்-19 நோயும் மாறிவிடும். அவ்வப்போது சிலருக்கு வரும், போகும் என்ற நிலையில் இருக்கும்.

 Covid
Covid
AP Photo / Channi Anand

அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஓர் ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவில் 6 வயதுக்கு மேற்பட்ட 67.4% பேருக்கு கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிக்கள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு கோவிடுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருக்கிறது.

மீதமுள்ள 32.6% பேரில் சிலர் ஆய்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்டிருக்கலாம், ஓராண்டுக்கு முன்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் ரத்தத்தில் ஆன்டிபாடி தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் நோய் எதிர்ப்புத் திறன் இருக்கவே செய்யும். வைரஸுக்கு வெளிப்பட்டது மட்டுமன்றி 100 கோடி டோஸுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தியதும் இதற்கு முக்கிய காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3-வது அலை சாத்தியமா?

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்ட சில வகை கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் மக்களிடையே உருவாகியுள்ளன. அதனால் இரண்டு அலைகளின்போது தாக்கத்தை ஏற்படுத்திய வைரஸ்தான் `எண்டெமிக்' நிலைக்கு வந்துள்ளது.

இவை இல்லாமல் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் வகை பரவி நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதற்கு எதிராக வேலை செய்யவில்லை எனும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவ்வாறு இந்தியாவில் மூன்றாம் அலை வந்தாலும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்தான் நோயைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவார்கள்.

Representational Image
Representational Image
Doctor Vikatan: டெங்கு பாதித்த நபரை எந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்?

பெருந்தொற்றுக் காலமோ, எண்டெமிக் காலமோ... 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டவர்கள் தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தானவர்கள் பட்டியிலில் எப்போதும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் கோவிட் தொற்று ஏற்பட்டால் பாதிப்பும் தீவிரமும் அதிகமாகவே இருக்கும். ஏற்கெனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும், கோவிட் தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டாலும் இந்தப் பட்டியிலில் இருப்பவர்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆபத்தான பட்டியலில் உள்ளவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 முதல் ஓராண்டு ஆகிவிட்டது என்றாலோ, நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலோ இவர்களின் உடலில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியின் அளவு சற்றுக் குறைந்திருக்கலாம். எனவே, இவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பொதுவெளியில் அதிகம் பணியாற்றுபவர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு பிற நாடுகளில் பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் அதைச் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

அறிகுறிகளில் மாற்றம்!

Pulmonologist Dr.Sindhura
Pulmonologist Dr.Sindhura

7 - 8 நாள்களுக்குப் பிறகே சுவை, வாசனை இழப்பு, குறைந்த வெப்பநிலையில் காய்ச்சல், லேசான உடல் சோர்வு என கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மையா என்றும் 1% பேருக்குத்தான் மூச்சுத்திறணல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறதா என்றும் கேட்டோம்:

``பெரும்பாலானவர்களுக்கு உடலில் கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால் கோவிட் வந்தால் ஆரம்ப நாள்களில் உடலில் வைரஸ் இருந்தாலும் அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் கழித்துதான் இருமல், லேசான காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வெளியே தெரியும். அந்த அறிகுறிகளும் லேசானதாகவே காணப்படும். காரணம், உடலிலிருக்கும் ஆன்டிபாடி தங்களால் இயன்றவரை வைரஸுக்கு எதிராகப் போரிடும்.

தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் வெறும் 1% பேருக்கே மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த ஒரு சதவிகிதம் பேரும் ஏற்கெனவே கூறியபடி அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் உள்ளவர்களும், ஆன்டிபாடி உருவாகி ஓராண்டுக்கு மேலாகியிருப்பவர்களுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இதுபோன்ற தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படலாம். இதுபோன்ற பட்டியலிலுள்ளவர்களுக்கு ஒருமுறை தொற்று பாதித்து மீண்டும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரம் அதிகமாகத்தான் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

Patient at Hospital (Representational Image)
Patient at Hospital (Representational Image)
Image by Parentingupstream from Pixabay
Doctor Vikatan: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அறுவைசிகிச்சை செய்துகொள்ளக் கூடாதா?

கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்றால் ஆபத்தானவர்கள் பட்டியலில் உள்ளவர்கள், ஆன்டிபாடி அளவு குறைந்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு தடுப்பூசி அல்லது பூஸ்டர் தவணை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் நோயைப் பரப்ப வாய்ப்புள்ளது என்பதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு