Published:Updated:

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்?

சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு. கு

நம் அன்றாட வாழ்வில் பயன்பாட்டு அடிப்படையில் நமக்குப் பல கேள்விகள் தோன்றும். ஆனால், அதற்கான பதிலை அறிந்துகொள்ளும் முனைப்பு இல்லாமல், பலரும் அதைக் கேள்விகளாகவே சுமந்து கொண்டிருப்போம். நம்முடைய அந்த வினாக்களுக்கு துறைசார் நிபுணர் களின் விளக்கம் கிடைக்கும்போது, ‘அட, இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா..?’ என்று தோன்றும்தானே?!

அந்த வகையில் ஆரோக்கியம், அழகு, சமையல், வீட்டுத்தோட்டம் எனப் பலதரப்பட்ட தளங்களில், பெரும்பான்மையான வாசகர்கள் விடை காண விரும்பும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்கும் நோக்கத்துடன் விகடன் இணையதளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் ஹிட் தொடர், #HowToSeries.

`பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி?', ‘வீட்டில் புதினா செடி வளர்ப்பது எப்படி?’, `மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?' எனப் பலவிதமான கேள்விகளுக்கும் செயல்பாட்டு அளவில் பதில் அளிக்கும் பகுதி. அதில் இடம்பெற்ற, வாசகர்களால் அதிகமாகப் படிக்கப் பட்ட சில கேள்வி - பதில்களை இந்த இணைப்பிதழில் தொகுத்திருக் கிறோம். இதுபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்... பதில்கள் பெற்றுத் தருகிறோம்!

கேளுங்கள் கிடைக்கப்பெறும்!

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி?

பொடுகு ஏன் ஏற்படுகிறது?

சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு. குறிப்பாக, இளம் வயதினருக்குப் பல நேரங்களில் தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு.

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள்.

‘பொடுகு பிரச்னையைப் போக்கலாம்’ என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூக்களை, அதிகம் பணம் கொடுத்து வாங்கிப் பயன் படுத்துகிறோம். ஆனால், இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக்கூடிய மற்றும் நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக் கூடியவை. அப்படி பொடுகை விரட்ட உதவும் வழிகள் இங்கே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
powerofforever

தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து,

20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தயிர் குளியல்

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா பேக்

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, தலையை அலசவும். பேக்கிங் சோடா, பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டுவிடும்... கவனம்!

கூந்தல் ஊட்டத்துக்கு டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree Oil)

டீ ட்ரீ என்று அழைக்கப்படும் `மெலலூக்கா ஆல்டர்னிஃபோலியா' (Melaleuca alternifolia) என்ற தாவரத்தின் இலையிலிருந்து பிரிக்கப்படும் எண்ணெய், தேயிலை மர எண்ணெய் (இதற்கும் நாம் பயன்படுத்தும் தேயிலைக்கும் தொடர்பில்லை). இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
Lyubov Smirnova

ஆப்பிள் சிடர் வினிகர்... பொடுகு மருந்து

ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிடவும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

வெந்தயம்... வீரியம்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெங்காயம் காக்கும்

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

வேப்பிலை கசப்பு... பாக்டீரியாவுக்கு எதிரி

கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.

ஆரஞ்சு தோல்... அட்டகாசம்

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

மருதாணி இலை மகிமை

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

பொடுகு பேக்...

* ``ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக் கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால் பேன், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும்.

* வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.

* நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்பங்கொழுந்தை அரைத்து தடவவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

* ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்துக் காய்ச்சி, வடிகட்டவும். இந்த எண்ணெயைத் தலை முழுவதும் விடவும். ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்தால், பேன், பொடுகு வந்துவிடும். பிறகு, சின்ன சீப்பால் வாரவும்.

* வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.

* வாரம் ஒருமுறை இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால், தலை சுத்தமாகும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் தி.வேணி.

வி.விக்ரம்குமார்
வி.விக்ரம்குமார்

மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி?

சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் தரும் தகவல்கள்...

ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டும் காரணி

‘` `மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் என்ன… டீ குடித்தால்தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாகப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. மேற்சொன்ன எந்தப் பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் காரணியே மலம். `சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’ என்று அலட்சியமாக விடக்கூடிய விஷயமல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

காரணிகள்

துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. பெருநகரங்களின் துரித வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு, வேறுவழியின்றி தினமும் துரித உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், மலச்சிக்கலைப் பற்றி. துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள்.

சிலவகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மன அழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்க மின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்க வேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதை யில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம் வரை கொண்டு செல்லும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
bymuratdeniz

மலம் கழிக்கும் முறை முக்கியம்

மேலைநாட்டுப் பாணி கழிப்பறையில் (Western Toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது, ஒரு சிறுகதையே படித்து முடித்திருந்தாலும், மலம் வெளியேறாமல் தவிப்பவர்கள் உண்டு. மூட்டுகளில் எந்தப் பிரச்னையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting Position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்து பவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிக அளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டுப் பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாகக் கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

மலமிளக்கி மருந்துகள் எப்போது தேவை?

மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்து களின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படு வதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயல வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், 15 வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவை யில்லாமல் வரவழைப்பது தவறு.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

நார்ச்சத்து நலம் தரும்!

நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளைத் துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள (Insoluble fibre) உணவுகளைக் கலந்து உட்கொள்ளலாம். பசலை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழு தானியங்கள், கொட்டை வகைகள் என அனைத்தும் தேவை. மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் 65 சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர்… விளக்கெண்ணெய்

குடலுக்கு நன்மை செய்யக்கூடிய `புரோபயாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர், குடலின் அசைவுகளை அதிகரிக்க (Peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக் கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது.

பேதி… பீச்சு…

செரிமானத்தைச் சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். நீண்டகால மலக்கட்டை சரிசெய்ய, `பீச்சு’ (Enema) எனப்படும் புற மருத்துவ முறையும் அற்புதமான பலனை அளிக்கக்கூடியது.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

எளிய மருந்துகள்…

சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள `கிளைக்கோசைடுகள்' (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட எளிய வழிமுறைகள் சிலவற்றை கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

‘`ஆயுர்வேத மருத்துவத்தின்படி பல நோய்களுக்கு மூல காரணமே மலச்சிக்கல்தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியாக வெளியேறினால் மனம் அமைதியாக இருக்கும். மலம் சீராக வெளியேறவில்லை என்றால் உடல்நலம் பாதிப்பதுடன் மனமும் பாதிக்கப்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமென்றால், நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதேபோல உணவு உட்கொண்ட ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து உட்கொள்ள வேண்டும். இதைத் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்வதால் நாளடைவில் மலச்சிக்கல் என்பதே இருக்காது.”

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
Dinesh Khanna

சுவையான பிரியாணி செய்வது எப்படி?

இந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகைக் கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டது. வீட்டில் சமைப்பதைவிட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். வீட்டிலேயே டேஸ்ட்டியாக பிரியாணி செய்ய இதோ சில ரெசிப்பிகள்...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையானவை: சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ, சீரகச் சம்பா அரிசி – ஒரு கிலோ, மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய் – 4, கிராம்பு – 5, முந்திரி – 25 கிராம், கசகசா – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 3 கப், வெங்காயம், தக்காளி – தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்), நெய் – 100 கிராம், எண்ணெய் – 100 மில்லி, சோம்பு – அரை டீஸ்பூன், புதினா - ஒரு கட்டு (ஆயவும்), கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் மூன்று கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
Anish Arunkumar Pandya

மட்டன் பிரியாணி

தேவையானவை: மட்டன் – ஒரு கிலோ, பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ, தயிர் – ஒரு கப், காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கவும்), புதினா – ஒரு கட்டு (ஆயவும்), கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 25 கிராம், வறுத்து அரைத்த முந்திரி விழுது - 2 டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்), வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம், வாழை இலை - 2, எண்ணெய் – 100 மில்லி, நெய் – 75 மில்லி, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த சின்ன வெங்காயம் – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மட்டனுடன் தயிர், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், முந்திரி விழுது, எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், சின்ன வெங்காயம் சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டுப் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மிருதுவாக வேகவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீருடன் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும். தவாவைச் சூடாக்கி, மட்டன் பாத்திரத்தை வைத்து, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழையிலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கவும். அதன்மீது வறுத்த வெங்காயம், கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
subodhsathe

ஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – கால் கிலோ, வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), புதினா இலைகள் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்), தயிர் – 2 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம், எண்ணெய் – 25 மில்லி, காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர்) – கால் கிலோ, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் அரிசியைச் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும், அதனுடன் வதக்கிய காய்கறிக் கலவை சேர்த்துக் கலக்கவும். பிறகு நெய், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன்மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை தம் போடவும். பிறகு ராய்த்தாவுடன் பிரியாணியைச் சூடாகப் பரிமாறவும்.

வெள்ளைக் காய்கறி பிரியாணி

தேவையானவை: காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் சேர்த்து) – அரை கிலோ, சீரகச் சம்பா அரிசி – அரை கிலோ, வெங்காயம் – ஒன்று, புதினா - கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு, மிளகு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 2 சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், தயிர் – அரை கப், துருவிய தேங்காய் – கால் கப், பெருஞ்சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு – 4, ஏலக்காய் – 5, அன்னாசிப்பூ – 4, பிரியாணி இலை – 4, முந்திரி - 10, தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறி மற்றும் அரிசியை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை ஒன்றாகச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

துருவிய தேங்காய், மிளகு, பெருஞ்சீரகம், கசகசா, முந்திரியை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்கவும். அரைத்துவைத்துள்ள பச்சை விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்த காய்கறி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் ஊற்றிக் கலந்து, நெய் மிதக்கும் வரை வதக்கவும். சுத்தம் செய்த அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெள்ளை காய்கறி பிரியாணி ரெடி.

கௌரி மீனா
கௌரி மீனா

`மாதவிடாய் கப்' பயன்படுத்துவது எப்படி?

பெண்கள் மாதவிடாய் நாள்களில் நாப்கின், டாம்பூன்ஸ், மாதவிடாய் கப் எனப் பலவற்றை தங்கள் தேர்வுக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். அவற்றில், பெரும்பாலும் நாப்கின்களே பலராலும் விரும்பப்படுகின்றன. நாப்கினை தவிர மற்றவையின் பயன்பாடு குறித்துப் பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும், அவற்றை பயன்படுத்துவது குறித்த ஒரு பயமும் பெண்கள் நாப்கினை மட்டுமே நாட காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், `மாதவிடாய் கப்'பை (Menstrual Cup) எப்படிப் பயன்படுத்துவது, ஏன் அது பரிந்துரைக்கத்தக்கதாக இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கௌரி மீனா.

``ரப்பர் அல்லது சிலிகானால் ஆன, கூம்பு வடிவத்திலான மாதவிடாய் கப், அலர்ஜியை ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுகிறது.

ஒரு மாதவிடாய் கப்பை, நேர்த்தியாகப் பராமரிக்கும் பட்சத்தில் 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் முன் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் கப் நழுவிவிடுமோ என்பது தேவையற்ற அச்சம்.

காப்பர் டி உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது. ‘ஹைமன்’ எனப்படும் கன்னித்திரை, மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது பாதிப்புக்கு உள்ளாகாதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், மாதவிடாய் கப் பொருத்தும்போது ஹைமன் அதற்கேற்றவாறு தகவமைந்துவிடும்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!
stefanamer

ஏன் மாதவிடாய் கப்பைப் பயன்படுத்த வேண்டும்?

நாப்கின், டாம்பூன் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது அதன் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், ஒரு மாதவிடாய் கப்பை பல ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பதால் நாப்கின், டாம்பூன் கழிவுகளை இதன் மூலம் குறைக்கலாம். மேலும் பாதுகாப்பானது,

விலை குறைவானது. நாப்கின், டாம்பூனைவிட அதிக உதிரப்போக்கை வாங்கிக்கொள்ளக் கூடியது.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்த வேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதை விடுவிக்கும்போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல,

ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை அதை எடுத்துச் சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்திக்கொள்ள வேண்டும். மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி?

வீட்டில் புதினா செடி வளர்க்கப் பெரிதாக இடம் எதுவும் தேவையில்லை என்பதால், சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில்கூட வைத்து வளர்க்க முடியும். 15 நாள்களில் அறுவடை செய்துகொள்ளலாம். வீட்டுச் சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.

ஸ்டெப் 1: தரமான, தடிமனான, குறைந்தபட்சம் இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டை எடுத்துக்கொள்ளவும். அதில் இலைகள் அனைத்தையும் நீக்காமல், மேலே இரண்டு இலைகளை விட்டு வைக்கவும்.

ஸ்டெப் 2: ஒரு கண்ணாடி டம்ளரில், பாதியளவு நீர் எடுத்துக் கொள்ளவும். அதில், நாம் எடுத்துவைத்திருக்கும் புதினா தண்டுகளை வைக்கவும். டம்ளரில் நீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். டம்ளரை வெயிலில் வைக்கவே கூடாது.

ஸ்டெப் 3: கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் புதினா தண்டுகள் ஐந்து நாள்களுக்குப் பின் வேர் விட ஆரம்பித்திருக்கும். மேலே இருந்த இரண்டு இலைகளுடன் இன்னும் சில இலைகள் வளர ஆரம்பித்திருக்கும். இப்போது இந்தத் தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும். ஏற்கெனவே வேர் விட்டிருக்கும் புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றும்போது நன்றாக வளர ஆரம்பிக்கும்.

ஸ்டெப் 4: புதினா படர்ந்து வளரக்கூடிய செடி என்பதால் குறுகிய தொட்டிகளிலோ, பைகளிலோ வைக்க வேண்டாம். அகலமான தொட்டிகளில், குரோ பேக்குகளில் வைக்கவும்.

தொட்டி/குரோ பேக்கில் மண் கலவையை தேங்காய் நார்க் கழிவுகள் 30%, மண்புழு உரம் 30%, செம்மண் 40% எனக் கலந்து தயாரிக்க வேண்டும். இப்படி தயாரித்த மண் கலவையில், விரல்களால் குழி பறித்து புதினா தண்டுகளை நட வேண்டும்.

நேரடியாக சூரிய ஒளிபடும்வகையில் புதினா தண்டு நட்ட தொட்டியை வைக்கக் கூடாது. ஆனால், புதினா செடியின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்பதால் அதற்கு ஏற்றாற்போன்ற இடத்தில் வைக்க வேண்டும். 10 நாள்களில் புதினா வளர்ந்துவிடும். மேல் இருக்கும் இலைகளை எடுத்துவிட்டால் கீழிருக்கும் இலை களுக்கு சூரிய ஒளி கிடைக்கும்.