Published:Updated:

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. கலக்கத்தில் ராமநாதபுரம் மக்கள்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( விகடன் )

ஓரிரு நாள்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இல்லாமலும், அதற்கு மறுநாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுமாக மாறி மாறி வரும் நிலை இருந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இரு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கொரோனா ஊரடங்கிலிருந்து படிப்படியாக விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
உ.பாண்டி

மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுமைக்கும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையே நீடித்தது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை
உ.பாண்டி

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓரிரு நாள்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இல்லாமலும், அதற்கு மறுநாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுமாக மாறி மாறி வரும் நிலை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 39 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் இறந்து போன நிலையில் 17 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர்.

இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கீழக்கரையைச் சேர்ந்த 6 மற்றும் 10 வயது குழந்தை உட்பட 6 பேருக்கும், சாயல்குடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

வடமாநில தொழிலாளர்கள் பயணம்
வடமாநில தொழிலாளர்கள் பயணம்
உ.பாண்டி

மாநிலத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் சில விதிவிலக்குகள் அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மாவட்ட மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் பயணம்
வட மாநில தொழிலாளர்கள் பயணம்
உ.பாண்டி

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 466 பேர் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கென ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 466 பேர் ராமநாதபுரம் அழைத்து வரப்பட்டனர். அங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 466 பேரும் ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு