Published:Updated:

கோவிட்-19: அறிகுறிகளற்றவர்களுக்கும் பாதிப்பு, அதிகாலை மரணங்கள்... ஏன்? #VikatanExplainer

கோவிட்-19 உயிரிழப்புகள்
News
கோவிட்-19 உயிரிழப்புகள்

வீட்டிலேயே சிகிச்சை பெறும் கோவிட்-19 நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளிடையே நள்ளிரவு, அதிகாலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் அதனைக் கூடுதல் கவனத்துடன் கையாள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் இரவு நேரப் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணிவரை என 12 மணி நேரம் செவிலியர்கள் இரவுப் பணி செய்வார்கள்.

Nursing care
Nursing care

தற்போது இரவிலும் நோயாளிகளுக்கு கூடுதல் கண்காணிப்பு வேண்டும் என்பதால் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை ஒரு ஷிஃப்ட், நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணிவரை மற்றொரு ஷிஃப்ட் என இரவு நேரப் பணி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்குப் பணிக்கு வரும் செவிலியர்கள் நோயாளிகளின் உடல்நிலையைப் பரிசோதித்துக் கண்காணிப்பார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீண்டும் நள்ளிரவு 1 மணிக்குப் பணிக்கு வரும் செவிலியர்கள் மீண்டும் ஒருமுறை அனைத்து நோயாளிகளின் உடல்நிலையையும் பரிசோதிப்பார்கள். அதன் மூலம் இரவில் ஏதேனும் மருத்துவ அவசரம் ஏற்பட்டால் கூடுதல் கண்காணிப்புடன் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகளற்ற, லேசான கோவிட்-19 பாதிப்புள்ளவர்கள்கூட தூக்கத்திலேயே உயிரிழக்கக்கூடும்.
தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சன்

அதிகாலை உயிரிழப்புகள் ஏன்?

பொதுவாகவே, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற மருத்துவ அவசரங்கள் அதிகாலையில் அதிகளவில் ஏற்படும் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர்காலங்களில் உடலின் வெப்பநிலை குறையும்போது அதைச் சமன்படுத்த உடலில் வளர்சிதை மாற்றங்கள் அதிகமாகும். அதன் காரணமாக இதயத்துடிப்பு அதிகரிப்பது, ரத்த ஓட்டம் தடைப்படுதல் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்-19 நோயைப் பொறுத்தவரை அதிகாலை மரணங்களுக்கான காரணங்கள் என்ன என்று தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்:

"பொதுவாகவே 1 நிமிடத்துக்கு 16 - 18 முறை மூச்சுவிடுவோம். இரவு தூங்கும்போது உடல் தளர்வாக இருப்பதால் சுவாச மண்டலம் சற்று மெதுவாகச் செயல்படும் என்பதால் மூச்சுவிடும் எண்ணிக்கையும் குறையும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் மூச்சுவிடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும் 'ஹேப்பி ஹைப்போக்ஸியா' பிரச்னை ஏற்படும்.

Infectious disease Dr.N.Sudarshan
Infectious disease Dr.N.Sudarshan

அதன் தொடர்ச்சியாக இதயத்திலுள்ள திசுக்களுக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவை சேதமடைந்து உயிரிழப்பு ஏற்படும். கோவிட்-19 நுரையீரலை மட்டுமல்ல மூளை, சிறுநீரகம் உள்ளிட்டப் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. அதனால் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளும் உயிரிழப்புக்குக் காரணங்களாகின்றன.

ஹேப்பி ஹைப்போக்ஸியா தொடங்கி ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலித் தொடர்போல ஏற்படும். குறிப்பாக, ஹேப்பி ஹைப்போக்ஸியா தூண்டிவிடுவதால் இதய செயலிழப்புகள்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன.

அறிகுறிகளற்றவர்களுக்கும் ஆபத்து!

ஆரோக்கியமானவர்களுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு 94 என்ற அளவுக்குக் கீழே சென்றாலே மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். ஆனால், கோவிட்-19 நோயாளிகளுக்கு 80-க்குக் கீழே சென்றால்கூட அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மிகவும் கீழே சென்ற பிறகுதான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அறிகுறிகளற்ற, லேசான கோவிட்-19 பாதிப்புள்ளவர்கள்கூட தூக்கத்திலேயே உயிரிழக்கிற நிலை ஏற்படுகிறது.

pulse oximeter
pulse oximeter

6 நிமிட வாக்கிங் பரிசோதனை

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருப்பவர்கள், குறிப்பாக காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தினமும் காலை 6 நிமிடங்கள் நடக்க வேண்டும். இயல்பாக நடைப்பயிற்சி செய்யும் வேகத்தில் நடந்தால் போதும். நடந்து முடித்த பிறகு பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் அளவு 90-க்கும் கீழே இருந்தால், தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையில் அனுமதித்து ஆக்ஸிஜன் கொடுத்து சிகிச்சையளிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களைக் காப்பாற்ற முடியும்.

இரவும் பரிசோதிக்க வேண்டும்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அவ்வப்போது செவிலியர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதனால் வீட்டிலிருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டிலேயே க்வாரன்டீனிலிருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள், சர்க்கரைநோய், உடல்பருமன், இதய நோய் போன்ற வேறு பிரச்னைகள் (comorbidities) இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு காலை, நள்ளிரவு இரண்டு நேரமும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

Covid-19 patients need attention in the nights also...
Covid-19 patients need attention in the nights also...

நோயாளிகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தாலும் உறவினர்கள் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90-க்கும் கீழே சென்றுவிட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துவிட வேண்டும்" என்றார் அவர்.

வீடுகளில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளைவிட அவர்களின் உறவினர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நாம் கற்றறிய வேண்டிய செய்தி.