Published:Updated:

`கமலுக்குக் காலில் பொருத்தப்பட்ட உலோகக் கம்பி ஏன் அகற்றப்படுகிறது?' - மருத்துவர் விளக்கம்

"அறுவை சிகிச்சைக்குப் பின் கமல் மூன்று வாரங்கள் ஓய்விலிருப்பார்!" - மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த உலோகக் கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது.

கமல்
கமல்

2016-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தன் வீட்டில் கமல் மாடிப் படியேறும்போது கால் தவறி விழுந்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் லண்டனில் நடைபெற்ற லண்டன் இந்தியத் திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவிருந்தது. அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் அதில் கலந்துகொள்ள முடியாமல் போனது நினைவிருக்கலாம்.

அறுவை சிகிச்சை முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியானது. அதில்,

`கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டைட்டானியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளுவின் காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி 22/11/2019 அன்று அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது!'

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரும் மருத்துவருமான ஆர்.மகேந்திரனிடம் பேசினோம்.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரனுடன் கமல்
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரனுடன் கமல்

''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை இரண்டு ஆண்டுகள் கழித்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அதை அகற்றுகிறார்கள். இது மைனர் சிகிச்சையல்ல என்றாலும், சிகிச்சை முடிந்த அடுத்த நாளே அவரை நடக்க வைத்துவிடுவார்கள். அதற்குப் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஓய்வு தேவைப்படும்" என்றார்.

பொதுவாக, எலும்பு முறிவுக்குப் பொருத்தப்படும் உலோகத் தகடு அல்லது கம்பியை அகற்றுவது தொடர்பாக அறிந்துகொள்ள, எலும்பியல் மருத்துவர் நரேஷ் குமாரிடம் பேசினோம்.

எலும்பியல் மருத்துவர் நரேஷ் குமார்
எலும்பியல் மருத்துவர் நரேஷ் குமார்

"பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் உலோகத்தகடு அல்லது உலோகக்கம்பி பொருத்தப்படும். முறிவு ஏற்பட்ட எலும்புகள் இணைவதற்காக அவை பொருத்தப்படும். உலோகத்தகடு என்றால் எலும்பின் மேல்புறத்திலும் உலோகக்கம்பி என்றால் எலும்பின் உள்பகுதியிலும் பொருத்தப்படும். இவை ஆங்கிலத்தில் 'இம்ப்ளான்ட் (Implant)' என்று அழைக்கப்படுகிறது. முறிந்த இடத்தில் இம்ப்ளான்ட் பொருத்தப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எலும்பு இணைந்துவிடும். இம்ப்ளான்ட் பொருத்தப்பட்டு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றின் பயன்பாடு முற்றிலும் நிறைவடைந்துவிடும்.

இந்த இம்ப்ளான்ட்கள் பெரும்பாலானவர்களுக்கு எந்தத் தொந்தரவையும் அளிப்பதில்லை. எலும்பு முறிவு ஏற்பட்டு 100 பேர் இம்ப்ளான்ட் பொருத்தினால் அவர்களில் 75 பேர் அதை தங்கள் வாழ்நாள் முழுவதும் அகற்றுவதில்லை. ஆனால் சிலருக்கு இம்ப்ளான்ட் பொருத்தப்பட்ட இடத்தில் உறுத்தல் (Irritation), நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

Implant
Implant
Vikatan

அப்படிப் பிரச்னை ஏற்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து இம்ப்ளான்டை வெளியே எடுத்துவிடுவார்கள். சிலர் கடினமான வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அவர்களுக்கும் இம்ப்ளான்ட்டை அகற்றிவிடுவார்கள். தங்கள் உடலில் உலோகம் இருக்க வேண்டாம் என்று நினைப்பவர்களும் அதை அகற்றிக்கொள்கின்றனர்.

இம்ப்ளான்டை அகற்றும் அறுவை சிகிச்சை (Implant Removal Surgery) அதிகபட்சம் 2 மணி நேரம் நடைபெறும். எலும்புக்குள் பொருத்தப்பட்டிருந்தது கம்பி இம்ப்ளான்ட் என்றால் எலும்பில் பொருத்தப்பட்ட வழியே சென்று அதை அகற்றுவார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் காயங்கள் ஆறுவதற்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆகும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர் தன் இயல்பான வேலையைச் செய்ய முடியும்.

Implant Removal Surgery
Implant Removal Surgery
praisaeng / Getty Images

இம்ப்ளான்ட்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம் ஆகிய இரண்டு உலோகங்களில் கிடைக்கின்றன. டைட்டானியம் சற்று விலை அதிகம். ஆனால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதில் குறைவு" என்றார்.