Published:Updated:

அன்பும் தைரியமும்தான் அந்த மருந்துகள்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியிலிருந்து எப்படிப்பட்ட தன்னம்பிக்கை வார்த்தைகள்!

அன்பும் தைரியமும்தான் அந்த மருந்துகள்!

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியிலிருந்து எப்படிப்பட்ட தன்னம்பிக்கை வார்த்தைகள்!

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா
இதுவரை செய்திகளில் எண்களாகப் படித்து, பார்த்துக்கொண்டிருந்த கோவிட்-19 தொற்றாளர்கள், இப்போது அக்கம் பக்கம், நட்பு, உறவு என நம் வட்டத்துக்குள் தெரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது அச்சத்தை நெருக்கமாக உணரவைக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கொரோனா வந்து மீண்டவர்களும், அவர்களை மீட்டெடுத்த அவர்களின் குடும்பத்தினரும், கொரோனாவுக்கு எதிரான தற்போதைய நம் நம்பிக்கைகளாகியிருக்கிறார்கள். அப்படி மீண்ட, மீட்டெடுத்த சிலரிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கணவருக்கு நுரையீரல்வரை தொற்றாகிடுச்சு!”

“முதல்ல என் கணவருக்குத்தான் காய்ச்சல் வந்துச்சு. ரெண்டு நாள் கழிச்சு எனக்கு வாசனையை உணர்ற சென்ஸ் சுத்தமா போயிடுச்சு. அப்புறம் ருசியும் தெரியாமப்போச்சு. என் கணவருக்குக் காய்ச்சலும் விட்டபாடில்ல. கையில் ரெண்டரை வயசுக் குழந்தை. கீழ் போர்ஷன்ல நாங்க, மேல் போர்ஷன்ல அத்தையும் மாமாவும் இருந்தாங்க. குழந்தையை அத்தை, மாமாகிட்ட விட்டுட்டு கணவரைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போனேன். ரெண்டு பேருக்குமே கொரோனா பாசிட்டிவ். எனக்கு மைல்டா இருந்துச்சு, அவருக்கு நுரையீரல் வரைக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது.

`படத்தில் இருப்பவர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர் இல்லை'
`படத்தில் இருப்பவர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர் இல்லை'

ஓமந்தூரார்ல ட்ரீட்மென்ட் எடுத்துக் கிட்டோம். அப்புறம் எங்க வீட்டிலேயே க்வாரன்டீன்ல இருக்க ஆரம்பிச்சோம். அலோபதி மருந்துகளுடன் யோகா, மூச்சுப்பயிற்சி மற்றும் கபசுரக் குடிநீர், காய்கறிகள், பழங்கள்னு சாப்பிட ஆரம்பிச்சோம். இதுக்கு நடுவுல என் மாமாவுக்கும் கொரோனா வந்துடுச்சு. என் அம்மாவை வரவழைச்சு, குழந்தையை அவங்களுடன் அனுப்பி வெச்சுட்டு, மாமாவையும் இப்ப நான்தான் பார்த்துக் கிறேன். எங்களோட க்வாரன்டீன் முடிஞ்சிருச்சு. கூடிய சீக்கிரம் என் மாமாவையும் கொரோனாகிட்ட இருந்து மீட்டுடுவேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்குங்க” என்கிற ப்ரீதிக்கு ஜஸ்ட் 23 வயதுதான். சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர். கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியிலிருந்து எப்படிப்பட்ட தன்னம்பிக்கை வார்த்தைகள்!

“அம்மாவுக்கு நாப்கின் மாத்திவிட்டேன்!”

ஷ்யாம் சுந்தர், கல்லூரி இறுதியாண்டு பொறியியல் மாணவர். தன் அம்மாவைக் கொரோனாப் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவந்திருக்கும் இவர், சென்னைப் பெரம்பூரைச் சேர்ந்தவர். “என் அம்மாவுக்கு ஏற்கெனவே இருந்த உடல்நிலைக் கோளாறுகளால் சரியா நடக்க முடியாது. பாத்ரூம் போகக்கூட மத்தவங்களின் உதவி வேணும். இந்த நிலைமையிலதான் கொரோனாத் தொற்றும் ஏற்பட்டுச்சு. ஒரு நாள் நைட்டு முழுக்க அம்மா மூச்சுவிட முடியாமத் தவிச்சுட்டு இருந்தாங்க. நானும் அம்மாகூடவே விடிய விடிய முழிச்சிட்டிருந்தேன். மறுநாள் காலையில அம்மாவை பைக்ல உட்காரவெச்சு என்னோட சேர்த்துக் கயிற்றால கட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல் போனோம். அம்மாவுக்குக் கொரோனா டெஸ்ட் எடுத்ததில், பாசிட்டிவ். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சோம்.

அம்மாவை என்னாலதான் பாத்ரூமுக்குத் தூக்கிட்டுப் போக முடியும்ங்கிறதால நானும் ஹாஸ்பிட்டல்ல தங்கிட்டேன். கொரோனா ட்ரீட்மென்ட், கூடவே மூச்சுப்பயிற்சி, கால்களுக்கு மசாஜ்னு கொடுத்தாங்க. ஒரு நாள் ராத்திரி அம்மாவுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு. ‘நைட்டி நனைஞ்சிடும்டா கண்ணு’ன்னு அம்மா சொன்னப்போ, பக்கத்துல எந்த நர்ஸும் இல்ல. நானே அம்மாவுக்கு நாப்கின் வெச்சுவிட்டேன். அதுக்கப்புறம் மூணு நாளும் நானே நாப்கின் வெச்சு அம்மாவைப் பார்த்துக்கிட்டேன். இப்போ அம்மாவுக்குக் கொரோனா நெகட்டிவ்... நல்லாருக்காங்க” என்கிறார் நிறைவாக.

‘`அந்தச் சிறுவனைப் பார்த்தப்போ..!”

திருவான்மியூரில் வசிக்கும் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர். அப்பா அச்சகத்தில் கூலிவேலைக்குச் செல்ல, தம்பி பத்தாம் வகுப்பு படிக்கிறார். பலவீனமானவர்களைப் பற்றிக்கொள்ளும் கொரோனா அவர் தந்தையையும் பற்றிக்கொண்டது. ‘`அப்பாவை அரசு மருத்துவமனையில் அட்மிட் பண்ணினோம். சுகாதாரத் துறை என்னையும், அம்மா, தம்பியையும் குருநானக் கல்லூரி க்வாரன்டீன் சென்டருக்கு அனுப்பிட்டாங்க. அப்பாவை நினைச்சு ரொம்ப பயமா இருந்தது. ஆனா அதை வெளிக்காட்டினா அம்மா, தம்பி பயந்துடுவாங்கன்னு ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா’ன்னு அவங்களுக்கு தைரியம் கொடுத்துட்டே இருந்தேன். போன்ல பேசின அப்பா, ‘சீக்கிரம் குணமாகிடு வேன்டா’ன்னு சொல்லிட்டே இருந்தது ஆறுதலா இருந்தது. அப்பா சொன்னது போலவே பதினஞ்சு நாள்களில் குணமாகி வந்துட்டார். இப்போ நாங்க நாலு பேரும் ஹோம் க்வாரன்டீனில் இருக்கோம்.

அன்பும் தைரியமும்தான்
அந்த மருந்துகள்!

நமக்குப் பிரியமானவங்க நோயினால் கஷ்டப்படும்போது, அவங்ககூட இருக்க முடியாதது பெரிய வலி. கொரோனா வார்டில் அட்மிட் ஆகிற பல குடும்பங்களுக்கும் இந்த வலி தவிர்க்கமுடியாததா ஆகிடுது. அந்த மன அழுத்தத்தில் நான் இருந்தப்போ, சென்டரில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். என் தம்பியைவிடச் சின்னப்பையன். கூலி வேலைக்குப் போற அம்மா, அவன் ரெண்டு பேருமே கொரோனா பாசிட்டிவ்வாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக, அவன் சென்டருக்கு அனுப்பப்பட்டிருந்தான். தனியா அவன் அங்க இருந்ததைப் பார்த்தப்போ, என்னையறியாமல் அழுதுட்டேன். ஆனா, ‘நான் நல்லாருக்கேன்ப்பா, இங்க நிறைய பேர் இருக்காங்க பார்த்துக்க, நீங்க பத்திரமா இருங்க’ன்னு அந்தப் பையன் தன் பெற்றோருக்கு போன்ல தைரியம் சொன்னதைப் பார்த்தப்போ நெகிழ்ந்துட்டேன். நாங்க டிஸ்சார்ஜ் ஆன அன்று, ‘அம்மா குணமாயிடுச்சுண்ணா, நாளைக்கு வூட்டுக்குப் போய்டுவேன்’னு சொன்னான். இந்நேரம் அவனும் வீடு திரும்பியிருப்பான். அவனை ‘தனியா இருக்கானே’ன்னு நான் நினைக்க, ‘இங்க நிறைய பேர் கூட இருக்காங்க’ன்னு சொன்ன அந்தக் குட்டிப் பையனோட நேர்மறை எண்ணத்தை நானும் கத்துக்கிட்டேன். இந்தக் கோவிட் பேரலையில் நாமெல்லாம் கரைசேரத் தேவை... அந்த நேர்மறை எண்ணம்தான்!”

‘`அம்மாவை மீட்ட முக்கியமான மருந்து..!”

‘`நாங்க கூட்டுக்குடும்பம். வீட்டுல பசங்க, பேரப் பசங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. மே மாசம் எனக்கு லேசா காய்ச்சல் ஏற்பட்டுச்சி. கொரோனாவா இருக்குமோன்னு ஹாஸ்பிட்டல் போனப்போ டாக்டர்ஸ்லாம், ‘லேசான காய்ச்சல்தான், கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் இல்ல’ன்னு சொல்லி டெஸ்ட் பண்ணாம பாராசிட்டமால் மாத்திரை மட்டும் கொடுத்தாங்க. ‘வீட்டுல சின்னப் பசங்கல்லாம் இருக்காங்க, ஜாயின்ட் ஃபேமிலி வேற, ஒருவேள கொரோனாவா இருந்தா எல்லாருக்கும் பரவிடும்’னு டெஸ்ட் செய்யச் சொன்னோம். ரிசல்ட் பாசிட்டிவ்.

இதுக்கு முன் அனுபவித்திடாத ஒரு பயம் என்னைப் பிடிச்சிக்கிச்சு. என் சின்னப் பொண்ணு டாக்டர். அவ கொடுத்த நம்பிக்கையில தைரியமா இருந்தேன். ஆறு நாள்கள் ஹாஸ்பிட்டல் அட்மிஷன். குணமான பிறகு ஏழாவது நாள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வீட்டுல இப்போவரை என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். என் குடும்பம் கொடுத்த ஆறுதலும், மருத்துவமனையில டாக்டர்ஸ் கொடுத்த சிகிச்சை மற்றும் நம்பிக்கையாலயும்தான் கொரோனாவிலிருந்து என்னால சீக்கிரம் மீண்டு வர முடிஞ்சது’’ என்று சொல்லும் சென்னை, தி.நகரைச் சேர்ந்த பானுமதிக்கு வயது 52. ‘`கொரோனாவுக்கு மருந்தே இல்லைன்னு சொல்றாங்க. ஆனா, எங்க அம்மாவுக்கு ரொம்பக் கைகொடுத்து அவங்களை மீட்ட ஒரு முக்கியமான மருந்து இருக்கு. அது... அவரோட தைரியம்’’ என்கிறார்கள் பானுமதியின் குடும்பத்தினர்.

‘`யாரும் சொந்தமில்லை எண்டு நினைச்சிக்கொண்டிருந்தேன்..!”

முகப்பேரைச் சேர்ந்த ஹேமலதா உதயகுமாரின் அனுபவம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கிறது. இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த இவர் திருமணம் முடித்து சென்னையில் செட்டிலாகியிருக்கிறார். கணவரை கொரோனாவுக்கு பலிகொடுத்துவிட்ட இவருக்கு 10 வயதில், 8 வயதில், 6 வயதில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். “இங்கு நமக்கு யாரும் சொந்தமில்லை எண்டு நினைச்சிக்கொண்டிருந்தேன். ஆனால், கொரோனாவால் கணவர் இறந்த பிறகு இந்த ஏரியாவே எங்களுக்கு உதவி செய்கிறாங்க.

என் கணவருக்குக் காய்ச்சல் லேசாகத்தான் இருந்துச்சு. பக்கத்தில் இருக்கிற சுகாதாரத்துறை ஹோஸ்பிட்டலுக்கு அழைச்சுக்கொண்டு போனேன். பெரிதாக ஒண்டுமில்லையென்று சொல்லிவிட்டார்கள். சோர்வாக இருக்கிறதென்றார். பக்கத்தில் இருக்கிற ஹோஸ்பிட்டலுக்கு அழைச்சுக்கொண்டு போனேன். டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தோம். கொரோனா பாசிட்டிவ் எண்டு வந்தது. உடனே ஹோஸ்பிட்டலில் அட்மிட் செய்தேன். குழந்தைகளுடன் வீடியோ காலில் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தார். திடீரென்று எல்லாமே முடிந்துவிட்டது. குழந்தைகளுடன் என்ன செய்வதெண்டு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த எனக்கு எங்கள் ஏரியா கவுன்சிலர் உணவுப் பொருள்கள் எல்லாம் கொடுத்து உதவினார். ஏரியாவில் இருக்கிற மற்ற எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஒரு தொகை கொடுத்தார்கள். நான் வேண்டாமெண்டு சொல்லியும் அவர்கள் கேட்கல்ல. இப்போ என்னோட கவலையெல்லாம், அவர் ஆசைப்பட்டபடி பிள்ளைகளைப் படிப்பிக்க வேணும். அதற்குத்தான் என்ன செய்வதெண்டு தெரியவில்லை. நல்லவங்க இருக்கும்போது நிச்சயம் வழிகிடைக்கும்” என்கிறார், தன் பேரிழப்பில் தனக்கு நிழல் தந்திருக்கும் மனிதநேயம் மீது நம்பிக்கைகொண்டு.