Published:Updated:

"கண்ணாடியில் என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கும்!" - மனச்சிதைவுடன் சாதித்து வரும் ரேஷ்மா வள்ளியப்பன்

"என் காதில் கேட்கும் மாயக்குரலும் மனதில் விரியும் காட்சிகளும் சில நேரங்களில் இயல்பான வேலை செய்வதைத் தடை செய்யும். மனதில் தோன்றும் காட்சிகள் மூன்று நாளைக்கு மறதியை ஏற்படுத்தும். களைப்பு, மறதி என பல பிரச்னைகளைக் கொடுக்கும்."

mental health
mental health

உடல்நலப் பிரச்னைகளைப் போன்று மனநலப் பிரச்னைகளுக்கு ஆளானவர்களும் அவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். ஆனால், அந்தப் பிரச்னைகளுடனே வாழ்க்கையை நகர்த்துவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால், மனச்சிதைவு நோயுடனே (Schizophrenia) கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார் ஓவியக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான ரேஷ்மா வள்ளியப்பன்.

ரேஷ்மா வள்ளியப்பன்
ரேஷ்மா வள்ளியப்பன்

தன் 22 வயதில் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட ரேஷ்மா, இன்று தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறார். உலக மனநல தினத்தை முன்னிட்டு அவரைத் தொடர்புகொண்டோம். "மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்களே தனி உலகத்தில் இருப்பதுபோல் இருந்தாலும், நாங்களும் சாதாரண மனிதர்கள்தான்" என்கிறார்.

மலேசியாவைச் சேர்ந்த ரேஷ்மா தற்போது தன் தங்கையுடனும் செல்ல பூனைக்குட்டிகளுடனும் புனேயில் வாழ்ந்துவருகிறார். குழந்தைப் பருவத்தில் மரத்தில் ஏறுவதும் சுற்றிச் சுற்றி ஓடுவதுமாக துறுதுறுவென இருந்திருக்கிறார்.

mental health
mental health
pixabay

"நான் பிற குழந்தைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதை என் அப்பா பொறுத்துக்கொண்டார். அவருடைய ஜீன்தானே எனக்கும் உள்ளது. அவர் ஒரு கிரேஸி அப்பா. என் அப்பா ஒரு விஞ்ஞானி. என்னைப் புரிந்துகொண்டு செயல்பட்டார். அம்மாவுக்குத்தான் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ எனக்கு செய்வினைக் கோளாறு என்று நம்புவார்கள். பள்ளிக்குச் செல்லும்போது கத்தி எடுத்துச்செல்வேன். அதைக்கொண்டு மேஜையில் படங்களைச் செதுக்குவேன். என் பெயின்டிங் ஆர்வம் அங்கேயே ஆரம்பித்துவிட்டது. 15 வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டேன்" எனும் ரேஷ்மா, மனச்சிதைவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எப்படியிருந்தார் என்பதையும் விவரித்தார்.

"என் காதில் அடிக்கடி மாயக்குரல் கேட்பது, மனக்காட்சிகள் தோன்றுவது போன்றவற்றுக்குப் பயந்து, மது, போதைப் பொருள்களை எனக்கான மருந்துகளாகக் கருதி எடுத்துக்கொண்டேன். சில காலத்துக்குப் பின் மருத்துவர் மற்றும் அப்பாவின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

mental health
mental health
pixabay
`குழந்தை ஜனிக்கும்போது..!' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04

அதிக அளவு மருந்துகளை எடுத்ததால் அதன் மூலமாக பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன. சில நாள்களில் மருந்து சாப்பிடுவதை விட்டுவிட்டேன். நான் யாருக்கும் அடங்காதவள், யாரும் என்னைக் கட்டுப்படுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் அவ்வப்போது மருந்து எடுத்துக்கொள்வதை விட்டுவிடுவேன். இந்த நோயால் நான் இழந்தது ஏராளம். நண்பர்கள், உறவினர்களின் அன்பு எனக்குக் கிடைக்கவில்லை. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம் தோன்றும். சில சமயங்களில் கண்ணாடியில் என்னைப் பார்ப்பதற்கு எனக்கே பயமாக இருக்கும்.

ஆனால், ஒன்றை எதிர்க்க முடியவில்லை என்றால் அதோடு இணைந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டேன். மனச்சிதைவு நோயுடன் இணைந்துகொள்ள தீர்மானித்தேன். என் காதில் கேட்கும் ஒலிக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன். அந்தக் குரல் என்னை ஓவியம் வரையச் சொல்லியது. நானும் ஓவியம் வரைந்தேன். அப்போதுதான் எனக்குள் இருக்கும் திறமையை அறிந்துகொண்டேன்!

mental health
mental health

என் காதில் கேட்கும் மாயக்குரலும் மனதில் விரியும் காட்சிகளும் சில நேரங்களில் இயல்பான வேலை செய்வதைத் தடை செய்யும். மனதில் தோன்றும் காட்சிகள் மூன்று நாளைக்கு மறதியை ஏற்படுத்தும். களைப்பு, மறதி என பல பிரச்னைகளைக் கொடுக்கும். அதிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு வர சில நாள்கள் எடுக்கும். இசையைக் கேட்டும் ஓவியம் வரைந்தும் என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

எனக்குத் தூக்கம் முக்கியம். தூங்கவில்லை என்றால் இந்த நோய் என்னை உச்சநிலைக்குக் கொண்டுபோய்விடும். நான் தூங்க ஆரம்பித்த பிறகு செல்போனில் அழைத்தால், போனை தூக்கிப்போட்டு உடைக்கத் தோன்றும். அதனால் உறங்கச் செல்லும்போது படுக்கைக்கு செல்போனை எடுத்துச் செல்வதைப் பெரும்பாலும் தவிர்க்கிறேன். இப்போதெல்லாம் சற்று கூடுதல் நேரம் செல்போன், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் வலிப்பு வருகிறது" என்கிறார்.

mental health
mental health
pixabay
Vikatan

என்னைப் புரிந்துகொண்டு அனுசரணையாக இருக்கும் எழுபது வயதை நெருங்கும் என் அப்பா, குடும்பத்துக்காகப் பணம் தேட வேண்டி இந்தோனேசியாவில் வாழ்கிறார். அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்கிறேன்" என்று கூறும் ரேஷ்மா மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தச் சமூகம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

மனநோயாளிகளாக பாவித்து எங்களைத் தனிமைப்படுத்தக் கூடாது. எல்லா நேரமும் எங்களை மனச்சிதைவு நோயாளிகளாகப் பார்க்கக் கூடாது. பாதிப்பில் இருக்கும்போது எதிரில் இருப்பவர் பேசுவதுகூட எங்களுக்குப் புரியாது. மற்ற நேரங்களில் மிகச்சிறந்த மனிதர்களாகவே நாங்கள் செயல்படுவோம்.

ரேஷ்மா வள்ளியப்பன்
ரேஷ்மா வள்ளியப்பன்

`தி ரெட் டோர்' அமைப்பின் மூலம் தற்காப்பு கலையைக் கற்றுக்கொடுத்தல், மைம் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஓவியம் வரைதல், யோகா பயிற்சி அளித்தல், கருத்தரங்கில் பேசுதல் என்று பல விஷயங்களில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இயல்பான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கிறேன்" என்று கூறிய ரேஷ்மா, தன் நோயை அவர் எதிர்கொள்ளும் விதத்தை, "I hear voice because I am a good listener" என்ற ஒரே வரியில் வெளிப்படுத்தி நிறைவு செய்தார்.