Published:Updated:

`அந்த நம்பிக்கையால் மட்டுமே சாத்தியமானது!' - ஆர்.ஜே-வின் 8 நாள் கொரோனா போராட்டம் #SpreadPositivity

நித்யா கோபிநாத்
நித்யா கோபிநாத்

இவை எல்லாம் தொடர்ந்து நான் தனி அறையில் உட்கார்ந்து அனுபவித்தவை. ஆனால், தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

நான் நித்யா கோபிநாத். சேலம் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். தன்னம்பிக்கைப் பேச்சாளர். என்னுடைய சிறு கவனக்குறைவால் ஏற்பட்ட தொற்றுதான் அந்த எட்டு நாள்களின் போராட்டங்கள்.

ஒரு வாரத்துக்கு முன்பு லேசான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். நமக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தைவிட நம்மால் அடுத்தவருக்கு வரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியபோது இப்படிச் செய்தேன். 8 வயது மகன், 3 வயது மகளை உடனடியாக என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நானும் கணவரும் மட்டும் வீட்டில். நான் தனி அறையில். அடுத்து, என்னுடைய குடும்ப மருத்துவரைத் தொடர்புகொண்டு அறிகுறிகளைத் தெரிவித்ததும் மருத்துவமனைக்கு வரச் சொன்னார். அங்கு சென்று பரிசோதனை செய்தபோது கொரோனா ஆரம்ப அறிகுறி. நீங்கள் ஆரம்பத்திலேயே வந்தது மிகச் சிறப்பு என்றார்.

#SpreadPositivity
#SpreadPositivity
`கொரோனாவை விரட்ட தன்னம்பிக்கைதான் ரொம்ப முக்கியம்!' - அவள் வாசகியின் அனுபவ பகிர்வு #SpreadPositivity

ஆக்சிஜன் லெவல், பிரஷர் செக் செய்தார். நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதுதான் நல்லது. மாத்திரைகளை மட்டும் எழுதிக்கொடுக்கிறேன். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, நன்றாகத் தூங்க வேண்டும். இந்த நேரத்தில் மன அமைதி - தன்னம்பிக்கையோடு இருந்தால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றார். தினமும் ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் அளவு குறித்து தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நலம் விசாரித்துக்கொண்டே இருந்தார்.

ஒருநாள்கூட ஆக்சிஜன் அளவு 99-க்கு குறையவில்லை. ஆனால், எனக்கு அதிகப்படியான தலைவலி, வாந்தி, கண் எரிச்சல் இருந்தது. தொடர்ந்து மூன்று நாள்களாக சிறிதும் பயப்படாமல் அதிகமாக வெந்நீர் எடுத்துக்கொள்வது, ஆவி பிடிப்பது போன்ற விஷயங்களையும் வீட்டிலேயே செய்துகொண்டே இருந்தேன். அடுத்ததாக ஆரம்பித்த வலி... அதிகப்படியான தொண்டை வலி.

நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள் ஒன்றாகத் தொண்டையின் நடுப்பகுதியில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிமிடத்துக்கு நிமிடம் ஊசி போல குத்திக்கொண்டே இருந்த வேதனை, நரக வேதனை. எச்சில் விழுங்க முடியவில்லை. தண்ணீர் குடிக்க முடியவில்லை. நாக்கில் ருசி, வாசனை அறியும் தன்மையும் இல்லை.

இவை எல்லாம் தொடர்ந்து நான் தனி அறையில் உட்கார்ந்து அனுபவித்தவை. ஆனால், தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

தினமும் இரண்டு வேகவைத்த முட்டைகள். மூன்று வேளை வெந்நீர். நான்கு வேளை தேநீர். காலை, மதியம், இரவு சூடான உணவுகள். பச்சைப்பயறு, கொள்ளு அதிகமாக எடுத்துக் கொண்டேன். மிளகு சேர்த்த உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டேன். கீரை வகைகள், காய்கறிகள், காளான்களை பிடிக்கவில்லையென்றாலும் சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை வெந்நீரில் கல் உப்பு, மஞ்சள்தூள் போட்டு வாய் கொப்பளித்தேன்.

corona
corona
``நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்!" - `குக் வித் கோமாளி' அஷ்வின் #SpreadPositivity

நில வேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், இஞ்சி- எலுமிச்சை -தேன் கலந்த சாறு, இஞ்சி, மிளகு, சீரகம், கற்பூரவல்லி, வெற்றிலை, துளசி, புதினா இவற்றை நன்கு கொதிக்க வைத்து ஒரு நேர கசாயமாக எடுத்துக்கொண்டேன். கொதிக்க வைத்த பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் போட்டு ஒரு நாளைக்கு ஒரு நேரம் எடுத்துக்கொண்டேன். தினமும் துளசி இலைகளை காலையில் எழுந்தவுடன் உட்கொண்டேன்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மஞ்சள்தூள், கல் உப்பு, துளசி, வேப்பிலை, புதினா, வெற்றிலை, ஒரு கிராம்பு இவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது நான்கு முறை ஆவி பிடித்துக்கொண்டே இருந்தேன். மூச்சுப்பயிற்சியை அடிக்கடி செய்துகொண்டே இருந்தேன். ஆக்சிஜன் அளவை 99-க்கு கீழே குறைய விடவில்லை. இவற்றோடு சேர்ந்து மருத்துவர் கொடுத்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்து நன்கு சாப்பிட்டு நன்கு தூங்கி எழுந்தேன். எட்டு நாள்களில் தனி அறையில் இருந்தபோது எந்த ஒரு செய்தியையும் கேட்கவில்லை. மொபைல்போனை ஆஃப் செய்தேன். நான் தனிமையில் இருப்பது போல் உணரும் தருணங்களில் புத்தகம் வாசித்தேன். பாட்டு கேட்டு ரசித்தேன். நீ மீண்டு வருவாய், சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்று எனக்குள் கூறிக்கொண்டே இருந்தேன்.

எல்லாவற்றுக்கும் மேல் என் கணவர், ``உனக்கு ஒன்ணும் இல்ல. இன்னும் இரண்டு, மூன்று நாள்ல சரியாயிடும். உனக்கு ஒண்ணும் இல்ல... உனக்கு ஒண்ணும் இல்ல...' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நம்மால் 100 பேருக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடக்கணும். அதற்காகவாவது நாம் மீள வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை மட்டுமே நான் என்னுடைய மூளையில் புகுத்திக்கொண்டே இருந்தேன்.

மேலும், கொரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன் நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. எந்த உறவினர்களுக்கும் சொல்லவில்லை. சொன்னால், ஒவ்வொருவரும் அவர்களுடைய அக்கறைகளை நம்மீது திணிப்பதற்கும் அதே போல மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் ஏற்படும் என்பதற்காகக் கணவரும் சொல்லவில்லை.

Spread Positivity
Spread Positivity
`கலங்க ஒன்றுமில்லை; பாசிட்டிவாகவே கடக்கலாம்!' - கல்கி கவியரசுவின் கொரோனா அனுபவம் #SpreadPositivity

எட்டாம் நாள் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே நாங்கள் மருத்துவத்தை எடுக்க ஆரம்பித்த காரணத்தால் கொரோனா வைரஸ் தொண்டையிலே அழிந்து போய்விட்டது. கொரோனா நுரையீரலைத் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் சொல்லி ஆச்சர்யப்பட்டனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் மீண்டுவிட்டேன்.

அனைத்து மக்களிடமும் தன்னம்பிக்கை என்பது தற்போது இல்லாமல், பயம் என்ற ஒன்று மட்டுமே தொற்றிக் கொண்டிருக்கிறது. உங்கள் நண்பரோ, உறவினர்களோ யாரேனும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு நம்பிக்கையோடு தன்னம்பிக்கையோடு நீங்கள் உறுதுணையாக இருந்தால் அவர்கள் கொரோனாவை சுலபமாக வெல்வார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து இனி வரக்கூடிய நாள்களில் நம்பிக்கையான வார்த்தைகளை மட்டுமே பேசுவோம். நம்பிக்கையை மட்டுமே அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருப்போம். அன்பை கொடுப்பதுபோல நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே இருப்போம். பல உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும். கொரோனா வந்த இந்த நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

`எனது மரணம் உறுதி செய்யப்பட்ட ஒன்று, நான் வாழவே தீர்மானிக்கப்பட்டவள்' என்று கூறிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக நீங்களும் கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும்!

அடுத்த கட்டுரைக்கு