Published:Updated:

'வாரம் 3 முறை ட்ரெட் மில் செய்தால், மாதவிடாய் வலியைக் குறைக்கலாம்' - ஆய்வு முடிவு!

ஜெ.நிவேதா

மாதவிடாய்க்கால வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?

மாதவிடாய்
மாதவிடாய் ( Shutterstock )

மாதவிடாய்க் காலத்தில், அடிவயிற்றுவலியை எதிர்கொள்ளாத பெண்கள் மிகவும் குறைவு. ஏறத்தாழ 90 சதவிகிதப் பெண்கள் அந்தநேரத்தில் வலியை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. வலி காரணமாகவே மாதவிடாயையே பல பெண்கள் வெறுப்பார்கள்.

ஆறு மாதத்துக்கு ட்ரெட் மில் பயிற்சி செய்து வந்தால், 22 சதவிகிதம் மாதவிடாய்க்கால வலியைக் குறைக்கலாம்
ஆய்வு

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம் (Anglia Ruskin University) மாதவிடாயின்போது அடிவயிற்றில் வலி உண்டாகும் 70 பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆறு மாதம் நடைபெற்ற அந்த ஆய்வின் முடிவு இதுதான்...

`வாரத்தில் மூன்று முறை ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், ஆறு மாதம் கழித்து, தங்களது மாதவிடாய்க்கால அடிவயிற்றுவலியை 22 சதவிகிதம் குறைத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் வலி
மாதவிடாய் வலி
Shutterstock

அதேபோல் உடற்பயிற்சி செய்வது மாதவிடாய் பிரச்னைகளைக் குறைக்கும், குறிப்பாக ஏரோபிக் வகைப் பயிற்சிகளை ஆறுமாதம் மேற்கொள்ளும் பெண்கள், தங்களது மாதவிடாய்க்காலத்தில் மேற்கூறியதைவிட சில மடங்கு கூடுதலாக வலியை குறைத்துக் கொள்ளலாம்' என்பதே அந்த ஆய்வு முடிவு.

`அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்குக் காரணம், மாதவிடாயின்போது ஏற்படும் `புராஸ்டாக்ளான்டின்ஸ்' (Prostaglandins) என்ற ரசாயனம். அதைக் குறைப்பது `எண்டோர்பின்ஸ்' (endorphins) என்ற ரசாயனம். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, மாதவிடாயின்போது புராஸ்டாக்ளான்டின்ஸ் குறைந்து, எண்டோர்பின்ஸ் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால்தான் வலியும் குறைகிறது என்பது எங்களது கணிப்பு. என்றாலும், துல்லியமான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை' என ஆய்வாளர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி
Pixabay

ஆய்வுக்கு உட்பட்ட பெண்கள் அனைவரும் 18 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு அடிவயிற்றுப்பகுதியைச் சேர்ந்த உறுப்புகள் யாவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.