Published:Updated:

ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி!

கோவிட் – 19 - தடுப்பு
கோவிட் – 19 - தடுப்பு

ரஷ்யாவில் உள்ள 'கமாலய்' என்ற தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் கண்டுபிடிப்பான இந்தத் தடுப்பூசி மருந்துக்கான மனிதப் பரிசோதனைகள், ஜூன் 18 முதல் நடைபெற்று வருகின்றன.

கோவிட்-19 வைரஸுக்கு எதிராக உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தி ஆராயப்பட்டு, அது பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டிருப்பது, இவ்வாரத்துக்கான முதல் நம்பிக்கைச் செய்தியாக வந்து சேர்ந்திருக்கிறது.

corona virus
corona virus

பரிசோதனை ஆராய்ச்சி நடத்தப்பட்ட செக்கினோ ஃபர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் வடிம் டராசவு,``உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசிக்கான மனிதப் பரிசோதனை தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. ஆராய்ச்சியில் பங்கேற்ற முதற்கட்ட குழு தன்னார்வலர்கள் ஜூலை 15-ம் தேதியும், இரண்டாம் கட்ட குழு தன்னார்வலர்கள் ஜூலை 20-ம் தேதியும் வீட்டுக்கு அனுப்பப்படுவர்'' என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள 'கமாலய்' என்ற தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் கண்டுபிடிப்பான இந்தத் தடுப்பூசி மருந்துக்கான மனிதப் பரிசோதனைகள், ஜூன் 18 முதல் நடைபெற்று வருகின்றன.

Blood Test
Blood Test

பல்கலைக்கழகத்தின் ஒட்டுண்ணி, வெப்ப மண்டல நோய்கள், ஏந்துயிரி (Vector Borne) நோய்கள் மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் லுக்‌ஷவ்,``நடத்தப்பட்ட இந்தக் கட்ட ஆராய்ச்சியின் நோக்கம், மனிதர்களிடம் செலுத்துவதற்கு இம்மருந்து பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வதே. பாதுகாப்பானது என்று தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள மற்ற தடுப்பு மருந்துகளின் பாதுகாப்புக்கு இணையானதாக இது உள்ளது'' என்று கூறியுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

ரஷ்யாவின் இந்தத் தடுப்பு மருந்தின் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. ``இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் செக்கினோ பல்கலைக்கழகம் கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஆரம்பக்கட்டம் முதலே பங்கேற்று வருகிறது. தற்போது அது மனிதப் பரிசோதனைவரை எட்டியுள்ளது'' என்று கூறியிருக்கிறார், டராசவு.

File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
AP Photo/LM Otero, File

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ரஷ்யாவின் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து, உலகிலேயே முதன் முதலாகப் மனிதப் பரிசோதனையில் பாதுகாப்பு என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கொரோனா கொள்ளைநோய் முடிவுக்கான நல்ல தொடக்கமாக அமையட்டும்!

அடுத்த கட்டுரைக்கு