Published:Updated:

பயணங்களில் கொரோனா தாக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் விளக்கம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வெளியில் பயணம் மேற்கொள்பவர்கள், சுயசுத்தம் பேணிக்கொள்ளுதலே இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் முக்கிய வழி.

ன்னம்பிக்கையும் வலுவான மனமும் இருந்தால் எத்தகைய இடரிலிருந்தும் எவரும் மீளலாம்; தற்காத்துக்கொள்ளலாம். இது நாட்டுக்கும் தனிநபருக்கும் பொருந்தும். நாடென்பதே தனிநபர்களின் கூட்டமைப்புதானே. தனக்குமுன் யாரும், எதுவும் பெரியதன்று என்பதை மனிதனுக்கு அவ்வப்போது இயற்கை உணர்த்திவிட்டுச் செல்லும். அப்படியொன்றுதான் தற்போது நேர்ந்துகொண்டிருக்கிறது. கொடிய வைரஸின் பிடியிலிருந்து உலகநாடுகள் சீக்கிரம் மீளட்டும். சரி, இனி கட்டுரைக்குள்...

பயணம்
பயணம்
திருப்பதி, சபரிமலை, ஷீர்டி கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கைகளும்!

சுற்றிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்தச் சூழலில் நம் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக அமைத்துக்கொள்வது, பயணங்களின்போது என்ன செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பனவற்றைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. பொதுவான தூய்மை பேணுதலிலிருந்து இன்னும் கொஞ்சம் அதிகம் சிரத்தையெடுத்துக்கொள்ளவேண்டும், அவ்வளவே. இதைப் பற்றிக் கூறுகிறார், பொது மருத்துவர் அருணாச்சலம்.

"வெளியில் பயணம் மேற்கொள்பவர்கள் சுயசுத்தம் பேணிக்கொள்ளுதலே இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் முக்கிய வழி. வைரஸ் கிருமிகள் கைகள் மூலமாகப் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, எங்கு சென்றாலும் முடிந்தவரையிலும் சானிடைஸர்களை உடன் எடுத்துச் செல்வது அவசியம்.

கை சுத்திகரிப்பு
கை சுத்திகரிப்பு

அடிக்கடி கைகழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சானிடைஸர் பயன்படுத்தாமலேயே கைகளால் முகத்தின் பாகங்களைத் தொடக்கூடாது. சளி, காய்ச்சல் இருந்தால் கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்திட வேண்டும்.

கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்தும் தவறுகள்! #VikatanPhotoCards

பேருந்து, ரயில் என எதில் பயணித்தாலும் அவற்றின் கம்பிகளையோ கைப்பிடிகளையோ தொட்டிருப்போம். அதன்மூலமும் பரவுகிற தன்மை இந்த வைரஸுக்கு உள்ளது. எனவே, நீண்ட பயணத்தின்போது அடிக்கடி கைகழுவிக் கொள்வதும், குறுகிய பயணமெனில் சேருமிடத்தை அடைந்ததும் நன்கு கைகளைச் சுத்தம் செய்தலும் மிகவும் அவசியம்.

வெளியிடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களைத் தவிர்த்திட வேண்டும். பயணத்தில், விற்கப்படுவதை அவசரகதியில் வாங்கிச் சாப்பிட வேண்டாம். அப்படிச் சாப்பிடுவதென்றாலும் கை, வாய் சுத்தம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும். முடிந்தளவு, பொது வண்டிகளில் பயணித்துக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்த்தல் நல்லது.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை... தவிர்க்கமுடியாத பயணங்களுக்கு ஒரு கைடு!

இந்த வைரஸ் தாக்குதல் காலத்தில் விமானப் பயணம்தான் அதீத ரிஸ்க்கை ஏற்படுத்தக் கூடியது. அதனால், சில வாரங்களுக்கு விமானப் பயணங்களைத் தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத பயணமெனில் கைவசம் மாஸ்க், சானிடைஸர் உள்ளிட்டவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விமானப் பயணங்களிலும் சென்றடைகிற இடத்திலும் யாரிடமும் நெருங்கி நிற்க வேண்டாம். சில அடிகள் இடைவெளி விட்டு நின்று பேச வேண்டும். கைகுலுக்குவதில் தொடங்கி பிறரைத் தொட்டுப் பேசுவது வரை எல்லாவற்றையுமே தவிர்க்க வேண்டும். விமானங்களில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் பயணிப்பார்கள் என்பதால் கவனக்குறைவாக இருத்தல் வேண்டாம்.

விமானம்
விமானம்

வாகன ஓட்டிகள் ஸ்டீயரிங் உள்ளிட்டவற்றைத் தொடுவதற்கு முன்னரும், டிரைவிங்குக்குப் பிறகும் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். இடை இடையேயும் சானிடைஸர் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சத்துகள் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை கொரோனா வைரஸ் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்பு குறைவு. பயணப்படுவோர் பல்வேறு மனிதர்களையும் பல்வேறு சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அவற்றைத் தவிர்க்க முடியாது என்றாலும் தற்காத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகள்
குழந்தைகள்

முக்கியமான ஒன்றைப் பொது ஒழுக்கமாகக் கடைப்பிடித்தல் அவசியம். பொதுவெளியில், எப்போதுமே இருமல் தும்மலின்போது இரண்டு கைகளை இறுகப் பிடித்து மூக்கு, வாய் இரண்டையும் நன்கு மூடிக்கொள்ள வேண்டும். முடியாவிட்டால், முழங்கையை மடித்து வாயை மூடி இருமிக் கொள்ள வேண்டும். இது சுய சுத்தம், பொது சுத்தம் இரண்டாகவும் அமைகிறது. எனவே, இதை இந்த நிமிடத்திலிருந்தே கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கும் இவற்றைக் கற்றுத் தர வேண்டும்" என்றார் மருத்துவர் அருணாச்சலம்.

அடுத்த கட்டுரைக்கு